You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மயில்சாமி: கிருபானந்த வாரியார் முதல் காமெடி டைம் வரை
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி, 1980களில் இருந்து தமிழ் நகைச்சுவை ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர். தமிழ்த் திரையில் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் இயல்பான நகைச்சுவைக்குச் சொந்தக்காரர்.
1980களில் ஆடியோ கேசட்கள் மிகப் பிரபலமாக இருந்த தருணம். சினிமா பாடல்கள், சினிமா வசனங்கள் தவிர மிக அரிதாகவே வேறு உள்ளடக்கங்கள் பிரபலமாக முடியும் என்று இருந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், திடீரென பல டீக்கடைகளிலும் ஆடியோ கேசட் பதிவுசெய்து தரும் கடைகளிலும் புதிதாக சில குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
அவை மயில்சாமி மற்றும் லக்ஷ்மணின் (ஸ்ருதி) குரல்கள். கேசட் ஆரம்பிக்கும்போதே அதகளம்தான். 'நிலா அது வானத்து மேலே' என்ற பாடலுக்கு கிருபானந்த வாரியார் பொழிப்புரை வழங்குவதுபோல ஆரம்பிக்கும். வாரியார் குரலில் மிமிக்ரி செய்து கலக்கியிருப்பார் மயில்சாமி.
வாரியார் மட்டுமல்ல, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, ரஜினி, நம்பியார் என பல நட்சத்திரங்களின் குரல்களில் கலக்கியிருப்பார்கள். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரேடியோ நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவை கூட இருவரது குரலில் கேலிக்குள்ளாகி பார்வையாளர்களை சிரிக்க வைக்கும்.
தெருக்குத்தெரு இந்தக் கேசட்கள் ஒலித்தாலும் இந்த குரல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து அந்த காலகட்டத்தில் பெரிதாக யாரும் கவலைப்படவில்லை.
சினிமாவை விட்டுவிட்டால் தூர்தர்ஷனும் அகில இந்திய வானொலியும்தான் பொழுதுபோக்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில், சற்றே குள்ளமாக, கன்னத்து எலும்புகள் தெரிய ஒடுங்கிப்போன முகத்துடன் இருந்த மயில்சாமியின் உருவம் பிரபலமாகாததில் பெரிய ஆச்சரியமில்லை.
ஆனால், சொந்த ஊரான சத்தியமங்கலத்தில் தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு, ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நிகழ்த்த ஆரம்பித்ததில்தான் அவருடைய காமெடி டைம் துவங்கியது.
ஈரோடு மாவட்டத்திற்கு வெளியே அவ்வப்போது வாய்ப்புகள் இந்தக் குழுவினருக்கு கிடைத்தன. இதற்கு நடுவில்தான் 'சிரிப்போ சிரிப்பு' என்ற அந்த கேசட் வெளியாகி தமிழ்நாட்டையே சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது.
18 வயதிலிருந்தே சினிமாவில் நுழைய முயற்சி செய்தாலும் தாவணிக் கனவுகள், கன்னிராசி, என் தங்கச்சி படிச்சவ போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவர் போன்ற சின்னச்சின்ன பாத்திரங்களே கிடைத்தன. அவருக்குக் கிடைத்த பெரிய பிரேக் என்றால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படம்தான். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் நண்பராக வந்த இவரை, பலரும் கவனித்தார்கள்.
இவரது மேனரிசங்கள் பிடித்துப்போனதில், அடுத்தடுத்த படங்களான வெற்றிவிழா, மைக்கல் மதன காமராஜன் ஆகிய படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்தார் கமல். இதற்கு நடுவில் ரஜினியின் பணக்காரனிலும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால், திரையுலகிற்குள் கவனிக்கப்பட ஆரம்பித்தார் மயில்சாமி.
90களில் ஆரம்பத்தில் இயக்குனர் பி. வாசு இயக்கும் படங்களில் தவறாமல் ஒரு இடம் மயில்சாமிக்கு இருக்கும். செந்தமிழ்ப் பாட்டு, உழைப்பாளி, உடன்பிறப்பு, வால்டர் வெற்றிவேல் என வாசுவின் படங்களில் தொடர்ந்து நடித்த மயில்சாமி கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களால் கவனிக்கப்பட ஆரம்பித்தார்.
