யு டியூபில் பிரபலமாக நினைத்து விபரீத செயலில் ஈடுபட்ட அமெரிக்க தம்பதியர்

பட மூலாதாரம், Youtube
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில், தனது சமூக ஊடகப் பக்கத்திற்கு அதிக ரசிகர்களை வரவழைக்க, பெண் ஒருவர், தனது ஆண் நண்பரை விளையாட்டாக சுட முயன்று அது விபரீதமாகப் போனது.
மின்னெசோட்டாவை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பரை சுட்டு கொன்றதற்காக அவர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகம் ஒன்றுக்காக செய்யப்பட்ட நிகழ்வு தவறாக போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 வயதுடைய மோனாலிஸா பெரெஸ், பெட்ரோ ரூயிஸ் என்பவரை சுட்டதையடுத்து, உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெட்ரோ ரூயிஸ் தனது நெஞ்சை புத்தகம் ஒன்றை வைத்து மறைத்துக் கொள்ள, அவர் மீது சுட்டால், குண்டு புத்தகத்தை தாண்டி அவரது நெஞ்சைத் துளைக்காது என்று தவறாக அவர் எண்ணியிருந்தாராம்.
பெட்ரோ ரூயிஸின் மார்பில் மோனாலிஸா துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொன்ற அந்த தருணத்தை அவர்களது 3 வயது குழந்தையும், சுமார் 30 பார்வையாளர்களும் நேரில் கண்டனர்.

பட மூலாதாரம், The Handout
சமூக ஊடகங்களில் தங்களை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இதில் ஈடுபட்டதாக ரூயிஸின் உறவினர் தெரிவித்துள்ளார்.
''ரூயிஸ் இந்த யோசனையைப்பற்றி என்னிடம் கூறிய போது நான், 'வேண்டாம். தயவு செய்து செய்யாதே. ஏன் துப்பாக்கியை பயன்படுத்துகிறாய்? எதற்கு, என்றேன்'' என தொலைக்காட்சி செய்தி நிறுவனத்திடம் அவரது அத்தை கிளாடியா ரூயிஸ் தெரிவித்துள்ளார்.
''இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்,'' என்றார் அவர். ''இச்சம்பவம் தவறாக முடிந்த ஒரு குறும்பு சம்பவம்.'' என்றார் அவர்.
கர்ப்பமாக இருக்கும் மோனாலிஸா பெரெஸ் தற்போது இரண்டாம் நிலை திட்டமிடாத ஆட்கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். வரும் புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்காக முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகிறார் அவர்.

பட மூலாதாரம், Twitter
உள்ளூர் கவுண்ட்டி ( county) வழக்கறிஞர் ஜேம்ஸ் ப்ரூ ரூயிஸ் மார்பில் வைத்திருந்த புத்தகம், கடினமான மேல் அட்டை கொண்ட என்சைக்ளோபீடியா என்றும், சம்பவத்தின் போது சுடப்பட்ட துப்பாக்கி .50 கெலிபர் டெஸர்ட் ஈகிள் கைத்துப்பாக்கி என்றும் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து போலீஸார் இரு கேமிராக்களை கைப்பற்றியுள்ளனர். அதில், இந்த திங்கட்கிழமை நடைபெற்ற சம்பவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு அடி தூர இடைவெளியிலிருந்து துப்பாக்கியிலிருந்து குண்டு ஒன்று சுடப்பட்டுள்ளது. அந்நேரம், தம்பதியரின் இந்த ஆபத்து விளையாட்டை காண அண்டை வீட்டிலிருந்து பலர் தம்பதியரின் மின்னெசோட்டா வீட்டிற்கு வெளியே கூடியிருந்தனர்.
இந்த நிகழ்வு ரூயிஸின் யோசனை என்றும், இதனை செய்ய ரூயிஸ் தன்னை இணங்க வைத்தார் என்றும் மோனாலிஸா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பு சமூக ஊடகமான ட்விட்டரில் தான் எடுக்கப்போகும் இந்த முயற்சி பற்றி தனக்கிருக்கும் கவலைகளை மோனாலிஸா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












