விண்வெளித்துறையில் இந்தியாவின் கூடுதல் பங்களிப்பு ஏன்? 4 முக்கிய காரணங்கள்
640 டன்கள் எடை கொண்ட மற்றும் 3000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாங்கிய, அதிக எடை கொண்ட ராக்கெட் ஏவப்பட்ட நாளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ `` வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்`` என்று வர்ணித்துள்ளது.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைISRO
`ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்தி வாய்ந்த ராக்கெட்டாகும். மேலும், இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.
நாட்டின் அதிகாரபூர்வ வறுமைக் கோட்டை விட கீழ்நிலையில் இந்திய மக்கள்தொகையில் ஏறக்குறைய கால்வாசி பேர் வாழ்ந்துவரும் நிலையில், விண்வெளித் திட்டங்களில் பணம் செலவழித்து வருதாக இந்தியா மீது அடிக்கடி குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
விண்வெளித் திட்டங்கள் தொடர்பாக இந்தியா ஏன் இத்தனை ஆர்வமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து விளக்குகிறார் பிபிசி தமிழின் சிவராமகிருஷ்ணன்
இது மலிவானது
சர்வதேச அளவுகோல்கள்படி பார்த்தால், தங்களின் விண்வெளித் திட்டத்துக்கான செலவு மிகவும் அதிகமில்லை என்று இந்தியா வாதிடுகிறது. இந்த ராக்கெட்டை செலுத்த 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.
தற்போது ஏவப்பட்ட இந்த ராக்கெட்டுக்கு 10 ஆண்டுகள் ஆயுள்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஓவ்வொரு ஆண்டும் இதனை இயக்குவதற்கு தேவையான செலவு குறைவதால், தங்களின் விண்வெளித் திட்டத்துக்கான செலவு மிகவும் மலிவானது என இந்திய விண்வெளித்துறை வாதிடுகிறது.

பட மூலாதாரம், ISRO
விஞ்ஞான ஆய்வுக்காக, குறிப்பாக விண்வெளித்துறை ஆய்வுக்காக தொடர்ச்சியாக தங்களின் பட்ஜெட்டில் கூடுதல் நிதியை இந்தியா ஒதுக்கீடு செய்து வருகிறது. உண்மையில், அறிவியல் வளர்ச்சி தொடர்பாக போதுமான நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை என்று தங்களின் மீது கூறப்படும் விமர்சனத்துக்கு பதில்கூறும் வகையில் செய்யப்பட்டவைதான் விண்வெளித்துறையில் இந்தியா செய்த பாதிக்கும் மேலான நிதி ஒதுக்கீடுகள்.
விண்வெளித்துறையில் கூடுதல் பங்களிப்பு
தற்போது கூடுதலான லாபகரமாக உள்ள செயற்கைக்கோள் ஏவும் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர்கள் செலவாகும் விண்வெளித்துறையில், ஏறக்குறைய 75 சதவீதம் அளவு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதலீடு செய்து அத்தொழிலை தங்கள் பிடியில் வைத்துள்ளன.
தற்போது இத்துறையில் தன்னாலும் முதலீடு செய்து வர்த்தகம் செய்யமுடியும் என்று இந்தியா நம்புகிறது.
செய்கோள் சங்கத்தின் கூற்றுப்படி பல பில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க இத்துறையில் இந்தியாவின் பங்கு அரை சதவீதத்துக்கு சற்று கூடுதலாக மட்டுமே உள்ளது. அதேவேளையில், சீனாவின் பங்கு மூன்று சதவீதம் உள்ளது.

பட மூலாதாரம், ISRO
கடந்த காலங்களில் இந்தியாவின் செயற்கைக்கோள் ஏவும் திட்டங்கள், செயற்கைக்கோள் ஏவும் வாகனம் தொடர்பான பிரச்சனைகளால் வாடிக்கையாளர்களைக் கவரவில்லை. இதனால் தங்களின் செயற்கைக்கோளை ஏவுவதற்கு பிரான்ஸை இந்தியா பெரிதும் சார்ந்திருந்தது.
ஆனால், இவையெல்லாம் கடந்த கால விஷயங்களாகிவிட்டது.
விண்வெளிச் சந்தையை மாற்றுவது
பெரும்பான்மையான வானிலை மற்றும் தகவல்தொடர்பு தொடர்பான செயற்கைக்கோள்கள் ஏறக்குறைய 4 டன்கள் எடை கொண்டவை. இவற்றை ஏவுவதற்கு மிக பிரம்மாண்டமான ராக்கெட் ஒன்று தேவையாகும்.
இந்த அண்மைய ராக்கெட் ஏவுதல் திட்டம் மூலம் குறைந்த செலவிலான மாற்று வழி ஒன்றுக்கு வாய்ப்புள்ளது என்ற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு இந்தியா தெரிவித்துள்ளது.

அண்மையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு அளவுகளிலான 104 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக ஏவி விண்வெளித்துறையில் தனது நம்பகத்தன்மையை இந்தியா அதிகரித்தது.
செயற்கைக்கோள் உருவாக்கம், ஏவுதல் மற்றும் அவற்றுக்கும் விண்வெளி மையத்துக்கும் உள்ள தொடர்பை பராமரிப்பது உள்ளிட்டவை அடங்கிய சர்வதேச செயற்கைக்கோள் மார்க்கெட், 120 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானது. தகவல் தொடர்பின் தேவை அதிகரிப்பால் அண்மைய ஆண்டுகளில் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
குறைந்த செலவுகளால், வளர்ந்து வரும் செயற்கைக்கோள் ஏவும் துறையில் இந்தியா ஒரு முக்கிய மையமாக மாறக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றவர்களை ஊக்குவிக்கும் முயற்சி
இன்னமும் விரிவான சமூக வளர்ச்சி இல்லாத இந்தியா, விஞ்ஞான வளர்ச்சித்துறையில் பெரும் பணம் செலவழிப்பதன் காரணம் குறித்து விமர்சகர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர், தடையில்லாத மின்சாரம், கழிப்பறை வசதிகள், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதி போன்றவை இன்னமும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், ISRO
ஆனால், தொடர்ச்சியாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் பணம் முதலீடு செய்வது மற்றும் செலவழிப்பது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு வித்திடும் என்று வாதிடுகின்றன.
தங்களது அண்மைய ராக்கெட் ஏவுதல் செயல்பாட்டின் மூலம், தங்களின் ராக்கெட் மற்றும் ஏவுகணை நிறுவுதல் திட்டங்களுக்கு மேற்கத்திய நாடுகளை விட வளரும் நாடுகள் தங்களை பயன்படுத்திக் கொள்ளும் என்று இந்தியா நம்புகிறது.
விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தங்களின் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வெள்ளி ( வீனஸ்) கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