இந்த காலகட்டத்தில் கவுண்டமணி - செந்திலின் நகைச்சுவை யுகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. வடிவேலுவும் விவேக்கும் தங்களுக்கென ஒரு குழு, தங்களுக்கென ஒரு பாணி என முன்னேறிக்கொண்டிருந்தார்கள். பல குரல்களில் பேசுவது, முகபாவனைகளில் அசத்துவது ஆகவற்றையே தனது பலமாகக் கொண்டிருந்த மயில்சாமியின் வெற்றிப்பயணம் அவ்வளவு வேகமானதாக இல்லை. ஆனாலும், வரும் காட்சிகளில் புன்னகைக்கவைத்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளில் நன்றாக அறியப்படும் நபராகவும் உருவெடுத்தார். அதில் ஒரு சில படங்களில் முக்கிய பாத்திரமாகவும் விளங்கினார் மயில்சாமி.
- பிரபாகரன் மரணம்: இதற்கு முன் எத்தனை சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டுள்ளது?
- அஜித் தோவலின் வெளிநாடு பயணம் பாகிஸ்தானில் அதிகம் விவாதிக்கப்படுவது ஏன்?
- "நான் அன்று தப்பவில்லை எனில் இன்று உயிரோடு இருந்திருக்கமாட்டேன்" - ரஷ்ய பெண் பத்திரிகையாளர்பகாசூரன் படம் பெண்கள் சுதந்திரத்தை விமர்சிக்கிறதா- - சமூக ஊடகங்களில் எழுந்த விவாதம்
பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில், விவேக் தூய தமிழில் பேச, அதனை சென்னைத் தமிழில் மொழிபெயர்ப்பார் மயில்சாமி. அந்தக் காட்சிக்கு திரையரங்கு பார்வையாளர்கள் குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.
அதேபோல பாளையத்தம்மன் படத்தில் சிவசங்கர் பாபாவைப் போல நடித்து, யாகவா முனிவரைப் போல வரும் விவேக்குடன் விவாதிக்கும் காட்சியும் ரசிகர்கள் மனதில் பதிந்தன.
இதற்கு நடுவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி டைம் என்ற பெயரில் நேயர்களுடன் தொலைபேசியில் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் மயில்சாமி. தமிழ்த் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளின் வரிசையில் அந்த நிகழ்ச்சிக்கு இப்போதும் ஒரு இடம் இருக்கிறது.
இதற்குப் பிறகு, விவேக், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்தும் தனியாகவும் நினைவுகூரத்தக்க வகையில் பல திரைப்படங்களை நடித்திருக்கிறார் அவர்.
விவேக்கும் வடிவேலுவும் நகைச்சுவை ராஜாங்கத்தையே நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில், வேறு ஒரு நகைச்சுவை நடிகர் தமிழ்த் திரையில் தனித்துத் தெரிவதென்பது மிக கடினமான ஒரு காரியம்.
அந்த காலகட்டத்தில் ஒருவர் நகைச்சுவை நடிகராக இருக்க விரும்பினால், வடிவேலு அல்லது விவேக்கின் குழுவில் இருந்தாக வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு தனித்த மிமிக்ரி குரலாக ஒலித்தது மயில்சாமியின் நடிப்பு.
மயில்சாமியின் நகைச்சுவை என்பது, வடிவேலுவைப் போன்ற ஒரு கிராமத்து அப்பாவியின் நகைச்சுவை அல்ல. விவேக்கைப் போல கருத்துகளை முன்வைத்து செய்யும் நகைச்சுவையும் அல்ல. மாறாக, நாம் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் வித்தியாசமான மனிதர்கள், பித்தலாட்டக்காரர்கள், வெட்டி பந்தாகாரர்களை அவர் தனது இயல்பான உடல்மொழியில் துல்லியமாக பிரதிபலித்தார்.
அவருடைய இறப்பிற்குப் பிறகு, அவரைப்பற்றி சக நடிகர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் புகழஞ்சலிகளையும் பார்க்கும்போது, அவர் தாம் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முற்றிலும் மாறான ஆன்மிக ஈடுபாடு கொண்ட, எளியவர் மற்றும் பிறர் துயரைத் துடைப்பதில் ஆர்வம்கொண்டவராகப் புலப்படுகிறார்.
இவ்விதமாக தமிழ்த் திரையுலகிலும் தமிழ்ச் சமூக மனதிலும் ஒரு மறக்கமுடியாத முத்திரையையும் நிரப்ப முடியாத ஒரு இடத்தையும் விட்டுச்சென்றிருக்கிறார் மயில்சாமி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்