இரவின் நிழல்: பார்த்திபனின் 'ஒரே ஷாட்' - ஊடக விமர்சனம் எப்படி இருக்கிறது?

இரவின் நிழல்

பட மூலாதாரம், Bioscope USA, Akira Productions Pvt Ltd

நடிகர்கள்: பார்த்திபன், ஜோசுவா பரிசுத்தம், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்தகிருஷ்ணன், சாய் பிரியங்கா ரூத் ;

இசை: ஏ.ஆர். ரஹ்மான்;

இயக்கம்: பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி, நடித்து உருவாகியிருக்கும் 'இரவின் நிழல்' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஒரே ஷாட்டில் Non-linear பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

நந்து என்ற பாத்திரத்தின் 'ரோலர் கோஸ்டர்' வாழ்க்கையில் அவர் எப்படி இரவின் பிரதிநிதியாக மாறிப்போனார், இரவின் நிழல் அவரை எதுவரை துரத்திக்கொண்டு வந்தது என்பதுதான் கதை என்று விவரிக்கிறது இந்து தமிழ் திசை நாளிதழின் இணையதள விமர்சனம்.

"ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பேசுபொருளாகிறது.

இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல்போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர் நந்துவைக் கைதுசெய்ய போலீஸ் துரத்துகிறது.

இரவின் நிழல்

பட மூலாதாரம், Bioscope USA, Akira Productions Pvt Ltd.

தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து, ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து, ஊடகங்கள்அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை தனது திறன்பேசியில் 'ஆடியோ'வாகப் பதிந்தபடி விவரிக்கத் தொடங்குகிறார்" என இரவின் நிழல் படத்தின் கதையை விவரிக்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.

மேலும், "எளிய விவரிப்பு முறை கொண்ட கதைகளை உலகின் பல நாடுகளில் ஒரே ஷாட்டில் படமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், 'நான் - லீனியர்' திரைக்கதை விவரிப்பைக் கொண்ட 'இரவின் நிழல்' படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, முதல் நொடியில் தொடங்கி, கதை முடியும் கடைசி நொடி வரை வியப்பூட்டக்கூடிய அனுபவமாக திரையில் விரிகிறது." என்கிறது அந்த நாளிதழ்.

இந்தப் படத்தின் மூலம் மிகப் பெரிய சாதனையை பார்த்திபன் செய்திருப்பதாகச் சொல்கிறது நக்கீரன் வார இதழின் இணையதளம்.

"முதலில் இப்படி ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கே நடிகர் -இயக்குநர் பார்த்திபனை பாராட்டியே ஆகவேண்டும். சாதாரணமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, அதற்காக உழைக்கும் கலைஞர்கள் சந்திக்கும் இன்னல்கள் எவ்வளவு, அதுவும் பல நாள் பல இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தி, அனைவரையும் ஒன்று சேர்த்து வேலை வாங்கி, அதில் தவறுகள் நடக்காதபடி பார்த்துக்கொண்டு, அந்தப் படத்தை வெற்றிபெற வைப்பதற்கு ஒரு இயக்குநரின் போராட்டம் என்பது சொல்லில் அடங்காத ஒரு மாபெரும் செயல். அப்படி இருக்கும் இந்த சூழலில் ஒரு படத்தை ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் பாணியில் கொடுத்து அதை ரசிக்கவும் வைத்து வெற்றி பெறவும் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார் இயக்குநர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்." என்கிறது நக்கீரன்.

ஆனால், சில இடங்கள் நெருடலாக இருப்பதாகக் கூறுகிறது நக்கீரன். "டெக்னிக்கல் விஷயங்கள் மற்றும் படம் எடுக்கப்பட்ட விதம் ஆகியவை நமக்கு 'கூஸ் பம்ப்' கொடுத்தாலும் படத்தின் பிற்பகுதியில் வரும் காட்சிகள் அழுத்தமாக இல்லாமல் அப்படியே கடந்து செல்வதாலும், ஆங்காங்கே சற்று அயர்ச்சியை கொடுப்பதாலும் சில நெருடல்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. காட்சிகளை இன்னமும்கூட அழுத்தம் நிறைந்த வேகமான திரைக்கதையோடு கொடுத்து இருந்திருக்கலாம். அதேபோல் படத்தில் இடம்பெற்ற சில வல்காரிட்டி நிறைந்த காட்சிகள், பச்சை பச்சையாக பேசும் வசனங்கள் ஆகியவை கதை நடக்கும் இடங்களின் சூழலுக்கு ஏற்றால்போல் இருந்தாலும் சில இடங்களில் நெருடல்கள் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. இதனால் சிறியவர்களும் குடும்பங்களும் ஒன்றுசேர்ந்து பார்க்க முடியாத சூழலை இந்த மாதிரியான காட்சிகள் ஏற்படுத்தியுள்ளன" என இந்தப் படத்தின் மீது விமர்சனங்களை அந்நாளிதழ் முன்வைக்கிறது.

இரவின் நிழல்

பட மூலாதாரம், Bioscope USA, Akira Productions Pvt Ltd.

"சிங்கிள் ஷாட்டில் ஒரு திரைப்படத்தை எடுப்பது என்பது மிகச் சிக்கலான ஒன்று. இந்நிலையில், இந்தக் கதையை ஒரே ஷாட்டில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஆனால், இது ஒரு இயக்குனரின் தேர்வு. திரையில் விரியும் காட்சி நன்றாக வந்திருக்கிறதா இல்லையா என்பதை மட்டும்தான் நாம் சொல்ல முடியும்" என்கிறது The Hindu ஆங்கில நாளிதழ்.

தொழில்நுட்ப ரீதியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும் முறை குறித்து விரிவாகப் பேசுகிறது The Hindu. "இதுபோல சிங்கிள் ஷாட்டில் படமெடுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் வெகுசில இயக்குனர்களே இம்மாதிரி தொடர் ஷாட்டில் படமெடுப்பதை முயற்சித்திருக்கிறார்கள். இரவின் நிழலைப் பொறுத்தவரை ஒவ்வொரு காட்சியும் ஒளிப்பதிவாளர், செட் ஆபரேட்டர், துணை இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு பெரும் சவாலை முன்வைக்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த சிங்கிள் ஷாட் படங்களான Rope, Birdman, 1917 ஆகிய படங்களில் பல நீளமான ஷாட்கள், ஒரே ஷாட்டைப் போல தொகுக்கப்பட்டவை. அதில் இருக்கும் Cut கண்ணுக்குத் தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் பார்த்திபன் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டிருக்கிறார். சில தருணங்களில் கேமரா ஒரே இடத்தை சில விநாடிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் அடுத்த காட்சிக்கு தயாராவதற்கான அவகாசம் கிடைக்கிறது. இருந்தாலும் அது சில விநாடி அவகாசம்தான்" என்கிறது The Hindu.

"திரைக்கதை, வசனம், பாடல், எடிட்டிங் என இந்த முறை, அனைத்தையும் பார்த்திபன் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த்கிருஷ்ணன் என பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு மிகவும் அற்புத படைப்பாக கொடுத்து இருக்கிறார்" என்கிறது zeenewsindiaவின் தமிழ் இணையதளம்.

"படத்தில் கேமிரா நகர்ந்து கொண்டே இருக்கும். ஏ.ஆர். ரஹ்மானும் அதற்கு ஏற்ப இசை அமைத்து இருப்பது படத்தின் கூடுதல் அழகு. பாடல்களையும் அதற்கான நடனத்தையும் அதே சிங்கிள் டேக்கில் காட்சிபடுத்தியிருக்கிறார் பார்த்திபன். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்தான் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு இவரது உழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. முழுப் படத்தையும் சிங்கிள் டேக்கில் அவர் படம் பிடிக்க வேண்டும். ஏதேனும் சிறு பிழை ஏற்பட்டால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இவரை சரியான முறையில் வழி நடத்தி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். ஒரே டேக்கில் படத்தை எடுக்க அவருக்கு 23 டேக் தேவைபட்டுள்ளது. ஒரு சிறிய தவறு நடந்தால்கூட மீண்டும் முதல் டேக்கில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற சவாலை சாதித்து காட்டியுள்ளார்" என்கிறது zeenewsindia.

காணொளிக் குறிப்பு, லீனா மணிமேகலையின் 'காளி ஆவணப்படம் சர்ச்சை: பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :