You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் மயில்சாமி காலமானார்: மிமிக்ரி, காமெடி, மேடை நாடகம் என பல முகம் கொண்ட ஆளுமை
தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்துள்ள நடிகர் மயில்சாமி, இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மயில்சாமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக மயில்சாமி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்தத் தகவலை மயில்சாமியின் மகனான அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி ஆகிய இருவரும் நடிகர்களாக உள்ளனர்.
மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மயில்சாமியின் சினிமா பயணம்
மேடை நாடகக் கலைஞராக இருந்து, சினிமாவுக்குள் நுழைந்தவர் மயில்சாமி. தமிழில் தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
நடிகர் கமல்ஹாசனின் நண்பராக அபூர்வ சகோதரர்கள் படத்தில் பின்னர் நடித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் சிறிய காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி.
நடிகர் விவேக்குடன் இவர் நடித்த படங்கள் பரவலாக இவருக்கு புகழை பெற்றுத் தந்தன.
விக்ரம் கதாநாயகனாக நடித்த தூள் படத்தில் விவேக் - மயில்சாமி கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் இவருக்குப் புகழை சேர்த்தன. அந்தப் படத்தில் விவேக்கை ஏமாற்றி திருப்பதியில் ஜிலேபியை பிரசாதமாகக் கொடுத்தார்கள் என விவேக்கிடம் கூறும் காட்சியில் நடித்து மயில்சாமி புகழ்பெற்றார்.
போலி சாமியார் வேடத்தில் விவேக்குடன் சேர்ந்து தொலைக்காட்சி நேர்காணலில் சேட்டை செய்வது போல நடித்த காட்சிகளும் பிரபலமானது.
வடிவேலுவுடன் இணைந்து தவசி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மயில்சாமி.
தற்போது பல திரைப்படங்களில் மயில்சாமி நடித்து வந்த நிலையில், இறுதியாக சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்திருந்த 'கிளாஸ்மேட்' படத்தின் டப்பிங் பணியைக்கூட முடித்துவிட்டு வந்தார்.
பன்முக திறமைகள் கொண்ட மயில்சாமி
காமெடி நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி மேடை நாடகம், மிமிக்ரி கலைஞர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டிருந்தார் நடிகர் மயில்சாமி. நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் மிமிக்ரி செய்யும் கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.
பல்வேறு படங்களின் இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சிகளில் பல நடிகர்களைப் போல மிமிக்ரி செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் மயில்சாமி.
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மயில்சாமி. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ள மயில்சாமி, காமெடி டைம், மர்மதேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.
அரசியல் களம்
சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் கால்தடம் பதித்திருந்த மயில்சாமி, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் இந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
அரசியல் மட்டுமின்றி, சமூக சேவையிலும் தன்னைப் பல நேரங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர் மயில்சாமி. அவரின் உதவும் குணம் பற்றி பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் ஒருமுறை மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"தமிழ்நாட்டில் சுனாமி பாதிக்கப்பட்ட காலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் தனது கழுத்தில் மாட்டியிருந்த தங்கச் சங்கிலியில் இருந்த எம்.ஜி.ஆர். டாலரை கொடுத்து உதவி செய்ய வைத்துகொள்ளச் சொன்னவர்" என விவேக் அப்போது குறிப்பிட்டார்.
சென்னையில் மயில்சாமி வசிக்கும் விருகம்பாக்கம் பகுதியில், கொரோனா காலத்தின்போது மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து வந்தார்.
பிரபலங்கள் இரங்கல்
மயில்சாமியின் மறைவுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் "என் நண்பர் மயில்சாமியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது," என நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
"உங்கள் நகைச்சுவை என்றும் நினைவில் நிற்கும்" என நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
"கட்சி எல்லைகளைக் கடந்து என்னுடன் நட்பு பாராட்டியவர் மயில்சாமி" என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட மயில்சாமி, விவேக் மறைந்தபோது அவரது உடல் அடக்கம் செய்யும் வரை அனைத்து வேலைகளையும் முன் நின்று கவனித்து வந்தார்.
தற்போது மயில்சாமியின் மறைவையடுத்து நடிகர் விவேக் சொர்க்கத்திற்கு அவரை அழைப்பது போல மீம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
"நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் மயில்சாமி" என்று நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்