பொன்னியின் செல்வன் : ரஜினிக்கு பெரிய பழுவேட்டரையர் மீது என்ன ஆர்வம்?

பொன்னியின் செல்வன் பாகம் 1, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி நடைபெற்றது. இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நட்சத்திரங்களின் வருகையால் இந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டது.

படக்குழுவினருடன் இணைந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பாக டிரெண்ட் ஆகும் பாடல்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி, சோழா சோழா என இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. இந்த நிலையில், படத்தில் உள்ள மேலும் 4 பாடல்களின் போஸ்டர்கள் தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இசை வெளியீட்டு நிகழ்ச்சி துவங்கும் முன்பே ஸ்பாட்டிஃபை போன்ற இசை தளங்களில் படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் வெளியாகி வைரலாகின.

நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக பொன்னியின் செல்வம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு பகுதிக்கு வந்து சில கருத்துக்களைத் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் பேசியது என்ன?

பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ரஜினியும் கமலும் ஒரே மேடையில் தோன்றினர், படம் குறித்து முதலில் பேசிய ரஜினி காந்த் "மணி ரத்னம் எவ்வாறு இயக்குவார் என்று எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் ' தளபதி' படத்தில் நடித்த போது டயலாக் சொல்லிக்கொடுப்பார் அது போல் நான் பேச மாட்டேன் அவரும் அதனை ஒப்புக்கொள்ளமாட்டார், Feel பண்ணுனும் சார் அந்த Feel மிஸ் ஆகக்கூடாது என்பார் நமக்கு அது வராது நம்ம படத்துல எல்லா டயலாக்கும் 'ஏய் எட்ரா வண்டிய' அப்படி தான் இருக்கும்" என்று கூறிய போது அரங்கமே சிரிப்பலையானது. மேலும் அவர் கூறுகையில் 'பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்படத்தை குறித்து என்னிடம் மணிரத்னம் பேசியுள்ளார், அப்போது கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் தொடரை படித்துள்ளேன், அத்தொடர் வெளியாகும் ஒவ்வொரு வாரமும் ஒரு படமே வெளியாவது போல் ஒரு உணர்வு இருக்கும், அந்த வகையில் இப்படத்தை நீங்கள் இயக்கினால் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றேன் அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லை' என்று கிண்டலாக கூறினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

"பொன்னியின் செல்வன் இசை நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. நம் தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படம் இது. நிறைய பேர் இதை படமாக்க முயற்சித்தனர், மணி சார் அதை சாத்தியமாக்கியுள்ளார். இப்படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பே இசைப் பணிகளை தொடங்கினோம். ஆனால் அந்த பணிகளை தொடர்ந்து செய்ய முடியவில்லை. பல தரப்பட்ட இசை நுணுக்கங்களை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளோம். இந்தக் கால ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும், அதே வேளையில் பாரம்பரிய இசையும் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது."

நடிகர் கார்த்தி

"பல ஆண்டுகள் தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த ஒரு படம் இது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த தலைமுறையில் இப்படம் வெளிவருவது இன்னும் பெருமையாக உள்ளது, படத்தில் சில உண்மை கதாபாத்திரமும் சில கற்பனை கதாபாத்திரமும் உள்ளது. அதை ஒருங்கிணைப்பதே பெரிய விஷயம். அதை இயக்குநர் சிறப்பாக செய்துள்ளார்."

ஐஸ்வர்யா ராய்

"இருவர் படத்துக்குப் பிறகு மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ள படம் இது. இது நிச்சயம் உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியையும் சிறந்த அனுபவத்தையும் தரும் என்று நம்புகிறேன்."

த்ரிஷா

என் வாழ்நாளில் நான் பங்குபெறும் மிக பிரமாண்டமான நிகழ்ச்சி இது. இந்த படத்துக்காக நிறைய உழைத்துள்ளோம், ஒரு இளவரசி ஆக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, கனவு என்று கூட சொல்லலாம். என் கனவை நனவாக்கிய மணிரத்னம் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கொள்கிறேன். ரஜினி மற்றும் கமல் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெயம் ரவி

மிகப்பெரிய சவாலான விஷயத்தை சாத்தியமாக்கி உள்ளார் மணி சார், இப்படம் கற்பனையின் உச்சகட்டம். அந்த காலத்தில் ராஜா கதைகளை கேட்டு இருப்போம். ஆனால், பார்த்தது இல்லை. மணி சாரின் திரைக்கதையும் வசனமும் இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளன. மணி சார் நமக்குள் கதாபாத்திரத்தை விதைப்பார், ஒரு கட்டத்தில் கதாபாத்திரமாகவே வாழ்வோம். அந்த அனுபவம் இப்படத்தில் எனக்கு கிடைத்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி.

பி.ஆர்.ஓ.வை அடித்த பவுன்ஸர்கள்

இசை வெளியிட்டு நிகழ்ச்சி நடைப்பெறும் இடத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்லவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனியார் நிறுவன ஒப்பந்தம் பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

பணியில் இருந்த பவுன்சர்கள் உதவி பி.ஆர்.ஓ விக்கி என்பவரை தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட பவுன்சர்கள், உதவி பி.ஆர்.ஓவிடம் மன்னிப்பு கேட்பர் என்று சமாதானம் செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: