’சேத்துமான்’ இயக்குநர் தமிழ்: “பா. ரஞ்சித் தயாரிப்பாளராக இந்த படத்தை உருவாக்குவதில் முழு சுதந்திரம் கொடுத்தார்”

சேத்துமான்' தமிழ்: "பா.இரஞ்சித் தயாரிப்பாளராக இந்த படத்தை உருவாக்குவதில் சுதந்திரம் கொடுத்தார்!"

பட மூலாதாரம், Director Thamizh

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மேற்கு தமிழகத்தை கதைக்களமாக கொண்ட 'சேத்துமான்' திரைப்படம் நெடுக பேசி இருப்பது உணவு அரசியலும் அதனால் பாதிக்கப்படுகிற எளியவர்களையும் அதை எதிர்க்கும் மக்களின் வாழ்வியலையும். இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் 'சேத்துமான்' திரைப்படம் கடந்த வாரம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் நேரடியாக வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனுடைய 'வறுகறி' சிறுகதை இப்போது 'சேத்துமான்' ஆகி இருக்கிறது.

கேரளா, புனே என சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றதோடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி விருதையும் பெற்றிருக்கிறது 'சேத்துமான்'.

இப்படி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழிடம் பேசினோம். தான் சினிமாவுக்குள் வந்த கதையில் இருந்து பிபிசி தமிழுடனான உரையாடலை ஆரம்பித்தார்.

"இன்று நமக்கு பொழுது போக்கிற்கு என ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கலாம். ஆனால், நமக்கு சிறுவயதில் சினிமாதான் அப்போதிருந்த பெரிய பொழுதுபோக்கு. படமும் கதாநாயகர்களும் தான் நமக்கு பெரிய விஷயம். அப்படித்தான் சினிமாவில் வர ஆசைப்பட்டேன். நான் படித்து வளர்ந்தது எல்லாமே ஈரோடு மாவட்டத்தில். சினிமா ஆசையில் ஊரில் இருந்து நான்கைந்து முறை சென்னைக்கு வந்து, சினிமாவில் யாரும் தெரியாமல் கிடைத்த வேலைகள் செய்து கொண்டு பின்பு மீண்டும் ஊருக்கே திரும்பினேன். பின்பு இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் நிறுவனத்தில் படிப்பதற்காக சேர்ந்தேன். அங்கு, 'இயக்கம் எல்லாம் சொல்லி தரமாட்டோம். கேமரா மட்டும்தான். இயக்குநர் ஆக வேண்டும் என்றால் யாரிடமாவது உதவி இயக்குநராக சேருங்கள்," என்று சொன்னார்கள். பின்னர் வெங்கட்பிரபு போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து இயக்குநரானேன்".

கமர்ஷியல் படங்களை பார்த்து வளர்ந்த நீங்கள், உங்கள் முதல் படத்திலேயே பரீட்சார்த்த படமான 'சேத்துமான்' இயக்க காரணம் என்ன?

"உண்மை தான். கமர்ஷியல் படங்களை பார்த்து வளர்ந்த எனக்கும் அது போன்ற படங்களை இயக்கிதான் இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அதற்கான பட்ஜெட்டில் எனக்கு சரியான தயாரிப்பு நிறுவனம் கிடைக்கவில்லை. அதனால் அது தள்ளி போய் கொண்டே இருந்தது. இது சரி வராது என்று நினைத்து 'நாம் தனியாக ஒரு படம் எடுப்போம்' என ஆரம்பித்ததுதான் இந்த படம்.

சென்னை வந்த பிறகுதான் எனக்கு இலக்கியம் பரிச்சயமானது. அதனால், ஒரு சிறுகதையை படமாக எடுப்போம் என முடிவு செய்து எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'வறுகறி' சிறுகதையை படமாக்கினேன். குறைந்த செலவிலேயே படமாக்கி விடக்கூடிய கதை அது.

சேத்துமான்' தமிழ்

பட மூலாதாரம், Director Thamizh

ஆனாலும், அதற்கான பட்ஜெட் போட்டு பார்த்த போது அந்த தொகையும் என்னால் புரட்ட முடியாத ஒரு சூழல் இருந்தது. இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் ரஞ்சித் உதவி இயக்குநராக இருந்தார். அதனால், ரஞ்சித் எனக்கு பழக்கம். அவரை சந்தித்து கதை சொன்னேன். கதை பிடித்திருந்ததால் 'நானே இதை தயாரிக்கிறேன்' என முன் வந்து, தயாரிப்பாளராக முழு சுதந்திரமும் கொடுத்தார்".

இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றிருக்கிறது. அப்படி இருக்கும் போது மக்கள் இதை விருதுக்கான படமாக அணுகிவிடுவார்களோ என்ற பயம் இருந்ததா?

"நிச்சயமாக! இப்போது வரை கூட அந்த பயம் இருக்கிறது. நீங்கள் படம் பார்த்தீர்கள் என்றால் கூட ஆரம்பிக்கும் போது படம் விருது விழாக்களில் தேர்வானது, விருது வென்றது பற்றி எதையும் குறிப்பிட்டு இருக்க மாட்டோம். ஏனெனில், இது விருதுக்கான படம் எனும் போது மிக மெதுவாக நகரும் என்பது போன்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வந்துவிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால்தான், அது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், திரையரங்குகளில் வெளியாவதை விட ஓடிடியில் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பலதரப்பு பார்வையாளர்களையும் சென்றடைந்ததில் மகிழ்ச்சி!"

படத்தில், ஒவ்வொரு கதாப்பாத்திரமுமே மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அவர்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?

"மிக சவாலான ஒரு விஷயமாக இருந்தது. தேடித் தேடிக் கண்டுபிடித்தோம். பண்ணாடி கதாப்பாத்திரத்தில் நடித்த பிரசன்னா 'நக்கலைட்ஸ்' யூடியூப் சேனலில் பிரபலமாக உள்ளார். ஆனால், அவருக்கு 'சேத்துமான்' தான் முதல் படம்.ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடித்த குமார் தெருக்கூத்து கலைஞர். அவரை முதலில் வேறு ஒரு கதாப்பாத்திரத்திற்குத்தான் தேர்ந்தெடுத்தோம். பின்புதான் ரங்கன் கதாப்பாத்திரத்தில் வந்தார்.

பூச்சியப்பன் கதாப்பாத்திரத்தில் நடித்த மாணிக்கத்தின் தோற்றமும் எழுத்தாளர் பெருமாள் முருகன் போல உள்ளது என நிறைய பேர் கூறினார்கள். ஆனால் அப்படி இல்லை. அவர் நாமக்கல் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர். அந்த ஊர் வட்டார வழக்கிற்காக தேர்ந்தெடுத்தோம். அவரும் கூத்துக் கலைஞர். பண்ணாடி மனைவியாக வந்த காயத்ரி நகைக்கடையில் வேலை செய்தவர். இப்படி படத்தில் நடித்த ஒரு சிலரைத்தவிர அனைவருமே புது முகங்கள். மிகவும் தேடி எடுத்தோம்".

சிறுகதையின் தலைப்பு 'வறுகறி' எனும் போது படத்திற்கான தலைப்பாக 'சேத்துமான்' என மாற்றியது ஏன்?

"'வறுகறி' என்பது சிறுகதைக்கான தலைப்பாக இருந்தது. அதனால், படத்திற்கு வேறு தலைப்புத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அப்போது எழுத்தாளர் பெருமாள் முருகனுடைய மாணவர் கோபி என்பவரிடம் பேசிய போது வெவ்வேறு வார்த்தைகளை படத்தலைப்பாக யோசித்து கொண்டிருந்தோம். படத்தில் வரும் பன்றியை குறிச்சொல்லாகதான் சொல்ல வேண்டும் என்று பேசி கொண்டிருக்கும் போது கோபியுடைய நண்பர் ஒருவர் சொன்ன பெயர் தான் இந்த 'சேத்துமான்'. கேட்டதும் பிடித்திருந்ததால் இதை வைத்து விட்டோம். மான் கறி சுவையாக இருப்பது போல, சேற்றில் இருக்கக்கூடிய பன்றியும் அதே போன்ற ஒரு சுவையை உடையதாக இருப்பதால் இந்த வார்த்தையும் பொருந்தி போனது".

சேத்துமான்' தமிழ்

பட மூலாதாரம், Director Thamizh

முதல் கதையிலேயே உணவு அரசியலை எடுத்ததுக்கு காரணம் என்ன?

"சிறுகதையை பொருத்தவரை, முதியவர் அவருடைய பேரன் அவர்களது கதை, இறுதியில் கறி சாப்பிடும் போது என்ன ஆகிறது என்று தான் முடிந்திருக்கும். இதை படமாக்கும் போது அந்த முதியவருக்கு என்ன தேவையாக இருக்கும் என்று யோசித்து அந்த விஷயங்களை எல்லாம் உள்ளே சேர்த்தேன். அப்படித்தான் ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவரான விஷயம், அரசு பள்ளி கூடங்களை மூடிவிட்டு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது போன்ற விஷயங்களை பதிவு செய்தோம்".

அடுத்தடுத்து இது போன்ற கதைக்களங்களிலேயே தொடர்ந்து இயங்கும் எண்ணம் உண்டா?

"அரசியல் சார்ந்த படங்களை அதிகம் இயக்க ஆசை உண்டு. 'உறியடி' படத்தின் கதாநாயகன் விஜயகுமாரை வைத்து அடுத்த படம் இயக்க இருக்கிறேன். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது".

காணொளிக் குறிப்பு, 'நெஞ்சுக்கு நீதி' சமூக நீதிக்கான படம் - அருண்ராஜா காமராஜ் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: