இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் 20 பாதுகாப்பு படையிர் கொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்கியதில் குறைந்தது 20 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தியப் பாதுகாப்புப் படையினர்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, இந்தியப் பாதுகாப்புப் படையினர்

மாநிலத்தின் தலைநகர் இம்ஃபாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனத் தொடரணி ஒன்றை இலக்கு வைத்து, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆர் பி ஜி எறிகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட மிகவும் மோசமானத் தாக்குதல் இதுவே.

மியான்மாரின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மணிப்பூரில் இந்திய அரச படைகளுக்கு எதிராக பல டஜன் கிளர்ச்சிக் குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன.

நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, மணிப்பூர் உட்பட அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் மிகக் குறைந்த அளவே வளர்ச்சியடைந்துள்ளன என்றும், தாங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்துள்ளனர் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இதுவே அந்தப் பகுதிகளில் அமைதியின்மை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது என்றும் செய்தியளர்கள் மேலும் தெரிவிக்கிறார்கள்.