இந்தியாவில் அனைத்து மத பெண்களுக்கும் திருமண வயது சமமாக இருக்க வேண்டுமா?

    • எழுதியவர், சுசீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மசோதா தற்போது நிலைக்குழுவின் விவாதத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனைத்து மதப் பெண்களின் திருமண வயதையும் சமமாக நிர்ணயிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் (NCW) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில், ஒவ்வொரு சமூகம் மற்றும் மதத்தைச் சேர்ந்த பெண்களின் திருமண வயதையும் 18 ஆக உயர்த்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் பதில் கோரியுள்ளது.

இந்த மனு குறித்து, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா பிபிசி ஹிந்தியிடம், “உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. அதில் 15 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை நீதிமன்றம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது” என்றார்.

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை அடிப்படையாக வைத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மைனர் முஸ்லிம் பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து வாழ்வதற்கான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கோரினர்.

முஸ்லிம் சட்டம் என்ன கூறுகிறது?

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் கமல் ஃபரூக்கி பிபிசி ஹிந்தியுடனான உரையாடலில், இஸ்லாம் ஒரு இயற்கையான மதம், அதாவது அனைத்து விஷயங்களும் இயற்கையோடு தொடர்புடையது, அதன் அடிப்படையிலேயே மதமும் அனுமதிக்கிறது என்று கூறுகிறார்.

ஆணும் பெண்ணும் பருவமடைந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் அதை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் அதை ஊக்குவிக்கிறது என்று அர்த்தமல்ல.

இதனுடன், ஆண்களும் பெண்களும் முதிர்ச்சியடையும் வரை திருமணம் செய்யக்கூடாது என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது, ஆனால் திருமணம் நடந்துவிட்டால், பெற்றோரால் எதுவும் செய்ய முடியாது.

இன்னும் பல மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்கிறார் கமால் ஃபரூக்கி. அத்தகைய சூழ்நிலையில், ஒரு குடும்பம் வசதியற்றிருந்தால், வறுமையின் காரணமாகத் தனது பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினால், அதில் என்ன ஆட்சேபனை எழக்கூடும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

“ஒருவர் அப்படித் திருமணம் செய்து கொண்டு, பெண்ணை நன்றாக வைத்திருக்கிறார் என்றால், அதில் என்ன தவறு? இந்தியாவில் பல பழங்குடி சமூகங்கள் மற்றும் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதால் இஸ்லாத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயல் சரியல்ல” என்பது அவர் கருத்து.

ஆனால் ரேகா ஷர்மா இந்த வாதத்தை ஏற்கவில்லை. "இப்போதெல்லாம் பத்து வயது சிறுமி கூட பருவமடைகிறாள். மாதவிடாய் வருகிறது, எனவே பத்து வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துவிடலாமா? என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், அவர்களின் உடல்நிலை, கல்வி குறித்தும் கவலை தெரிவிக்கிறார்.

இதனுடன், போக்சோ சட்டத்தின் பிரச்னையையும் அவர் எழுப்புகிறார்.

நீதிமன்றத்தை எந்தவொரு கருத்தியலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று அரசியலமைப்பு நிபுணர் பேராசிரியர் ஃபைஸான் முஸ்தபா கருதுகிறார்.

இஸ்லாத்தின் பல்வேறு விளக்கங்கள்

திருமண வயதை அதிகரிக்க அரசாங்கம் முடிவெடுத்து, இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இருக்கும்போது, நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, பாராளுமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அனைத்து சமூகத்தினருக்கும் திருமண வயது குறித்து நாடாளுமன்றம் சட்டம் கொண்டு வரும். மேலும், இது தனிநபர் சட்டத்தின் அடிப்படையில் இருக்காது, மாறாக இந்தச் சட்டம் நாடு முழுவதும் பொருந்தும்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள முஸ்லிம் சட்டம் பல்வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளது என்கிறார் ஃபைஸான் முஸ்தபா.

அவரைப் பொறுத்தவரை, “முஸ்லிம் சட்டத்தின்படி, பாரம்பரிய சிந்தனை கொண்டவர்களின் பார்வையில், மாதவிடாய் வந்த பிறகு ஒரு பெண் திருமணத்திற்குத் தகுதியானவளாகக் கருதப்படுகிறாள். மறுபுறம், முற்போக்கு எண்ணம் கொண்ட பிரிவினர், ஒரு பெண் மனரீதியாக முதிர்ச்சியடையும் போது மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள். மேலும் ஒரு பெண் மனநிலையில் முதிர்ச்சியடைந்தவரா இல்லையா என்பதை மதம் தீர்மானிக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் என்றும், திருமணத்திற்கு முன்பே இருவரிடமும் சம்மதம் வாங்கப்படுவதாகவும், இது ஒரு வகையில் முற்போக்கானதாகக் கருதப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் சோனாலி கட்வாசரா கூறுகிறார்.

"ஆனால் இங்கே சம்மதம் என்பது வயது வந்தோருடையதாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவமடைந்து விடுவதால் அந்த வயதில் சம்மதம் தெரிவிக்கும் புரிதல் அவர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். எனவேதான் இது தொடர்பாகச் சரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அது சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதி மன்றத்தின் மூலமாகவோ” என்கிறார் அவர்.

பல்வேறு மதங்களில் திருமண வயது

இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, பெண்ணின் வயது 18 ஆகவும், ஆணிண் வயது 21 ஆகவும் இருக்க வேண்டும்.

1872 இல் இயற்றப்பட்ட இந்தியக் கிறிஸ்தவத் திருமணச் சட்டத்தின்படி, திருமணத்திற்கு ஆண் 21 வயதுக்குக் குறையாமலும், பெண் 18 வயதுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் 1936 இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரிவு 3ன் படி, பையனின் வயது 21 ஆகவும், பெண்ணின் வயது 18 ஆகவும் இருந்தால் மட்டுமே பார்சி திருமணம் செல்லுபடியாகும்.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் ஒரு ஜோடி திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இந்தச் சட்டத்தின் 4வது பிரிவின்படி, ஆணிண் வயது 21 ஆகவும், பெண்ணின் வயது 18 ஆகவும் இருக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கக் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 கொண்டு வரப்பட்டது.

POCSO சட்டம் 2012 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது மற்றும் அது 18 வயதுக்குட்பட்ட ஒரு நபரை 'சிறார்' என வரையறுக்கிறது.

ரேகா ஷர்மா கூறுகையில், "இது பெண் குழந்தைகளின் நலன் சார்ந்த பிரச்னை, அவர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே வேறுபட்டு நிற்க முடியாது. முகமதியச் சட்டம் நாட்டின் சட்டத்தை விட மேலானதாக இருக்க முடியாது. 18 வயது வரை வாக்களிக்கும் உரிமையை நீங்கள் கொடுக்கவில்லை ஆனால் அவளுக்கு எப்படி திருமணம் செய்யும் உரிமையை கொடுக்கிறீர்கள்?

ஒரு மைனர் பெண் திருமணம் செய்து கொண்டால், அவள் இளம் வயதிலேயே தாயாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அவரது வளர்ச்சி, ஆரோக்கியம் மட்டுமல்ல, மனநலமும் பாதிக்கப்படுகிறது.” என்று விளக்குகிறார்.

போக்சோ சட்டத்துடன் இணைப்பது சரியா?

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் கூறுகையில், “இந்த விவகாரம் சட்டப்பிரச்னை மட்டுமல்ல, சமூகப் பிரச்னையும் கூட. மேலும், இதுபோன்ற வழக்குகளை போக்சோவுடன் இணைக்கக் கூடாது” என்றும் குறிப்பிட்டார்.

அவர், "இந்திய சமூகத்தில் பல பழங்குடி சாதிகள் உள்ளன, அங்கு 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் நடக்கின்றன, அந்தத் திருமணங்களின் கதி என்ன? கடந்த பத்தாண்டுகளில், ஊடகங்கள் அல்லது சட்டம் தொடர்பான மனுக்கள் என்று அனைத்தையும் மதத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் போக்கு நிலவுகிறது.

மேலும், முஸ்லிம் சட்டத்தின்படி, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்த பிறகு, அவள் திருமணத்திற்குத் தகுதி பெறுகிறாள். அத்தகைய சூழ்நிலையில், அவள் உடல் ரீதியாக முதிர்ச்சியடைந்த நிலையில், அவள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்பது ஒரு பிரச்னை. இது தொடர்பாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதை, வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் எடுத்துக்காட்டுகிறார்.

“ஒருமித்த கருத்தை எட்டிய பல வழக்குகள் உள்ளன, அதில் வன்கொடுமை வழக்குகள் உள்ளன, அவற்றில் தண்டனை பெற்றதும் உண்டு, விடுபட்டதும் உண்டு என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் அதனை மீளாய்வு செய்ய வேண்டும் என்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன்." என்று ஷம்ஷாத் கூறுகிறார்.

போக்சோவில் காதல் உறவைச் சேர்ப்பது குறித்து கவலை தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்சோ சட்டத்தின் கீழ் சம்மதம் தெரிவிக்கும் வயது குறித்த விவாதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், போக்சோ சட்டம் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இடையேயான பாலியல் செயல்பாடுகளைக் குற்றமாக கருதுகிறது என்று அவர் கூறினார்.

பெண் குழந்தைகளின் திருமண வயதை 18லிருந்து உயர்த்துவது குறித்து இளைஞர்களிடம் பேசியபோது, ஆண், பெண் வயது அதிகரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஒப்புக்கொண்டதாக ஜெயா ஜெட்லி கூறுகிறார்.

இது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் தலைவராக அவர் இருந்து வருகிறார். நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜெயா ஜெட்லி வலியுறுத்தினார்.

“நாட்டில் ஒரு சட்டம் இருந்தால், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சட்டங்கள் இருக்காது, பிரிவு இருக்காது. ஆனால், நாம் இளைஞர்களுடன் இதைப் பற்றி விவாதிக்கவில்லை. ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து வெளிவர வேண்டும், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்றால், ஆண் ஆதிக்கச் சமூகத்தில் என்ன சட்டங்கள் இருந்தாலும், தனிப்பட்ட சட்டங்களாக இருந்தாலும், அவை அகற்றப்பட வேண்டும், ஒரு ஆரம்பம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் இது பொருந்தும்.” என்கிறார் அவர்.

கமால் ஃபரூக்கி, “இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடாத வரையில், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சுதந்திரம் உண்டு.

இந்தியாவில் ஹரியானா, ராஜஸ்தான் அல்லது ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விவகாரங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதை விட, இளவயது திருமணத்தால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை அந்தந்தச் சமுதாய மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

சிறுமிகளுக்குக் கல்வியுடன், சிறுவயதிலேயே திருமணத்தால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் எடுத்துரைக்க வேண்டும். இது இந்துக்கள் மத்தியில் மட்டுமின்றி முஸ்லிம்களிடையேயும் இத்தகைய திருமணங்களைக் குறைக்கும், ஏனெனில் இஸ்லாம் ஒருபோதும் இளமை திருமணத்தை ஊக்குவிப்பதில்லை.” என்று கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: