மணிப்பூர் போலி என்கவுண்டர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
இந்திய பாதுகாப்பு படையினரால் போலி என்கவுண்டர்கள் மூலம் மணிப்பூரைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த சிபிஐ அமைப்பிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணைக்காக அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரத்யேகக் குழுவை சிபிஐ அமைக்க வேண்டும் எனவும் வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு தசாப்தங்களாக மணிப்பூர் மாநிலம் வன்முறை கிளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட சட்ட விரோதக் கொலைகளை போலி என்கவுண்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிகழ்த்தியது என அந்த மாநிலத்தின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்திய பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற படுகொலைகளில் இந்திய ராணுவம், அசாம் ரைபிள் படைப்பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த கொலைகளுக்கான தடயங்களை சேகரிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, இந்த போலி என்கவுண்டர்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஏ.ஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள்
- கங்னம் ஸ்டைலை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்ற `சீ யு எகைன் '
- மருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசாணை ரத்து
- மின்னஞ்சலையும் உயிலாக அங்கீகரிக்க விரைவில் புதிய சட்டம்
- லியு ஷியாவ்போ மரணம்: சர்வதேச விமர்சனங்களை நிராகரிக்கும் சீனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












