டிரம்பின் பயணத்தடை மீதான இடைக்காலத் தடையின் ஒரு பகுதி நீக்கம்; உச்சநீதின்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையின் ஒரு பகுதியை அமெரிக்க உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
அதேபோல், அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையின் ஒரு பகுதியை அமல்படுத்த அனுமதிக்கக் கோரி, வெள்ளை மாளிகை விடுத்த அவசர வேண்டுகோளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சில முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான அதிபர் டிரம்பின் தடையாணை கொள்கை செல்லுபடியாக இல்லையா என்பது குறித்து அக்டோபர் மாதம் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அதிபரின் உத்தரவின்படி, 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்களும், அகதிகள் வருகைக்கு 120 நாட்களும் தடை விதிக்கப்பட வேண்டும்.
திங்கள்கிழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "நடைமுறை ரீதியாக, அமெரிக்காவில் உள்ள தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் முறையான உறவு அல்லது தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு எதிராக அதிபரின் உத்தரவை அமல்படுத்த முடியாது என்பதுதான் இதன் பொருள்" என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுடன் தொடர்பே இல்லாத வெளிநாட்டவர்களின் வருகையைத் தடுக்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை தங்களால் ஏற்க முடியவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிபர் பிறப்பித்த தடையாணை பாரபட்சமானது என்று கூறி, ஹவாய் மற்றும் மேரிலேண்ட் நீதிமன்றங்களின் மத்திய நீதிபதிகள் தடைவிதித்த பிறகு, அந்தக் கொள்கை முடங்கிப் போனது.
மார்ச் 6-ஆம் தேதி, திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகளை அதிபர் டிரம்ப் வெளியிட்ட நிலையில், கீழ் நீதிமன்றங்கள் அதற்கு எதிராகத் தீர்ப்பளித்தன.

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 27-ஆம் தேதி வெளியிட்ட டிரம்பின் முதல் உத்தரவு, அமெரிக்க விமான நிலையங்களில் பெரும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது.
`டிரம்புக்கு வெற்றி'
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, டொனால்ட் டிரம்புக்குக் கிடைத்த வெற்றி என்று வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ஏண்டனி ஜுர்செர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் குடும்பம், பள்ளி, வேலை உள்பட எதாவது ஒரு வகையில் தொடர்பு இருந்தால்தான், குடியேறிகளாக இருந்தாலும், அகதிகளாக இருந்தாலும் உள்ளே அனுமதி கிடைக்கும்.
தேசியப் பாதுகாப்பைப் பொருத்தவரை, உரிய முடிவெடுக்க அதிபருக்கு நீதிமன்றங்கள் பாரம்பரியமாக வழங்கியிருக்கும் அதிகாரத்தை இந்த உத்தரவு உறுதிப்படுத்துவதாகப் பார்க்கலாம்.
"தேசியப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டிய கட்டாயத் தேவையில் அரசாங்கம் இருக்கிறது" என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த அக்டோபரில், இருதரப்பு வாதங்களையும் கேட்க நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. ஆனால், அப்போது இதற்கான தேவை இருக்குமா எனத் தெரியாது. ஏனென்றால், குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்து, புதிய வழிகாட்டு முறைகளைகளை உருவாக்குவதற்கு மூன்று மாத காலம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













