You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சொல்கிறதா 'பகாசூரன்' படம்? - மோகன் ஜி பதில்
தமிழில் வெளியான பகாசூரன் படம் குறித்து சமூக ஊடகங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ஜியின் முந்தைய படங்களில் சாதி சார்ந்த பார்வை வெளிப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பகாசூரன் படம் குறித்தும் பல பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், "பகாசூரன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை விமர்சிக்கும் பலர் படத்தைப் பார்த்திருக்கவே மாட்டார்கள்," என்று இயக்குநர் மோகன் ஜி பிபிசியிடம் பேசியபோது கூறினார்.
பகாசூரன் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பதிவிட்டுள்ளார்.
டிவிட்டரில் பகாசூரன் படம் குறித்து தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள பயனர் ஒருவர், "பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது. அதில் புகைப்படங்களை பதிவிடுவது குற்றம் நடக்கக் காரணமாக அமைகிறது. அதனால் பெண்கள் மொபைல் போனே பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது பூமர் தனம்," என்று விமர்சனம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று படம் எடுத்திருக்கும் நிலையில், இந்தப் படத்தைப் பார்க்க எப்படி வெளியே வருவார்கள் என்று பகடியாகப் பதிவிட்டுள்ளார்.
"பகாசூரன் படம் அல்ல பாடம், நவீன யுகத்தில் மொபைல் போன் மற்றும் தவறான நட்பின் மூலம் மாணவிகள் சீரழியும் போக்கை படம் விவரிக்கிறது," என பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறையின் பிரதிபலிப்பாக வந்துள்ள பகாசூரன் ஒரு விழிப்புணர்வு படம், என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"பொண்ணுங்க வேலைக்குப் போனா பாலியல் தொழிலில் ஈடுபடுவாங்கனு படத்துல சொல்லிட்டு, அடுத்த 10 நிமிசத்துல ஐடெம் டான்ஸ் வச்சு இருக்குப்பா" என விமர்சித்து ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
குடும்ப கௌரவத்தை பெண்களின் கால்களில் வைத்துவிட்டு ஊர் சுற்றும் ஆண்கள், பெண்களுக்கு அறிவுரை கூறுவது போல படமெடுத்து வைத்திருக்கிறார்கள் என பகாசூரன் படத்தை விமர்சித்து பயனர் ஒருவர் எழுதியுள்ளார்.
"பொண்ணுக படிக்கறதுக்காக வெளியூருக்கு போனா அந்த ஊரோட கௌரவமே கெட்டுப் போயிரும்னு அயலில வீரப்பண்ணை என ஒரு கிராமத்தை காட்டியிருந்தாங்க; அதே கிராமத்துலர்ந்து வெளியேறின ஒரு ஆண் வெளியூருக்குப் போய் ஒரு சினிமா எடுத்தா அது எப்படி இருக்குமோ அப்படி இருக்காம் பகாசூரன்" என்று மற்றொரு பயனர் பதவிட்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது தந்தையிடம் கதாநாயகி சொல்வது விழிப்புணர்வாகத் தெரியவில்லையா என டிவிட்டரில் விமர்சனங்களுக்குப் பதிலளித்து ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தற்போது தான் பெண்கள் துணிவாக வெளியே சொல்கின்றனர். அதைத் தடுத்து மீண்டும் 40 வருடம் பின்னோக்கிச் செல்லும்படி பகாசூரன் படம் வந்துள்ளது என இந்தப் படம் குறித்து பாலமுருகன் என்ற பயனர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
"பெண்களுக்கு அறிவுரை சொல்லும் பத்தாம் பசலித்தனமான திரைப்படம்" என்று ஒருவர் பகாசூரன் படம் குறித்து விமர்சனம் முன்வைத்துள்ளார்.
திரைப்பட விமர்சகர்களுக்கு இது போரடிக்கும் சாதாரண படம். ஆனால் ரசிகர்களுக்குப் படம் விருந்தாக அமைந்துள்ளது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"அயராத உழைப்பிற்கும் , புதிய முயற்சிகளுக்கும் என்றும் தோள் கொடுக்கும் ரசிகர்களுக்குக் கோடான கோடி நன்றிகள்," என இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.
ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு நன்றி என பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.
படம் பார்க்காமல் விமர்சனம்
"பகாசூரன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்தை அறிந்து வருகிறேன். படம் பார்க்கும் மக்கள் அனைவரும் படத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர்," என்று இந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ஜி பிபிசியிடம் பேசினார்.
படம் குறித்து வைக்கப்படும் விமர்சங்கள் குறித்து பதிலளித்த அவர், தனது முந்தைய படங்களை வைத்து தன் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அதில் பலர் இன்னும் படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
பகாசூரன் படத்தில் பேசும் கருத்து ஒன்றாகவும் அதற்கு எதிர்மறையாக 'ஐடெம் டான்ஸ்' இருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் மீம்ஸ் குறித்து பேசிய அவர், "அது ஐடெம் சாங் கிடையாது. அது படத்தில் வரும் ஒரு பாடல். அந்தப் பாடலில் நடனமாடும் நாயகிக்கு கதையில் முக்கிய கதாபாத்திரம் உள்ளது. அதுவும் ஒரு விழிப்புணர்வுக்காகத் தான் வைக்கப்பட்டுள்ளது," என்று மோகன் ஜி பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்