பிரின்ஸ் விமர்சனம்: சிவகார்த்திகேயன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

பிரின்ஸ் - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், @Siva_Kartikeyan/Twitter

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், மரியா ரயபோஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன், சதீஷ், ஆனந்த்ராஜ்; இசை: எஸ். தமன்; இயக்கம்: அனுதீப் கே.வி.

'பிட்ட கோடா', 'ஜதி ரத்னாலு' போன்ற தெலுங்கு திரைப்படங்களை இயக்கிய அனுதீப் கே.வியும் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கும் படம் இது. 'டான்' ஒரு வெற்றிப் படமென்பதால் இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தீபாவளியை முன்னிட்டு, அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே இந்தப் படம் வெளியாகியுள்ளது.

படத்தின் கதை இதுதான்: மக்களுக்குள் ஜாதி, மதம் என்ற எந்தப் பிரிவினையும் கூடாது, மனித நேயம்தான் முக்கியம் என்று ஊருக்கே உதாரணமாக வாழ்ந்து வருகிறார் உலகநாதன் (சத்யராஜ்). இவருடைய மகனான அன்பு (சிவகார்த்திகேயன்) புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளிக்கு ஆசிரியராக வரும் ஜெசிகாவை (மரியா) காதலிக்கிறார். முதலில் மறுக்கும் ஜெசிகா, பிறகு அன்புவின் காதலை ஏற்கிறார். ஆனால், தன் தாத்தா, சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர் என்பதால் பிரிட்டிஷ் பெண்ணை தன் மகன் காதலிப்பதை ஏற்க மறுக்கிறார் உலகநாதன். ஜெசிகாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் இந்த எதிர்ப்புகளை மீறி ஜெசிகாவை அன்பு எப்படி திருமணம் செய்கிறார் என்பதே மீதிக் கதை.

படத்தின் கதை ஒன்லைனாக பார்த்தால் இதில் எங்கே கதை என்று எண்ணவைக்கக்கூடிய கதையை காமெடி ட்ராக் நிறைந்த திரைக்கதையால் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்புடன் எங்கேஜிங்காக கொண்டுச் சென்றிருப்பதாகச் சொல்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

'டான்' படத்தில் ஸ்டூடன்ட் என்றால் இதில் டீச்சராக தனது ஆஸ்தான காமெடி களத்தில் தனக்கே உரித்தான பாணியில் அதகளம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். கதாநாயகி மரியாவை கண்டதும் காதலிப்பதில் தொடங்கி, அந்தக் காதலை எதிர்க்கும் ஊர்க்காரர்களையும் தந்தையையும் அவர்களை தூண்டிவிடும் சிலரையும் சமாளிப்பது என சிவாவின் உழைப்பு படத்துக்கான ஆணிவேர். என்றாலும் அதுவரை செய்ததைவிட கிளைமாக்ஸில் செய்யும் கிரிஞ்ச் இல்லாத காமெடிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை கட்டுக்கடங்காமல் செய்கிறது. தனக்கு கைவந்த காமெடி ஜானரையே மீண்டும் தேர்வு செய்து அப்பாவித்தனமான முகபாவனைகள், அதைத் தாண்டிய நடனம் என தான் ஒரு பக்கா கமர்ஷியல் + ஃபேமிலி என்டர்டெயினர் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சிவா.

படத்தின் கதை ஒன்லைனாக பார்த்தால் இதில் எங்கே கதை என்றே எண்ண வைக்கும். அப்படியான ஒருகதையை காமெடி ட்ராக் நிறைந்த திரைக்கதையால் அப்பாவித்தனங்கள் நிறைந்த காதாபாத்திரங்களால், வசனங்களால் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்புடன் எங்கேஜிங்காக கொண்டுச் சென்றதற்காக இயக்குநர் அனுதீப்பிற்கு வாழ்த்துச் சொல்லலாம். தெலுங்கு இயக்குநராக இருந்துகொண்டு தெலுங்கு சாயலே இல்லாமல் முழுக்க ஒரு தமிழ் சினிமாவாக எடுத்திருக்கிறார். ஆங்கிலேயர்கள் என்றாலே கெட்டவர்கள் என்கிற ஸ்டீரியோ டைப்பும், நாட்டுப் பற்றுக்கான அளவு கோள்களாலும் எள்ளி நகையாடி காமெடி மூலம் உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் அனுதீப் என்கிறது தமிழ் திசை.

பிரின்ஸ் - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், @Siva_Kartikeyan/Twitter

தேசபக்தியை விட மனிதமே முக்கியம் என்பதை வலியுறுத்திய வகையிலும், போரினால் ஏற்படும் இழப்புகளை பேசிய வகையிலும், தேசபக்தியை கேடயமாக பயன்படுத்தும் குரூப் ஒரு டிராமா ட்ரூப் என்று சுட்டிக்காட்டிய வகையிலும், இவற்றையெல்லாம் 2k கிட்ஸ்களுக்கு இணக்கமான நடையில் திரையில் கொண்டுவந்த விதத்திற்காகவும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படம் முக்கியத்துவம் பெறுகிறது" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

'பிரின்ஸ்' படம் நெடுக நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறது. ஆனால், சில இடங்களில்தான் சிரிப்பு வருகிறது. அதுவும் இரண்டாவது பாதியில் என்கிறது 'இந்தியா டுடே' இணையதளத்தின் விமர்சனம்.

"'பிரின்ஸ்' ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. ஆனால், பல தருணங்களில் திரைப்படம் தட்டையாக இருக்கிறது. எல்லா நகைச்சுவையும் 'ஒர்க் - அவுட்' ஆகவில்லை. படத்தின் முதல் பாதி 'டேக் - ஆஃப்' ஆக நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. படத்தில் சிரிக்க வைக்கும் தருணங்களை ஒருவர் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், ஆனந்த்ராஜின் காவல் நிலையக் காட்சியும் மனித நேயம் பற்றிய உச்சகட்ட காட்சியும் சிவகார்த்திகேயனை 'ஃபுல் ஃபார்மி'ல் காட்டுகிறது.

படம் எதை முன்வைக்கிறது என்பதை படக் குழு முழுமையாக அறிந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இயக்குநரும் நடிகரும் தங்களையும் தங்கள் முந்தைய படைப்புகளையும் கேலி செய்து கொள்கிறார்கள். ஆகவே, படத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை என்பது காமெடி 'ஒர்க் - அவுட்' ஆகாத தருணங்கள்தான்.

பிரின்ஸ் - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், @ShanthiTalkies/twitter

சிவகார்த்திகேயனின் முகபாவங்களும் ஒன் - லைனர்களும் அந்தச் சூழலுக்கு பொருத்தமாக இருக்கின்றன. தன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அதை சிறப்பாகத் திரையில் கொண்டுவருகிறார் அவர். இந்தப் படத்தில் காமெடியை முயன்று பார்த்திருக்கிறார் சத்யராஜ். தன்னுடைய முதல்படத்தில் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார் மரியா. நில அபகரிப்பு மாஃபியா கும்பல் தலைவன் பூபதியாகவரும் பிரேம்ஜி அமரன் ஒரு ஆச்சரியம். வழக்கமாக காமெடி பாத்திரங்களிலேயே பார்த்துவிட்ட பிரேம்ஜியே, சற்று சீரியஸான ரோலில் பார்ப்பது ரசிகர்களுக்கு புது அனுபவம்தான்" என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தை படக்குழுவினர் முயற்சித்துள்ளனர். ஆனால், அது திரைக்கதையாக கைகொடுத்ததா என்பதுதான் கேள்வி என விமர்சித்துள்ளது தினமணி நாளிதழின் இணையதளம்.

"நகைச்சுவைத் திரைப்படம் என்பதால் காட்சிக்குக் காட்சி காமெடி செய்ய படக்குழு விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கான எந்த ஒரு ரியாக்ஷனும் பார்வையாளர்கள் முகத்தில் ஏற்படவே இல்லை. இதோ காமெடி வருகிறது.. இல்லை.. இல்லை.. அடுத்த காட்சியில் காமெடி வருகிறது என காமெடியை காட்டியே ஆக வேண்டுமெனச் செய்ததெல்லாம் பார்வையாளர்களைப் பரிதாபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதிலும் சோகமான காட்சிகள் வரும்போது அதிலும் காமெடி செய்வதெல்லாம் கைகொடுக்கவில்லை.

பிரின்ஸ் - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், @maria_ryab/twitter

திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் எதற்காக வருகின்றன என்பதே தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வருபவர்களுக்கு படத்தில் என்ன வேலை என கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல நடிகர் சூரி. எதற்காக அவர் திரைக்குள் வந்தார்? ஏன் திடீரெனக் காணாமல் போகிறார் என விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. நடிகர் பிரேம்ஜியை வில்லனாகக் காட்டச்சொன்னபோதே இயக்குநரை சிவகார்த்திகேயன் தடுத்திருக்க வேண்டாமா? அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில் வழக்கம்போல சிவகார்த்திகேயன் பேசியே அனைவரது மனதையும் மாற்றுவதெல்லாம் பார்த்துப் பார்த்து புளித்துப்போன பழைய கதை.

நடிகர் ஆனந்த் ராஜ் வரும் காவல் நிலையக் காட்சிகள் மற்ற காட்சிகளோடு ஒப்பிடும்போது பரவாயில்லை என இருக்கிறது. தேசபக்தியா, மனித நேயமா எனும் போட்டியில் பார்வையாளர்களைப் பந்தாடியிருக்கிறது பிரின்ஸ்" என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.

ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நின்று ரசிக்க வைத்திருக்கின்றார் சிவகார்த்திகேயன் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளம்.

"அமிதாப், ரஜினி ஸ்டைலில் காமெடிக்கு பொருந்திப்போகும் உடல்மொழியும் ஸ்க்ரீன் பிரெசன்ஸூம் என நாளுக்கு நாள் தன்னை செதுக்கிக் கொண்டே செல்கின்றார் சிவகார்த்திகேயன். படம் ஆரம்பம் முதல் கடைசிவரை போரடிக்காமல், ரஜினி ஃபார்முலாவில் அப்படியே இளம் ரஜினி மாதிரியே பொருந்தி போகின்றார் சிவா.

குறிப்பாக கதாநாயகி தன்னுடைய 'பெஸ்டி' என்று இங்கிலாந்து பாய்ஃப்ரண்டை சொல்ல திருதிருவென முழிப்பதிலும், அவனுக்கு நிச்சயதார்த்தம் அதற்கு வாழ்த்து சொல்லுங்கள் என்று கதாநாயகி சொல்லும்போது உடல் மொழியை அப்படியே மாற்றி பேசும் காட்சியில் ரஜினியே கண்முன் நிற்பதுபோல அள்ளிச்செல்கிறார் இந்த பிரின்ஸ்.

மரியா ரியாபோஷ்ப்காவும் தனது உணர்வுகளை சில இடங்களில் உணர்வுபூர்வமாக பொருத்தியிருப்பது சிறப்பு.

ஆனால் சத்யராஜ் சதா பேசிக்கொண்டே இருப்பது, வேகமாக செல்லும் திரைக்கதையை பின்னுக்கு இழுப்பது போன்ற சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல நண்பர்கள் உடனான சீன்களும் சிவகார்த்திகேயனின் முந்தைய படத்தின் சீன்களை இடையில் சொருகியது போலவே இருக்கின்றன.

இதுபோன்ற தொய்வுகளை யானையைபோல அல்லாமல் குதிரையைப்போல உடனடியாக தூக்கி நிறுத்தும் சிவாவின் திரை ஆளுமையே படத்தின் மிகப்பெரிய பலம். படத்தில் ஸ்கூல் பசங்களாக வரும் சிறுவர்களும் நடிப்பில் பின்னியிருக்கின்றனர்.

வழக்கமாக, சிவகார்த்திகேயன் படத்தில் படம் வெளிவரும் முன்பே பாடல்கள் பட்டையை கிளப்பும். ஆனால் ப்ரின்சில் அதை தவறவிட்டாலும் ஸ்க்ரீனில் சஸ்டெய்னராக தூக்கி நிறுத்தி, படத்தோடு பார்க்கும் போது துள்ளி ஆட வைக்கின்றன பாடல்கள்.

ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நின்று ரசிக்க வைத்திருக்கின்றார் சிவகார்த்திகேயன். ரஜினிக்கு 'குரு சிஷ்யன்', கமலுக்கு 'மைக்கேல் மதன காமராஜன்' போன்ற முழுநீள நகைச்சுவை படமாக சிவகார்த்திகேயனுக்கு ப்ரின்ஸ் நிச்சயம் இருக்கும்" என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய தளத்தின் விமர்சனம்.

காணொளிக் குறிப்பு, ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: