இந்திய சுதந்திரம்: தமிழ் சினிமாவில் ஒலித்த விடுதலைக் குரல்கள்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி நியூஸ்

தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாததாக இருந்தது. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பங்கு எத்தகையதாக இருந்தது?

இந்தியாவில் சினிமா பேச ஆரம்பித்தபோது விடுதலைப் போராட்டம் அதன் உச்சகட்டத்தில் இருந்தது. அந்த ஆரம்ப காலத்தில் சினிமாவை சுதந்திர தாகத்தை வளர்ப்பதற்கான ஒரு சாதனமாக பயன்படுத்த முடியும் என்ற துல்லியமான புரிதல்கள் இல்லாத காலகட்டத்திலும் சுதந்திர தாகத்தை தூண்டும் வகையிலான காட்சிகளும் பாடல்களும் இடம்பெறவேசெய்தன.

தமிழில் பேசும் படங்கள் எல்லாம் வருவதற்கு முன்பாகவே, பம்பாய் இம்பீரியல் மூவிடோன் அதிபர் இரானி, பல்வேறு மொழிகளை ஃபிலிமில் பதிவுசெய்து பார்த்தார். அதேபோல, தமிழை ஃபிலிமில் பதிவுசெய்ய முடியுமா என்று பார்ப்பதற்காக டி.பி. ராஜலட்சுமியைப் பாடச்சொன்னார். அப்போது அவர் தான் நாடக மேடைகளில் பாடிவந்த

"ராட்டினமாம் - காந்தி

கை பாணமாம்

பாரில் நம்மைக் காக்கும்

பிரமாணம் சுதேசியே" என்ற பாடலைப் பாடியதாக தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிய அறந்தை நாராயணன் பதிவுசெய்கிறார்.

தேச பக்தியைத் தூண்டிய 'காளிதாஸ்'

இதற்குப் பிறகு, 1931ல் வெளிவந்த தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியானபோது, அந்தப் படத்தில் தேசபக்தியைத் தூண்டும் வகையில் "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை" என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுக்குள் கலவரம் செய்வதை விட்டுவிட்டு, ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என இந்தப் பாடலில் வலியுறுத்தப்பட்டது.

சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்தில், மேடை நாடகங்களே படம்பிடிக்கப்பட்டு சினிமாவாகக் காட்டப்பட்டன. அந்த காலகட்டத்தில் மேடை நாடகங்கள் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்தச் சொல்லுதல் ஆகியவற்றை பிரச்சாரம் செய்து வந்தன. இந்த நாடகங்கள் சினிமாவுக்குச் சென்றபோது, சினிமாவிலும் தேசிய இயக்கக் கருத்துகள் எதிரொலிக்க ஆரம்பித்தன.

"தேசபக்தி நாடகங்களை நடத்திவந்த ஆரிய கான சபையின் கே.எஸ். சந்தான கிருஷ்ண நாயுடு, 'பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே' என்ற பாடலை எழுதிய மதுரை எம்.எஸ். பாலசுதந்தரம், 'ராட்டினமாம் காந்தி கை பானமாம்' பாடலை எழுதிய மதுரை பாஸ்கரதாஸ், பூமி பாலதாஸ் போன்றவர்கள் சினிமாவுக்கும் பாட்டெழுத வந்தனர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்ற எம்.ஜி. நடராஜ பிள்ளை, கள்ளுக்கடை மறியலில் கைதுசெய்யப்பட்ட எஸ்.வி. சுப்பையா பாகவதர், தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொண்ட சுந்தரமூர்த்தி ஓதுவார், தேசிய பிரச்சாரகர் எம்.வி. மணி, உப்பு சத்தியாகிரகத்தின்போது ராஜ துவேஷ பாடல்களைப் பாடித் தண்டனை பெற்ற எஸ். தேவுடு அய்யர் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினர்," என்கிறார் அறந்தை நாராயணன்.

இதனால், தமிழ் சினிமாவில் இயல்பாகவே தேசிய வாசனை வீசியது. 1933ல் வெளிவந்த வள்ளி திருமணம் படத்தில் இடம் பெற்றிருந்த, "வெட்கம்கெட்ட வெள்ளைக் கொக்குகளா, விரட்டியடித்தாலும் வாரீகளா", "ஒரு மாசில்லா இந்து சுதேஸ வளையல், வச்சிரம் பதித்த உச்சித வளையல்" போன்ற பாடல்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

ஆனால், அந்த காலகட்டத்தில் சினிமா தணிக்கை என்பது மிகக் கடுமையானதாக இருந்தது. சுதந்திரம் தொடர்பாக சிறு வசனமோ, காட்சிகளோ இருந்தால்கூட அவை நீக்க உத்தரவிடப்படும். இருந்தபோதும், இயக்குனர்கள் ஏதோ ஒரு வழியில் சுதந்திரம் தொடர்பான விஷயங்களை இடம்பெறச் செய்தனர்.

தணிக்கையில் இருந்து தப்பித்த படம்

1936ல் வெளிவந்த கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் எம்.கே. தியாகராஜபாகவதர் நடித்த நவீன சாரங்கதாரா படத்தில் மன்னனிடம் நியாயம் கேட்க வரும் மக்கள் காந்தி குல்லாய் அணிந்திருப்பார்கள். இது தணிக்கையில் தப்பியது.

தமிழ் சினிமாவில் சுதந்திரத் தீயை மூட்டிய முக்கியமான படங்களில் ஒன்று, தியாக பூமி. 1937ல் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது. இதனால் தணிக்கை விதிமுறைகள் மாற்றப்பட்டன. தணிக்கைக் குழுவில் ஊடகத்தினர், சினிமா துறையினர், பேராசிரியர்கள் போன்றோர் சேர்க்கப்பட்டனர். பாலியல் தொடர்பான காட்சிகளுக்கு கட்டுப்பாடு அதிகமானது. மாறாக, அரசியல் கருத்துகளை வெளியிட அனுமதிக்க வேண்டுமென புதிய உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில்தான் கல்கியின் கதை ஒன்று படமாக எடுக்கப்பட்டது.

படம் எடுக்கப்பட்ட காலத்திலேயே ஆனந்த விகடன் இதழிலும் தொடராக வெளிவர ஆரம்பித்தது. கணவன் - மனைவி உறவில் மிக முற்போக்கான கருத்துக்களைச் சொன்ன இந்தப் படத்தில் கதாநாயகியாக எஸ்.டி. சுப்புலட்சுமி நடித்திருந்தார்.

படத்தின் முடிவில் கதாநாயகி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்து, 'தேச சேவை செய்ய வாரீர்' என்று பாடியபடியே செல்வார். கணவனும் அதே போராட்டத்தில் ஈடுபடுகிறான். இருவரும் கைது செய்யப்படுகிறார்கள்.

இந்தப் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போது உலகப் போர் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்தது. இதையடுத்து வந்த ஆங்கில நிர்வாகம் இந்தப் படத்தைத் தடை செய்தது. இந்தப் படம் அப்போது சென்னையில் கெயிட்டி திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது.

காவல்துறையினருடன் மோதிய மக்கள்

"இந்தப் படத்தை உருவாக்கிய கே. சுப்பிரமணியம், கல்கி, படத்தை விநியோகித்த எஸ்.எஸ். வாசன் ஆகியோர் ஓரு புதுமையான முடிவெடுத்தனர். தடை உத்தரவு கொட்டகைக்கு வந்து சேரும்வரை படம் தொடர்ந்து காட்டப்பட்டது. அது மட்டுமல்ல, மக்கள் எல்லோரும் இலவசமாக படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். தடை உத்தரவு திரையரங்குக்கு வந்து சேர்ந்தபோது படம் ஓடிக்கொண்டிருந்தது.

படத்தை நிறுத்த வேண்டுமென காவல்துறையினர் குரல் கொடுத்தனர். காட்சி முடியும்வரை படத்தை நிறுத்த விடமாட்டோம் என மக்கள் பொங்கி எழுந்தார்கள்.

இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் மீறி, திரையரங்குக்குள்ளேயே காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர்." என இந்த நிகழ்வை விடுதலை வேள்வியில் தமிழகம் நூலில் பதிவுசெய்திருக்கிறார் ராண்டார் கை.

1937ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் பத்மஜோதி படத்தில் இந்தியாவே, இந்தியாவே என்ற பாடல் இடம்பெற்றது. அதே நிறுவனம் தயாரித்து 1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் பாரதியாரின் பாடல் ஒன்று இடம்பெற்றது. 1938ல் வெளிவந்த தேச முன்னேற்றம் திரைப்படத்தில், படம் முடியும்போது ஜய ஜய பாரத என்ற பாடல் இடம் பெற்றது.

1939ல் வெளிவந்த மாத்ரு பூமி என்ற திரைப்படம், அலெக்ஸாண்டர் காலத்தில் நடந்த கதையை மையமாகக் கொண்டது என்றாலும் இதன் பின்னணியில் இந்திய சுதந்திரம் குறித்த கருத்துகள் இழையோடின. எச்.எம். ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில், 'அன்னையின் காலில் விலங்குகளோ', 'நமது ஜென்ம பூமி' போன்ற பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

சத்தியமூர்த்தி பாராட்டிய படம்

படம் வெளிவருவதற்கு முன்பாக பிராட்வே டாக்கீசில் சிறப்புக் காட்சியைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, 'தேசிய உணர்ச்சி வளர இந்தப் படம் உதவும்' என்றார். அடுத்த நாளே இந்தப் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

பிறகு சத்தியமூர்த்தியின் உதவியால் அதற்கடுத்த நாள் தடை நீக்கப்பட்டு, படம் வெளியானது.

அதே ஆண்டில் வெளிவந்த பம்பாய் மெயில் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே 'பாரத மணிக்கொடி வாழ்க, வீர சுதந்திரம் நாடி, வேண்டி வணங்குவோம் கூடி' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. படத்தை சம்பத் குமார் இயக்கியிருந்தார்.

அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த டி.பி. ராஜலட்சுமி, 1940ல் தமிழ்த்தாய் என்ற படத்தைத் தயாரித்தார். அவரும் வி.ஏ. செல்லப்பா என்பவரும் இந்தப் படத்தில் நடித்திருந்த அந்தப் படத்தில் 'பாரத நாட்டுக்கு ஜே' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

சுதந்திரக் கருத்துகளுடன் வெளியான இதுபோன்ற பொழுதுபோக்குத் திரைப்படங்கள் போக, 1940ல் ஒரு ஆவணத் திரைப்படமும் வெளியானது. சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்த மகாத்மா காந்தியைப் பற்றிய ஆவணப் படம் அது. இந்தப் படத்தை ஏ.கே. செட்டியார் உருவாக்கியிருந்தார்.

இதற்குப் பிறகும் சின்னச் சின்ன அளவில் தொடர்ந்து சுதந்திரப் போராட்டக் கருத்துகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றன.

1947ன் தொடக்கத்தில் இந்தியா விடுதலை பெறுவது உறுதி என்பது தெரிந்துவிட்டபோது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் துணிச்சலுடன் சுதந்திரம் குறித்த கருத்துகளையும் பாடல்களையும் படத்தில் வைக்க ஆரம்பித்தார்கள். ஏ.வி.எம். தயாரித்த நாம் இருவர் படத்தில் பாரதியாரின் 'ஆடுவோமே, பள்ளு பாடுவோமே' பாடல் இடம்பெற்றது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே சுதந்திரத்தைக் கொண்டாடியது இந்தப் படம்.

1947 ஜனவரியில் வெளியான இந்தப் படம், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்றும் ஓடிக்கொண்டிருந்தது. இதையடுத்து, 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலை பதிவுசெய்து, தேசியக் கொடி பறக்கும் காட்சியுடன் இணைத்து படத்தில் சேர்த்தனர்.

இந்தியா சுதந்திரமடைந்த சில ஆண்டுகளிலேயே, சினிமாவில் தேசிய இயக்கத்தின் தாக்கம் பின்தள்ளப்பட்டு, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்துக் கொண்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: