இந்த வாரம் வெளியாகும் படங்கள், ஒடிடி தொடர்கள் எவை?

ரட்சன்

பட மூலாதாரம், Sree Venkateswara Cinemas LLP/twitter

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், தமிழில் புதிதாக முக்கியமான படங்கள் ஏதும் இந்த வாரம் வெளியாகவில்லை. இருந்தாலும் வழக்கம் போல ஓடிடியில் குறிப்பிடத்தக்க அளவில் படங்களும் தொடர்களும் வெளியாகின்றன.

ரட்சன்

பட மூலாதாரம், ரட்சன் (THE GHOST)/TRAILER

ரட்சன் (The Ghost): நாகார்ஜுனா, சோனல் சௌஹான், குல் பனாக் ஆகியோர் நடித்த படம். தெலுங்கில் எடுக்கப்பட்ட படம், தமிழில் 'டப்பிங்' செய்யப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் ரா அதிகாரி, தன் சகோதரியின் மகளை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் யுத்தமே படம். ஆனால், இந்தப் படம் குறித்து மிகவும் எதிர்மறையான விமர்சனங்களே வெளியாகி வருகின்றன.

பிஸ்தா

பட மூலாதாரம், பிஸ்தா/twiiter

பிஸ்தா: மெட்ரோ சிரிஷ், சதீஷ், யோகி பாபு, மிருதுளா, நமோ நாராயணன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் இது. படத்தை ரமேஷ் பாரதி இயக்கியிருக்கிறார். திருமணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம். முதல் பாதி சிறப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதி, மெதுவாக நகர்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.

Rorschach

பட மூலாதாரம், @mammukka/twitter

Rorschach (மலையாளம்): மம்மூட்டி, ஆசிப் அலி, அஸ்கார் அலி, பிந்து பணிக்கர் ஆகியோர் நடித்து நிஸாம் பஷீர் இயக்கியிருக்கும் படம். ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் இது. படம் சற்று மெதுவாக நகர்வதைப் போல இருந்தாலும், நன்றாக இருப்பதாக ஆரம்பகட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

Hindutva (Hindi): கரண் ரஸ்தான் இயக்கியிருக்கும் திரைப்படம். தலைப்பே படத்தின் உள்ளடக்கத்தைச் சொல்லிவிடுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது பலத்த சர்ச்சைக்கு உள்ளானது.

இவை தவிர, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான பல திரைப்படங்கள் ஓடிடி சேவைகளில் வெளியாகின்றன.

Prey

பட மூலாதாரம், @DisneyPlusHS/twitter

படக்குறிப்பு, ப்ரே
  • அமெரிக்க சயின்ஸ் ஃபிக்ஷன் திகில் திரைப்படமான Prey டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.
  • கன்னட திரைப்படமான Lucky Man அமெசான் பிரைமில் வெளியாகிறது. புனீத் ராஜ்குமார், டார்லிங் கிருஷ்ணா ஆகியோர் நடித்து நாகேந்திர பிரசாத் இயக்கிய இந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
Dongalunnaru Jaagratha

பட மூலாதாரம், @thondankani/twitter

  • தெலுங்குப் படமான Dongalunnaru Jaagratha தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஸ்ரீ சிம்ம கொடூரி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை சதீஷ் திரிபுரா இயக்கியுள்ளார். ராஜு என்ற சிறு சிறு திருட்டுகளைச் செய்யபவன், ஒரு காரைத் திருடப் போய், அதற்குள் மாட்டிக்கொள்கிறான். வெளியில் இருந்து யாரோ அந்தக் காரை கட்டுப்படுத்துகிறார்கள். ராஜு தப்பித்தானா என்பதுதான் மீதிக் கதை.
  • நீதிமன்ற த்ரில்லரான Criminal Justice 3வது சீஸனின் இறுதிப் பாகம் இன்று வெளியாகிறது. தொடர்ந்து விறுவிறுப்பாகவே நகரும் இந்த தொடரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்திய தொடர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.
  • Maja Ma (Hindi): அமெசான் பிரைமில் இந்தப் படம் நேரடியாக வெளியாகியிருக்கிறது. மாதுரி தீட்சித், சிமோனே சிங், பார்க்கா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஆனந்த் திவாரி இயக்கியிருக்கிறார். ஒரு வெற்றிகரமான உயர் மத்தியதர வர்க்கத்துப் பெண்ணின் மகனுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அப்போது வெளியாகும் ஒரு ரகசியத்தால், பெரும் பிரச்சனை ஏற்படுகிறது என்பதுதான் கதை.
ஒரு திக்கன் தல்லு கேஸ்

பட மூலாதாரம், @roshanmathew22/twitter

படக்குறிப்பு, ஒரு திக்கன் தல்லு கேஸ்
  • Oru Thekkan Thallu Case (Malayalam): ஒரு காமெடி - ஆக்ஷன் திரைப்படம். ஒரு சிறிய டவுனில் வசிக்கும் பெரிய மனிதர், தன்னைத் தாக்கியவர்களைப் பழிவாங்க விரும்புவதுதான் கதை. பிஜு மேனன், ரோஷன் மாத்யூ, பத்மப்ரியா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்சில் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
  • Karthikeya 2 (Telugu): ஏற்கனவே வெளிவந்து வெற்றிபெற்ற தெலுங்குப் படமான கார்த்திகேயா என்ற படத்தின் இரண்டாம் பாகம். ஒரு புராண த்ரில்லர். ZEE 5ல் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பார்க்க முடியும்.
லால் சிங் சத்தா

பட மூலாதாரம், AMIRKHAN PRODUCTIONS

  • லால் சிங் சத்தா: ஆமிர் கான், கரீனா கபூர் நடித்த இந்தப் படம் முன்னறிவிப்பின்றி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. கற்றல் குறைபாடுள்ள ஒரு சிறுவன், சுற்றியிருப்போரின் அன்பால் வாழ்வில் உயர்வதுதான் படம். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன்: சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: