You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்: இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்போது?
- எழுதியவர், மது பால்
- பதவி, பிபிசி இந்தி
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா - நடிகை கியாரா அத்வானி இருவருக்கும் இன்று (பிப். 07) திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.
அவர்களுடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சித்தார்த் - கியாரா திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பிருந்தே திரை பிரபலங்கள், இருவருடைய குடும்பத்தினர், ஊடகத்தினர் ஜெய்சல்மருக்கு சென்றுள்ளனர்.
இருவரின் திருமணமும் இன்று நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவர்களுடைய காதல் கதை குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
சித்தார்த் - கியாரா முதன்முறை சந்தித்தது எப்போது?
2018ஆம் ஆண்டு. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ்' எனும் குறும்படங்களின் தொகுப்பில் கியாரா அத்வானியும் நடிகர் விக்கி கௌஷலும் இணைந்து நடித்தனர்.
அதற்காக நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில்தான் இருவரும் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டனர். அதற்கு முன்பு இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. இந்த நிகழ்வு குறித்து 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கியாரா அத்வானி கூறினார்.
"லஸ்ட் ஸ்டோரிஸ் தொடர்பாக நடைபெற்ற 'பார்ட்டி'யில்தான் முதன்முறையாக நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம். அதை என்னால் மறக்க முடியாது" என கியாரா அத்வானி அந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருவரும் பலமுறை ஒன்றாகப் பல இடங்களில் தோன்றினர்.
2019ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சித்தார்த் - கியாரா தனித்தனியாக எடுத்த புகைப்படங்களை இருவரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தனர். அந்தப் புகைப்படங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தென்னாப்பிரிக்கா சென்றபோது எடுக்கப்பட்டவை.
இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிரவில்லை என்றாலும், தனித்தனியாகப் பதிவிடப்பட்ட புகைப்படங்களை வைத்து இருவரும் விடுமுறைக்கு ஒன்றாகவே தென்னாப்பிரிக்கா சென்றதாக இருவருடைய ரசிகர்களும் கூறி வந்தனர்.
ஆனால், இதுகுறித்து கியாராவும் சித்தார்த்தும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சித்தார்த் - கியாரா காதல் கதை
கியாரா - சித்தார்த் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் கூறிக்கொண்டதில்லை. இந்தக் கேள்வியை இருவரிடமும் முன்வைத்தால், முதலில் இருவரும் வெட்கப்படுவார்கள், பின்னர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.
இருவரும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் சில முறை பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சித்தார்த் தனக்கு நண்பரைவிட மேலானவர் என்று கியாரா கூறினார்.
சித்தார்த்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, "திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த வாழ்க்கை கியாராவுடன் இருந்தால் சிறப்பாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.
இருவரும் கபில் ஷர்மா நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் கியாராவுடன் கபில் ஷர்மா நகைச்சுவையாகப் பேசுவதைப் பார்த்து சித்தார்த் பொறாமைப்படுவது தெளிவாகத் தெரிந்தது. மேலும், கியாராவுக்கு கபில் 'அண்ணன்' என்றும் கூறியிருந்தார் சித்தார்த்.
"நான் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் மது அருந்துவதில்லை என்பதால் என் குடும்பத்தினர் என் மீது கோபம் கொண்டுள்ளனர். படப்பிடிப்புகளில் கியாரா உடன் இருக்கும்போது எனக்கு மதுவின் தேவை ஏற்படவில்லை," என சித்தார்த் ஒருமுறை கூறியுள்ளார்.
இந்தப் பதிலால் கியாரா அதிர்ச்சியடைந்தார்.
'ஷேர்ஷா' திரைப்படம்
2021ஆம் ஆண்டில் வெளியான 'ஷேர்ஷா' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இருவருக்கும் (நெருக்கம்) அதிகரித்தது.
படம் வெளியானபோது இந்த ஜோடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் பலவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
2021ஆம் ஆண்டு இருவருடைய பெற்றோரும் சந்தித்துக்கொண்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
பிரிட்டிஷ் - இந்திய நடிகரான சயீத் ஜஃப்ரீ, கியாராவின் தாத்தா முறை ஆவார். மேலும், மறைந்த பாலிவுட் நடிகர் அசோக் குமார் இவருடைய தொலைதூர உறவினர். கியாராவின் முதல் திரைப்படமான 'ஃபக்லி' 2014ஆம் ஆண்டு வெளியானது. கியாரா அத்வானி 'தோனி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
சித்தார்த் மல்ஹோத்ராவின் குடும்பத்தினர் டெல்லியில் வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்த சித்தார்த், பின்னர் 'ஹசீ தோ பசீ', 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.
பிரபலங்கள் பங்கேற்பு
கியாரா - சித்தார்த் திருமணத்தில் ஷாஹித் கபூர், மிரா ராஜ்புட், கரண் ஜோஹர், மனீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்திற்குப் பல்வேறு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஷாருக்கானின் மெய்க்காப்பாளர்ட் யாசின், இவர்களுடைய திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்.
அதிகரிக்கும் நடிகர் - நடிகை திருமணங்கள்
தங்களுடன் இணைந்து நடிப்பவர்களை திருமணம் செய்துகொள்வது திரைத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
மூத்த பத்திரிகையாளர் பாரதி துபே இதுகுறித்துக் கூறுகையில், "பிரபலமான ஜோடிகள் திருமணம் செய்துகொள்கின்றனர். இந்தப் போக்கு இப்போது அதிகரித்துள்ளது உண்மைதான். இதற்கு சமூக ஊடகங்கள் முக்கியக் காரணமாக இருக்கிறது.
சமூக ஊடகங்கள் தான் அவர்களை பிரபலமாக்குகின்றன. திருமணத்திற்குப் பிறகு தங்களின் புகழ் குறைந்துவிடுவதாக இப்போது நடிகர், நடிகைகள் நினைப்பதில்லை. மக்களுக்கும் அதுகுறித்துக் கவலை இல்லை," எனத் தெரிவித்தார்.
மேலும், "அவர்களுடைய திரைப்படங்களை ரசித்ததுபோன்றே, நடிகர் - நடிகைகளை நிஜத்திலும் மக்கள் ரசிக்கின்றனர். தங்களுக்குப் பிடித்த ஜோடிகளின் படங்கள் தொடர்பான வீடியோக்களை வைரலாக்குகின்றனர். அதனால் 'ரீல்' ஜோடிகள், நிஜத்திலும் வலுவான காதலர்களாக உள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்தப் போக்கு 90களில் இருந்தது இல்லை. திருமணத்திற்குப் பிறகு புகழ் குறைந்துவிடுமோ எனக் கருதி பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துள்ளனர்.
மேலும், தங்களின் திருமணம் - காதல் வாழ்க்கையை மறைத்தும் வைத்துள்ளனர். தற்போது இந்தப் போக்கு பாலிவுட்டில் மாறியுள்ளதாக பாரதி தெரிவித்தார்.
"தற்போது பாலிவுட் பிரபலங்கள் தங்களின் திருமணத்திற்குப் பிறகு பெரிய பிராண்டுகளிலிருந்து விளம்பர வாய்ப்புகளை இணைந்தே பெறுகின்றனர். தீபிகா படுகோன் - ரன்வீர் சிங், விராட் கோலி - அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல், சைஃப் அலிகான் - கரீனா கபூர் உள்ளிட்ட ஜோடிகள் சேர்ந்தே பல பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களில் தோன்றுகின்றனர்," எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்