'சாணிக்காயிதம்' செல்வராகவன்: தனுஷுடன் 'நானே வருவேன்' படம் நடிக்க காரணம் இதுதான்!"

'சாணிக்காயிதம்' - செல்வராகவன்

பட மூலாதாரம், twitter@selvaraghavan

    • எழுதியவர், ச. ஆனந்தபிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனால், இயக்குநர் செல்வராகவன் நடிகராக 'சாணிக்காயிதம்' படம் மூலமாக அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒன்று.

கேஸ் சிலிண்டர் போடும் சங்கையாவாக கையில் ரத்த கறையோடு பீடி வலித்து கொண்டு கொலைகளின் எண்ணிக்கயை அடுக்கும் காட்சியோடு 'சாணிக்காயிதம்' முன்னோட்ட காணொளியில் அறிமுகமாகும் நடிகர் செல்வராகவன் இதுவரை யாரும் பார்க்காதது.

'சாணிக்காயிதம்' படத்தில் நடிப்பு அனுபவம், தனுஷுடன் 'நானே வருவேன்' படத்தில் இணைந்து நடித்தது, முதல் முறையாக கேமரா முன்னால் நின்றது என பல விஷயங்களை பிபிசி தமிழுடனான பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் செல்வராகவன். இனி பேட்டியில் இருந்து,

உங்கள் நடிப்பில் வெளியான முதல் திரைப்படமாக 'பீஸ்ட்' இருந்தாலும், நடிகராக உங்களுக்கு வாய்ப்பு வந்த முதல் திரைப்படம் 'சாணிக்காயிதம்'. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கதை பிடித்து போய் ஒத்து கொண்டதா இல்லை நடிப்பு அனுபவத்துக்காகவா?

"கதை புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது என்ற காரணத்தினால் ஒத்து கொண்டேன். மற்றபடி நடிகராக அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்ற அனுபவத்திற்காக ஒத்து கொள்ளவில்லை".

'சாணிக்காயிதம்' படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை 'நடிப்பு என்பது ஒரு சலிப்பான அனுபவம் என நினைத்திருந்தேன்' என சமீபத்திய பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். இயக்குநராக பல நடிகர்களுடன் வேலை செய்திருந்தும் நடிப்பு மீது இது போன்ற ஒரு அபிப்ராயம் வர காரணம் என்ன?

"நடிப்பு சலிப்பானது என சொல்லவில்லை. அப்படி இருக்குமோ என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், நான் நடிகர் ஆனதுக்கு பிறகு அந்த எண்ணம் முற்றிலும் மாறி விட்டது. உண்மையில் நடிப்பு என்பது முற்றிலும் வேறு ஒரு தீவிரமான களம். அது வேறு விதமான ஒரு வேலை, வேறு விதமான ஒரு களம்".

'பீஸ்ட்', 'சாணிக்காயிதம்' படங்களில் நடிகராக வந்த பிறகு முன்பே நடிக்க வந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதா?

"நிச்சயம் இல்லை! அப்படி நான் முன்பே நடிக்க வந்திருந்தால் அந்த படங்களை எல்லாம் யார் இயக்கி இருப்பார்கள்? எது எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நிச்சயம் நடக்கும் இல்லையா? வாழ்க்கையில் என்ன வருகிறதோ அதை வாழ்பவன் நான். அதனால், முன்னாடி பின்னாடி என்பதை எல்லாம் நான் பார்ப்பதில்லை".

'சாணிக்காயிதம்' படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்க்கும் போது இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடைய முந்தைய படமான 'ராக்கி'யுடைய நீட்சியோ என தோன்றுகிறது. (வன்முறை என்ற கதைக்களம், காட்சி அமைப்பு, பழிக்கு பழி) நீங்கள் அந்த படம் பார்த்தீர்களா?

"நான் இன்னும் 'ராக்கி' திரைப்படம் பார்க்கவில்லை. 'ராக்கி' படம் வெளிவருவதற்கு முன்பே 'சாணிக்காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த படத்தை அவர் எப்படி உருவாக்குகிறார் என்பதை நான் பார்த்து கொண்டிருந்தேன். அதனால், அருணின் 'சாணிக்காயிதம்' படத்தை தான் முதலில் பார்க்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். கீர்த்தியும் அதே முடிவில் தான் இருந்தார்கள் என நினைக்கிறேன்".

இயக்குநர் டூ நடிகர் அனுபவம் எப்படி இருக்கு? நடிகராக என்ன விஷயங்கள் எல்லாம் கற்று கொண்டீர்கள்?

"இயக்குநர் டூ நடிகரும் ஒன்று தான். வழிப்போக்கன் டூ நடிகனும் என்னை பொருத்த வரை ஒன்று தான். இயக்குநராக இருந்து நடிகராக மாறுவதால் உங்களுக்கு ஏற்கனவே அதன் சாயல்கள் எல்லாம் தெரிந்து இருக்கும். அது உங்களுக்கு ஒரு அட்வான்டேஜ். மற்றபடி, உங்களுக்கு கேமரா முன் போய் நிற்பது என்பது முற்றிலும் வேறு மாதிரியான ஒரு அனுபவம்.

'சாணிக்காயிதம்' - செல்வராகவன்

பட மூலாதாரம், twitter@selvaraghavan

உங்களுக்கு வேறு எந்த ஒரு அனுபவம் இருந்தாலும் அது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம் என்பதை மறுக்கவே முடியாது. என்னை பொறுத்த வரை பயம் கலந்த ஒரு அனுபவமாக அது இருந்தது".

நடிப்பு பயம் கலந்த அனுபவம் என்கிறீர்கள். அப்படி எனில் நடிகராக உங்களுடைய முதல் காட்சி எப்படி இருந்தது?

"நடிகராக என்னை அனைவருக்கும் ஒரு சதவீதமாவது பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. நம் உருவம் கூட திரையில் அனைவருக்கும் பிடிக்குமா என்று நினைத்தேன். சிறு வயதில் இருந்தே எனக்கு என் உருவம் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். அதனால் கேமரா முன்னால் மக்கள் என்னை ஏற்று கொள்வார்களா என்ற பயம் இப்போது வரை இருந்து கொண்டே தான் இருக்கும்.

அது மட்டும் தான் என் மனதில் அப்போது ஓடி கொண்டிருந்தது".

உங்களுடைய இயக்கத்தில் வெளியான '7ஜி ரெயின்போ காலனி', 'மயக்கம் என்ன' இந்த மாதிரியான படங்களில் கதாநாயகனுடைய கதாப்பாத்திரத்தில் என்னுடைய சாயல் இருக்கும் என பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறீர்கள். அது போல நீங்கள் நடிகரா நடித்த 'பீஸ்ட்', 'சாணிக்காயிதம்' சங்கையா கதாபாத்திரங்களில் உங்களுடைய சாயல் எதுவும் இருந்ததா?

"நல்ல படமாக வர வேண்டும் என பல முயற்சிகள் 'சாணிக்காயிதம்' படத்தில் செய்திருக்கிறோம். ஆனால், 'பீஸ்ட்' படத்தில் அது போன்ற எந்த சாயலும் இருக்காது. 'சாணிக்காயிதம்' பொருத்தவரை நாமும் மனிதர்கள் தானே. நமக்கு அது போன்ற இக்கட்டான சூழல் வந்தால் நாம் என்ன மாதிரி நடக்க முயற்சி செய்வோம் என்பதை பொருத்து தான் அமையும்.

அதனால், நம்மையும் அறியாமல் வருவதற்கான வாய்ப்புகள் தான் இருக்கிறதே தவிர வேண்டுமென்றே வைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்".

'சாணிக்காயிதம்' - செல்வராகவன்

பட மூலாதாரம், twitter@selvaraghavan

இயக்குநர் செல்வராகவன் என்றாலே perfection-க்கு பெயர் போனவர் என உங்க இயக்கத்தில் வேலை பார்த்த பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். நடிகராக உங்களை பத்தி சொல்லுங்க?

"இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படப்பிடிப்பில் 300 பேர் இருந்தாலும் சரி 3000 பேர் இருந்தாலும் சரி ஒரு காட்சி முடிந்ததும் இயக்குநரை தான் திரும்பி பார்ப்போம். அவர் என்ன சொல்கிறார் என்று எதிர்ப்பார்த்து இருப்போம். முடிவு எடுக்க வேண்டியது அவர் தான். அந்த வகையில் இந்த படத்தில் எனக்கு நடிகராக அந்த முந்நூறு பேருடன் தான் சேர்ந்து இருப்பேன். எனக்கு அந்த வேலை இல்லை. நாங்கள் தான் காட்சி முடிந்ததும் அருணை திரும்பி பார்ப்போம். அந்த வித்தியாசம் தான் எனக்கு இருந்தது".

கொலை, வன்முறை, பழிக்கு பழி என பொன்னி (கீர்த்தி சுரேஷ்), சங்கையா(செல்வராகவன்) பேசுவதுதான் ட்ரையலர் காட்சிகள்ள பெரும்பாலும் இருக்கிறது. செட் எப்படி இருக்கும்? கீர்த்தி என்ன சொன்னாங்க?

"காலையில் ஒரு 'ஹாய்' மாலையில் ஒரு 'பாய்' இதுதான் எனக்கும் கீர்த்திக்கும் இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பேச்சு. 'சாணிக்காயிதம்' படத்தில் பெரும்பாலான காட்சிகள் கதையை ஒட்டி எங்கு நடந்ததோ அங்கு போய் தான் படமாக்கினோம். அதெல்லாம் தேடி தேடி இயக்குநர் பிடித்திருந்தார். அந்த அனுபவம் எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

இயக்குநராக இருந்த போது எவ்வளவு அனலான படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சுட்டதில்லை. ஆனால், ஒரு நடிகராக எனக்கு அதே தளம் சுடுகிறது".

'சாணிக்காயிதம்' - செல்வராகவன்

பட மூலாதாரம், twitter@selvaraghavan

'பான் இந்தியா' படங்கள் என்ற விஷயம் இப்போது பரவலான கவனத்தை குவித்து வருகிறது. அதே சமயம் தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களுடைய படங்கள் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற ஒரு பேச்சும் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் உண்டு. இதை எப்படி பார்க்கறீர்கள்?

"ஒரு படம் என்பதை படமாகத் தான் பார்க்க வேண்டும். இன்றைய தேதியில் கன்னட படம், தெலுங்கு படம், மலையாள படம் என்று மொழி வாரியாக சுருக்கி பார்ப்பது என்றில்லாமல் மக்கள் எங்கிருந்தாலும் பிரித்து பார்க்காமல் சென்று பார்க்கிறார்கள் என்ற ஆரோக்கியமான சூழலாக மட்டும் தான் இதை பார்க்கிறேன்".

தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகர் நீங்கள். அவருடைய பழைய படங்களை ரீமேக் செய்யும் ஐடியா இருக்கிறதா? அவருடைய எந்த படங்களில் இருந்தாவது influence ஆகி காட்சிகளோ கதையோ உங்கள் படத்தில் வைத்துள்ளீர்களா?

"எம்.ஜி.ஆரின் நிறைய படங்களை இப்போதும் ரீமேக் செய்யலாம். ஆனால், அதில் நடிப்பது யார்? அவரை போல யார் நடிக்க முடியும்? அவர் ஒரு மேஜிக். மேஜிக்கை எப்போதும் தொடக்கூடாது. அதை அப்படியே ஓரமாக வைத்து பத்திர படுத்தி கொள்ள வேண்டும்".

'நானே வருவேன்' படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தனுஷூடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளீர்கள். அது எப்படி நடந்தது?

"தனுஷ் கூட நடிக்கிறேன் என்பதை விட நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் அன்று வர முடியாத சூழல். அதனால், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தள்ளப்பட்டேன். 'நீங்கள் நடித்து விடுங்கள். இல்லை என்றால் படத்தின் பட்ஜெட்டில் இழப்பு வரும். ஷூட்டிங் நின்று விடும்' என்ற காரணங்களால் அந்த படத்தில் நடிகனாக்க பட்டேன். அதனால் அது திட்டமிட்டு எடுக்கவில்லை".

இயக்குநராக தனுஷூக்கு உங்களை தெரியும். நடிகர் செல்வராகவனை பார்த்து விட்டு என்ன சொன்னார்?

"ஆரம்பத்தில் இருந்து நானும் சரி தனுஷூம் சரி தொழில் குறித்து அதிகம் வீட்டில் பேசி கொள்ள மாட்டோம். 'நீ அது செய்யற; நான் இது செய்யறேன்' என்றெல்லாம் எந்த பேச்சு வார்த்தையும் இருக்காது. நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பி தங்கை என்ற உறவை தாண்டி தொழில் பற்றி எதுவும் பேச மாட்டோம். அது தான் நல்லது எனவும் நினைக்கிறேன்".

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :