வசந்த முல்லை சினிமா விமர்சனம்: தூக்கத்தின் அவசியத்தை சொல்ல முயன்று ரசிகர்களை தூங்க வைத்துவிட்டதா?

வசந்த முல்லை சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter/VasanthaMullai

ஜிகர்தண்டா, சூது கவ்வும், பேட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் பாபி சிம்ஹா, ஹீரோவாக நடித்துள்ள வசந்த முல்லை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வசந்த முல்லை படத்தின் கதைச் சுருக்கம் என்ன?

தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான ருத்ரன்(பாபி சிம்ஹா) தொடர் வேலைப்பளுவால் தூக்கத்தை இழக்கிறார். மருத்துவரின் அறிவுறுத்தலையடுத்து பணியில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு, தனது காதலியான நிலாவோடு(காஷ்மீரா) 'வசந்த முல்லை' என்ற ஹோட்டலில் தங்குகிறார்.

அங்கு தங்கும்போது அவரது காதலி திடீரென காணாமல் போகிறார். அவர் காணாமல் போவதைத் தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. பாபி சிம்ஹாவுக்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் டைம் லூப்பில் நடக்கிறது. இதிலிருந்து எப்படி மீண்டு, தனது காதலியைக் கண்டுபிடித்து, தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னையில் இருந்து பாபி சிம்ஹா எப்படி மீள்கிறார் என்பது மீதிக் கதை.

சிம்பு நடித்து வெளியாகியிருந்த மாநாடு படத்தில் வரும் டைம் லூப் போல இந்தப் படத்திலும் வருகிறது. இயக்குநர் அதை திரில்லராக கொண்டு செல்ல முயன்று படத்தை எடுத்திருக்கிறார். கேமியோ கதாபாத்திரத்தில் வரும் ஆர்யா, சர்ப்ரைஸாக வந்து செல்கிறார்.

'தனி ஒருவன்' பாபி சிம்ஹா

தூக்கமின்மை, மன அழுத்தம், தொலைந்த காதலி, டைம் லூப் சிக்கல் எனப் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக வரும் பாபி சிம்ஹா, வசந்த முல்லையை தனது தோளில் தூக்கி தனி நபராகச் சுமந்து இருக்கிறார் என்று இந்து தமிழ் திசை விமர்சனம் எழுதியுள்ளது.

பாபி சிம்ஹா கதைக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார் என்று மாலைமலர் இணையதளம் விமர்சனம் வழங்கியுள்ளது.

படத்தை தனி ஒருவனாக நின்று பாபி சிம்ஹா காப்பாற்றுகிறார். காஷ்மீரா உடனான காதல் காட்சிகளில் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் எழுதியுள்ளது.

ஐ.டி. ஊழியர் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா பொருத்தமாக நடித்திருக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, போகப்போக ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் பாபி சிம்ஹா நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை என தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கி இருக்கிறது.

வசந்த முல்லை சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter/VasanthaMullai

கவனத்தை ஈர்க்கும் காஷ்மீரா

பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் கதாநாயகியாக வரும் காஷ்மீரா கவனிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என மாலைமலர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அழகுடன் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சிகளுக்கும் 'ருத்ரா, ருத்ரா' என அழுது கொண்டே காதலனை தேடும் காட்சிகளுக்கும் காஷ்மீரா பயன்பட்டிருக்கிறார் என்று இந்து தமிழ் திசை எழுதியுள்ளது.

காஷ்மீரா தனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்துள்ளார் என்று இந்தியா டுடே இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

ஆர்யாவின் வருகை கைகொடுக்கிறதா?

வசந்த முல்லை படத்தில் பாபி சிம்ஹாவை தவிர அறிந்த முகமாக ஆர்யா வருகிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் அவர், தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார் என்று மாலைமலர் இணையதளம் எழுதியுள்ளது.

வசந்த முல்லை சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter/VasanthaMullai

படத்தில் நடிப்பை வெளிப்படுத்த ஆர்யாவுக்கு வாய்ப்பு இல்லாதபோதும், தனது பங்கை சிறப்பாகச் செய்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

தூக்கம் ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதைத் தனக்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்தில் மக்களுக்குப் புரிய வைக்க ஆர்யா முயற்சி செய்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

'சார்பட்டா பரம்பரை' படத்தின் கெட்டப்புடன் வந்து நடித்துக் கொடுத்திருக்கும் ஆர்யாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை என்றாலும் கொடுத்த சிறப்புத் தோற்றத்தில் நட்புக்காக வந்து செல்கிறார் என்று இந்து தமிழ் திசை எழுதியிருக்கிறது.

இசை - ஒளிப்பதிவு எப்படி இருக்கிறது?

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்குத் தேவையான பங்களிப்பைச் செலுத்துகின்றன என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கொடுத்துள்ளது.

வசந்த முல்லை சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter/VasanthaMullai

"வசந்த முல்லை படத்தில் வரும் பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருக்கிறது," என மாலைமலர் குறிப்பிட்டுள்ளது.

பின்னணி இசையும், இரவு நேரக் காட்சிகளின் ஒளிப்பதிவும் பரபரப்பையும், திகிலையும் தருவதாக தினமலர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

"ஒவ்வொரு காட்சிகளுக்கும் இசையமைப்பாளர் தனது இசையால் தாக்கங்களை ஏற்படுத்துகிறார். ஆனால் மந்தமான திரைக்கதை அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது," என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

படம் எப்படி இருக்கிறது?

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா ஆங்கில படத்திலிருந்து கிடைத்த உத்வேகத்துடன் டைம் லூப் படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார். "ஆரம்பத்தில் சுவாரசியமாக அமைந்தாலும், படத்தை 2 முறை பார்த்த உணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. டைம் லூப் தொடங்கும் வரை பார்வையாளர்கள் பொறுமையுடன் கதையைத் தேட வேண்டியிருக்கிறது," என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கொடுத்துள்ளது.

ஆங்கிலப் படத்தை நினைவு கூறும் விதமாக உள்ள இப்படத்தை டைம் லூப் கதையாகக் கொண்டு சென்று இறுதியில் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் சுவாரஸ்யமாக இயக்குநர் முடித்துள்ளார் என்று மாலை மலர் இணையதளம் அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

வசந்த முல்லை சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter/VasanthaMullai

"இரண்டாவது பாதியில் மாநாடு படம் போல டைம் லூப் ஐடியாவுடன் கதை பயணிக்கத் தொடங்குவதாக நினைக்கத் தொடங்கும்போது, படத்தின் வேகம் அப்படியே குறைந்துவிட்டது. கதையில் வரும் தேவையில்லாத திருப்பங்கள், படத்திற்கு பாதிப்பாக அமைகின்றன. நல்ல கதை, ஒரு நல்ல திரைப்படமாக மாறிவிட முடியாது என்பதற்கு மிகச் சரியான சான்றாக வசந்த முல்லை படம் இருக்கிறது," என்று இந்தியா டுடே தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

"தொழில்நுட்பரீதியாக படம் சுமாராக இருக்கிறது. இது மோசமான திரில்லர் படமில்லை, ஆனால் முழுமையாக இந்தப் படம் உங்களைக் கவர முடியாத வகையில் இருக்கிறது," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் எழுதியிருக்கிறது.

"டைம் லூப் மூலம் கதையைச் சொல்லத் தொடங்கிய இயக்குநர், திரில்லர் பாணியில் சொல்லாமல் வேறு பாணியில் சொல்லியிருந்தால் படம் சுவராஸ்மாக இருந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. ஆனால் வாழ்க்கையில் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியிருப்பதைப் பாராட்ட வேண்டும்" என்று தினமலர் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

"தூங்கி எழ அலாரம் வைக்குறோம்... நம்மில் யாராச்சும் சரியான நேரத்துல தூங்குறதுக்கு அலாரம் வைக்கிறோமா?" என்ற வசனம் கூட்டும் அழுத்தத்தை, திரைக்கதையும் சேர்த்து கூட்டியிருந்தால் படம் முழுமையடைந்து இருக்கும் என இந்து தமிழ் திசை அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்