அருண்ராஜா காமராஜ்: 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம் இதுதான்

பட மூலாதாரம், Instagram@Arunraja_Kamaraj
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஆர்ட்டிகிள் 15' திரைப்படம் சாதிய கட்டமைப்புகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியது. அப்படியான இந்த படம் இப்போது தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என பெயரிடப்பட்டு ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் அருண்ராஜா காமராஜாவுடனான நேர்காணலில் இருந்து,
'ஓகே ஓகே', 'நண்பன்' மாதிரியான மிகவும் ஜாலியான படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவரை 'நெஞ்சுக்கு நீதி' மாதிரியான சீரியஸான கதைக்களத்தில் பொருந்திப் போக செய்தது எப்படி? அதற்கான பின்னணி என்ன?
பதில்: 'ஆர்ட்டிகிள் 15' படத்தை தமிழில் 'நெஞ்சுக்கு நீதி'யாக ரீமேக் செய்ய வேண்டும் என முடிவானதும் இந்த படத்தை நான் தான் இயக்க வேண்டும் என உதயநிதி தான் என்னை தேர்ந்தெடுத்தார். தயாரிப்பாளர் போனி கபூர் அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 'மூன்று படங்களுக்கான ரீமேக் உரிமம் உள்ளது. நீங்கள் செய்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அந்த மூன்று படங்களில் 'ஆர்ட்டிகிள் 15' படமும் ஒன்று. மற்ற இரண்டு படங்களை விடவும் இந்த படம் இயக்குவது எனக்கு நெருக்கமான ஒன்றாக தோன்றியது. அதனால், இதை தேர்ந்தெடுத்தேன்.
பிறகு இதில் உதயநிதி நடிப்பதாக சொன்னார்கள். அவரை சந்தித்து நானும் அவரும் பேசி பிறகு இந்த படத்தின் வேலையை தொடங்கினோம்.

பட மூலாதாரம், Instagram@Arunraja_Kamaraj
படத்தின் தலைப்பான 'நெஞ்சுக்கு நீதி' மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுடைய சுயசரிதை நூலின் தலைப்பு. இந்த தலைப்பை படத்துக்கு பிரத்யேகமாக தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
பதில்: 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பை நான் தான் தேர்ந்தெடுத்தேன். சமூக நீதிக்கான படமாக இது இருக்கும் போது 'நெஞ்சுக்கு நீதி' தலைப்பு பொருத்தமானதாக இருக்கும் என நினைத்தேன்.
முதலில் உதயநிதி நடிக்கும் படம், இரண்டாவது இந்த படத்தை தவிர்த்து வேறு எந்த படத்திற்கும் அந்த தலைப்பு பொருந்தாது என்பதால் அவரிடம் கேட்டேன். அவர் தாத்தாவுடைய தலைப்பு ஆயிற்றே என யோசித்து விட்டு, அப்பாவிடம் கேட்டு சொல்வதாக சொன்னார். அங்கிருந்தும் சம்மதம் கிடைத்தவுடன் தலைப்பு இறுதி செய்தோம்.
உதயநிதி நடிக்கிறார், 'நெஞ்சுக்கு நீதி' எனும் தலைப்பு இப்படியாக இருக்கையில் ஒரு கட்சியின் வண்ணம் கிடைத்து விடும் என்று நீங்கள் யோசிக்கவில்லையா?
பதில்: அப்படி யோசிக்கவில்லை. நாம் என்ன படம் எடுக்கிறோம் என்பது நமக்கு தெரியும். அதனால், ஊகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மேலும் நம்முடைய எண்ணம் கட்சி சார்ந்தது கிடையாது. மக்கள் சார்ந்தது.
'ஆர்ட்டிகிள் 15' படம் தமிழில் வெளியான போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த படத்தை தமிழ் சூழலுக்கு மாற்றி எடுப்பதில் என்ன மாதிரியான சவால்கள் இருந்தது?
பதில்: சவால் என்பதை விட எனக்கு ஆர்வமாகவே இருந்தது. படம் பார்த்த ஆரம்பத்தில் அது குறித்தான அரசியல் புரிதல் எனக்கு பெரிதாக இல்லை என்றாலும் பின்பு தேடி தேடி தெரிந்து கொண்டேன். போலீஸ் சார்ந்த கதை என்பதால் காவல்துறை அதிகாரிகள், அரசியல் களத்தில் இயங்குபவர்கள் என நிறைய பேரை சந்தித்து பேசிய பின்பு தான் கதைக்குள் இறங்கினோம். கற்று கொண்டு செய்வதில் தப்பில்லையே.
இந்த படத்தை நான் ரீமேக் செய்ய போகிறேன் என அறிவித்ததும் முகம் தெரியாத பலர் சமூக வலைதளங்களில் என்னை தொடர்பு கொண்டு படம் நன்றாக வரவேண்டும் என நிறைய அக்கறை காட்டினார்கள். அவர்கள் கொடுத்த பல தகவல்களையும் நான் திரைக்கதைக்கு பயன்படுத்தி கொண்டேன்.

பட மூலாதாரம், Instagram@Arunraja_Kamaraj
படத்தின் மையக்கருவான சாதியை பற்றிய வசனங்கள் முன்னோட்ட காட்சிகளில் கவனம் பெற்றது. சாதியை பற்றி தவறாக பேசினால் பெரும் பிரச்னையாக மாறி விட கூடிய சூழலில், வசனங்களில் வேலை பார்த்தது குறித்து சொல்லுங்கள்?
பதில்: விவாதம் வரட்டும் என்று தான் சொல்வேன். ஏனென்றால் நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. சாதிய எண்ணங்கள் சக மனிதனை கூட மதிக்க விடாமல் செய்கிறது என்றால் அதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அப்படி தான் நான் நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது எதற்கு தயங்க வேண்டும்? எந்த தயக்கமும் இல்லாமல் தான் வசனங்களை வைத்துள்ளேன்.
'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' மாதிரியான படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற அதே சமயம் குறிப்பிட்ட சில சாதி கட்சிகளிடம் இருந்து வலுவான எதிர்ப்புகள் வந்ததையும் கவனித்தீர்களா?
பதில்: அது நடக்கதானே செய்யும். அதையும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
இந்த படத்திற்காக என்ன மாதிரியான கள ஆய்வுகளை செய்தீர்கள்?
பதில்: அரசியல் தளங்களில் இயங்க கூடியவர்கள், பத்திரிகையாளர்கள், உதவி இயக்குநர்கள், கொள்கை சிந்தனை உடையவர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் கலந்துரையாடினேன். அதில் எனக்கு சரி என்று பட்டதை இந்த கதையில் சேர்த்துள்ளேன். ஏனெனில் இறுதியில் இந்த படம் என்னுடைய பொறுப்பு. என்னுடைய சிந்தனை. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருப்பதால் அதில் கவனமாக உள்ளேன். நிச்சயம் கள ஆய்வும் நடந்தது.
வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு அநீதி நடக்கும் போது அது பெரிதாக கண்டு கொள்ளப்படாது என்ற அடிப்படையில் தான் 'ஆர்ட்டிக்கிள் 15' நகர்ந்திருக்கும். தமிழ் சூழலில் எப்படி அதை கதையில் கொண்டு வந்துள்ளீர்கள்?
பதில்: ஒட்டு மொத்தமாக நாம் அப்படி பேசி விட முடியாது. குறிப்பிட்ட ஒரு சம்பவம் , அந்த சமபவத்திற்கு பின்னால் இருக்க கூடிய மனநிலை தான் கதை.
இங்கு அப்படி எல்லாரும் செய்கிறார்களா என்றால் இல்லை. ஆனால், அப்படி செய்வதற்கான அந்த மனநிலை எல்லாரிடமும் இருக்கிறது. அந்த மனநிலையில் மாற்றம் வர வேண்டும் என தான் இந்த கதையோடு பொருத்தி பார்க்க வைத்தது. அந்த மாற்றம் எப்போது வரும் என்றால் நாம் செய்யும் விஷயம் தவறு என்று புரியும் போது. சிலருக்கு தெரியும் ஆனாலும் அப்படியே இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் திருந்துவார்கள்.
அது தொடர்பான செய்திகளும் திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன அதை நாம் அப்படியே கண்மூடி கடந்து விடுகிறோமா ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எத்தனை நாட்கள் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள் ஏன் முதலில் அப்படி இருக்க வேண்டும்?
அவர்கள் செய்யும் தொழிலும் சூழ்நிலையும் பொருளாதார வறுமையும் அவர்கள் மேல் திணிக்கப்பட்டது தானே? அந்த கட்டாய வன்முறையை பேசி தான் ஆக வேண்டும்.
நடிகர், பாடலாசிரியர் என கலகலப்பான முகம் கொண்டவர்கள் நீங்கள் ஆனால் இயக்குநராக வரும்போது 'நெஞ்சுக்கு நீதி' போல கனமான கதை களம் கொண்ட படங்களை இயக்குவது ஏன்?
பதில்:எந்தெந்த இடத்தில் நாம் என்னவாக இருக்க வேண்டும் என நாம் தானே தீர்மானிக்க வேண்டும். அந்தந்த இடத்திற்கு பொருந்தாத செயல்களையோ சிந்தனைகளையோ நாம் அங்கே வெளிப்படுத்த முடியாதல்லவா? எல்லா சிந்தனைகளும் எல்லாரிடத்திலும் உண்டு. அதை எங்கு யாரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பது இருக்கிறது.
எனக்கான புரிதலை நான் சொல்ல விரும்புவதை படங்களில் தெரிவிக்க விரும்புகிறேன். அருண்ராஜா என்பவன் எப்படி எல்லாம் யோசிப்பான் என்பதை படங்களில் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், நீங்கள் சொல்லும் பாடல்கள், நடிப்பு எல்லாம் இன்னொரு இயக்குநர் கீழே வேலை பார்க்கிறேன். ஆனால், இயக்கம் என்று வந்துவிட்டால் அது என்னுடைய படம்.
'கனா' படத்தின் காட்சிகளை, படத்தை பலரும் இப்போது சிலாகித்து பேசுவார்கள் ஆனால் படம் வெளியான சமயத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்ததா?
பதில்: படம் வெளியான சமயத்தில் வெற்றி பெற்றது ஆனால் கொண்டாடப் படவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
அதே நேரத்தில் நீ படம் எடுத்தால் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வியையும் எனக்கு நானே வைத்துக் கொண்டேன். உலகத்திலேயே பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட வெளியான முதல் திரைப்படம் 'கனா'. அதை எங்குமே குறிப்பிடப்படவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதே போல, நிஜமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுத்து நிஜமான சினிமாட்டிக் ஷாட்டாக படமாக்கினோம். இப்படி நிறைய உழைப்பு, மெனக்கெடல்கள் 'கனா' படத்தின் பின் உள்ளது. சீனாவில் வெளியான இரண்டாவது திரைப்படம் 'கனா'.

பட மூலாதாரம், Instagram@Arunraja_Kamaraj
இப்படி இதில் பல விஷயங்கள் இருந்தும் அதிகம் கவனம் பெறவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. நம்மைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் எனவும் பல சமயம் தோன்றும். ஆனால், அதிலும் ஒரு நன்மை இருக்கதான் செய்கிறது நம் மீது நிறைய எதிர்பார்ப்பு வந்து படத்தில் அது ஒருவேளை வெளிப்படாமல் போனால் இவ்வளவுதானா என்று நினைக்க வாய்ப்புண்டு. அதனால் மெல்ல மெல்ல போவதே சரி என நினைக்கிறேன்.
உங்கள் மனைவி சிந்துவும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் ஒரு உதவி இயக்குநர் போல செயல்பட்டதாக நடிகர் உதயநிதி குறிப்பிட்டிருந்தார். முதல் முறையாக இந்த கதையை உங்களுக்கு இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது அவர் என்ன சொன்னார்?
பதில்: முதல் முறையாக நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த படத்தை ஓடிடி தளத்தில் பார்த்தோம். பல இடங்களில் இந்த திரைப்படம் உணர்ச்சிபூர்வமாக எங்களுக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அப்படி இருக்கும்போது எங்களுக்கு பிடித்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது முதலில் சந்தோஷப்பட்ட நபர் அவர்தான்.
பாடலுக்காக ஒரு காட்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த காட்சியின் வீரியம் தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து, இனிமேல் இது போன்ற காட்சிகளை எடுக்க வேண்டாம் என்று சொன்னார். அது எனக்கு கிடைத்த முதல் பாராட்டு என்று நினைக்கிறேன்.
ஆனால், அதெல்லாம் நிஜத்திலும் நடந்து கொண்டுதானே இருக்கிறது படத்தில் பார்க்கும்போது நமக்கு வருத்தப்பட வைக்க கூடிய விஷயம் நேரில் நடக்கும் போது மிக எளிதாக கடந்து போகிறோம் என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Instagram@Arunraja_Kamaraj
'நெஞ்சுக்கு நீதி' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சிவகார்த்திகேயன் உங்களிடம் தனக்கான கதை தயார் செய்யும்படி கேட்டிருந்தாரே! என்ன போய்க்கொண்டிருக்கிறது?
பதில்: அதை நாங்கள் லாக்டவுன் சமயத்தில் இருந்தே பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். என்னை பொருத்தவரை வழக்கமான கதைகளில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட வித்தியாசமான ஒரு கதையை பிடித்து அதில் வேலை பார்ப்பது தான் பிடிக்கும். அப்படியானால் வித்தியாசமான கதைகளை பெரிய கதாநாயகர்களுக்கு ஏற்றபடி ஜனரஞ்சகமாக மாற்றுவது எப்படி என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
'கனா' படத்தின் கதை கேட்கும்போதே என்னிடம் இருந்த இரண்டு மூன்று கதைகளைக் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது ஆனால் வழக்கமாக யோசிக்காதே வித்தியாசமாக யோசி என்று சொன்னவர் சிவகார்த்திகேயன். அவருக்காக ஒரு கதையை நான் செய்யும்போது அது வித்தியாசமாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் தோன்றும் கதைகளை மாற்றி மாற்றி சொல்லிக் கொள்வோம். அப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பிடித்தபடி ஒரு கதை வரி அமையும் இல்லையா? அப்போது நிச்சயம் எங்களது படம் நடக்கும்.
சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் இடையிலான கல்லூரி கால நட்பு பற்றி சொல்லுங்கள்?
பதில்: திருச்சியில் கல்லூரி நாட்களில் இருவரும் ஒன்றாக படித்தோம். கல்லூரி நாட்களில் மேடையில் 'லொள்ளுசபா' நிகழ்ச்சி போல ஒரு படத்தை செய்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். அங்கு கிடைத்த கைதட்டல்கள் தான் எங்களுக்கான முதல் பாராட்டு அதன்பிறகு இது போன்ற பல நிகழ்ச்சிகளை கல்லூரியில் செய்திருக்கிறோம் பின்பு விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.
பிறகு நான் வேலைக்கு எதுவும் செல்லவில்லை. நமக்கு வருவதை செய்தால் தான் சோறு என்ற நிலை வந்ததும் இதில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல மீடியா துறையும் சினிமாவும் பிடிபட ஆரம்பித்தது. நான் ஒரு பக்கம் உதவி இயக்குனராக, நடிகராக, பாடலாசிரியராக பணியாற்றி வந்தேன்.
சிவா இன்னொரு பக்கம் 'மெரினா' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இப்படி இருவருமே சேர்ந்து வளர்ந்தோம்".
உங்களுடைய படங்களை பார்க்கும் பொழுது சினிமாவை சீரியஸாக அணுகக்கூடிய நபர் என்ற ஒரு பிம்பம் கிடைக்கிறது உண்மையில் நீங்கள் சினிமாவை எப்படி பயன்படுத்த விரும்புகிறீர்கள்?
பதில்: சினிமாவை ரசிக்க கூடிய ஒருவனாக எனக்கு கமர்சியல் ஆன படங்கள் மாஸான காட்சிகள் சிரிக்க வைக்கக்கூடிய காட்சிகள் என இந்த மாதிரியான படங்கள்தான் பிடிக்கும். ஆனால் இது நீண்ட காலத்திற்கு சினிமாவில் நிலைத்து நிற்குமா என்று ஆராய்ந்து பார்த்தால் சரியான விஷயத்தை உணர்வுபூர்வமாக சொல்ல கூடிய படங்கள் தான் இங்கு நிலைத்து நிற்கிறது.
உணர்வுகளை சரியான விகிதத்தில் சொன்னால் எந்த படமும் தோற்றுப் போகாது என்ற நம்பிக்கை உள்ளது. அதை செய்வது மிகப்பெரிய கலை. எனக்கு அது மற்றதை விட எளிதாக வருகிறது. கமர்ஷியல் படங்களுக்குள் நீங்கள் ஐடியாவையும், ஐடியாலஜியையும் பொருத்த முடியாது.
ஒருவேளை கமர்ஷியல் படங்கள் எடுக்கும் வாய்ப்பு வந்தாலும் அதில் ஐடியாலஜியை எப்படி பொருத்த முடியும் என்று யோசிப்பேன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












