சர்தார் விமர்சனம்: கார்த்தியின் திரைப்படம் பற்றி ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், KARTHI/TWITTER
இரும்புத் திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்துள்ள படம்தான் சர்தார். மிகச் சிறந்த உளவாகியாக இருக்கும் சர்தார் கார்த்தி, இந்திய பாதுகாப்பு ஆலோசகரை சுட்டுக் கொன்றதில் தேசத் துரோகி என்ற பெயரை பெறுகிறார். காவல்துறையில் இருக்கும் அவரின் மகன் கார்த்தி துரோகியின் மகன் என்ற பெயரை அழிக்க காவல்துறையில் தான் செய்யும் காரியங்களை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
சர்தார் கார்த்திக்கு என்ன நடந்தது? அவர் ஏன் பாதுகாப்பு ஆலோசகரை கொன்றார்? போலீஸாக இருக்கும் கார்த்தி உளவாளி கார்த்தியை எவ்வாறு சந்திக்கிறார்? என விரிகிறது படம்.
இரும்புத் திரையில் சைபர் குற்றங்கள் குறித்து பேசிய மித்ரன் இதில் நீர் தனியார் மயமாக்கப்படுவதால் வரும் ஆபத்து குறித்து பேசுகிறார்.
தினமணி
சர்தார் திரைப்படத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்களே ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
உளவாளியாக சர்தார் சண்டையிடும் காட்சிகள் அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் காட்சிப்படுத்தப்பட்ட, 1980களில் நடைபெறும் பிளாஷ்பேக் காட்சிகளும் ரஷிதா விஜயன் கார்த்தியை காதலிக்கும் காட்சிகளும் ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டுள்ளன என்கிறது தினமணி
படம் முழுக்க சில நல்ல காட்சிகள் இருந்தாலும் பொறுமையைச் சோதிக்கும் திரைக்கதை, படத்தின் நீளம், கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான சினிமாத்தனம் ஆகியவை பொறுமையைச் சோதிக்கின்றன என எதிர்மறையான சில விஷயங்களும் தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Sardar
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இரும்புத் திறையில் தொழில்நுட்பத் திருட்டு ஹீரோவில் அறிவுத் திருட்டு, சர்தாரில் தண்ணீர் திருட்டு என்கிற கதையுடன் வந்தாலும் திரைக்கதையில் தொடர்ந்து சறுக்கலையே சந்தித்து வருகிறார். இதனால், சர்தார் படமும் கலவையான எண்ணங்களையே தருகிறது என்கிறது தினமணியின் விமர்சனம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
பி.எஸ் மித்ரனின் சர்தார் திரைப்படம் திறன்பட எடுக்கப்பட்ட ஒரு உளவுவாளி திரைப்படம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம்.
கதை பழக்கப்பட்ட ஒரு கதையாக இருந்தாலும், நம்மை கடைசி வரை அதனோடு இணைத்திருக்கிறது. இருப்புத் திரை திரைப்படத்தை போல இந்த படத்தில் நீர் வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அது தனியார் கைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டிய அவசியத்தையும் பிரசார சாயல் இல்லாமல் சொல்லியிருக்கிறார் மித்ரன் என்கிறது.
மேலும் இந்த படத்தில் குறை என்று சொல்ல வேண்டுமானால், இது நமது மூளைக்கு எட்டும் அளவிற்கு மனதை தொடவில்லை என்று கூற வேண்டும். ஒரு கதாபாத்திரத்திற்கு துயரம் நேர்ந்தால் அது நம்மை உலுக்கவில்லை. கொத்தாக கொலைகள் நடக்கும்போது நமக்கு துயரம் ஏற்படவில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம்.
தி இந்து
மித்ரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் பாதிக்கப்பட்டால் அது நம்மை எதுவும் செய்யவில்லை என்கிறது தி இந்து.
படத்தில் வரும் போஸ் கதாபாத்திரம் ஒரு பெரும் துரோகத்தை சந்திக்கும்போது அது நம்மையும் பாதித்திருக்க வேண்டும் ஆனால் நாம் எளிதாக அதை கடந்து சென்றுவிடுகிறோம். அதேபோல போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் பிரகாஷின் கதாபாத்திரத்தையும் நம்மால் சீரியஸாக எடுத்து கொள்ள முடியவில்லை.
படத்தில் போஸ் (அப்பா கார்த்தி) வந்த பிறகுதான் விறுவிறுப்பாகவுள்ளது. அதுவரை நமது பொறுமை சோதிக்கப்படுகிறது என்று தி இந்துவில் விமர்சிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் குறித்து மித்ரனை பாராட்டியும் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













