"அஜித் படப்பிடிப்பால் தொழிலாளர்களுக்கு நஷ்டம்" - ஆர்.கே.செல்வமணி

பட மூலாதாரம், AJITH
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் FEFSI (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) ஊழியர்கள் இடையிலான ஒப்பந்தம் ரத்து செய்ப்பட்டுள்ளது என நேற்று அறிக்கை வெளியானது. இது குறித்து விளக்கம் கொடுக்க FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பத்திரிக்கையாளர்களை இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.
FEFSI ஊழியர்களின் கோரிக்கை
சினிமாவில் திரைக்கு பின்னால் பணியாற்றும் ஊழியர்களின் நலனை மனதில் கொண்டு இந்திய சினிமாவில் பல விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்கும் போது அதில் பணியாற்ற FEFSI ஊழியர்களை பட தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் FEFSI-க்கும் இடையில் ஏற்கனவே ஒப்பந்தம் இருந்தது.
FEFSI ஊதிய உயர்வு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், FEFSI ஊழியர் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அறிவித்தார். 24 சங்கங்களை உள்ளடக்கிய FEFSI ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் இறுதி முடிவை எட்டாத நிலையில், ஆர்.கே. செல்வமணி தன்னிச்சையாக இது குறித்து அறிவித்திருப்பது ஏற்புடையது இல்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கை
மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இந்த மாதம் 2ம் தேதி கலந்து கொண்டு அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலங்காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது.
ஆனால், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் விதமாக FEFSI செயல்பட்டதால் இந்த ஒப்பந்தம் 02.05.22 முதல் ரத்து செய்யப்படுகிறது என அந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதாகவும் மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
FEFSI என்ன சொல்கிறது?
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி தங்கள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இன்று தெரிவித்தார். ''வருகின்ற 8ம் தேதி நடிகர்கள் சங்க பொதுக்குழு நடைபெற உள்ளது. அதில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக அன்று மட்டும் சென்னையில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது. நடிகர்கள் சங்கத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ளது முதல் தீர்மானம். அடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் FEFSI தொழிலாளர்களை பயன்படுத்தி கொள்ள மாட்டோம் என எங்களுக்கு இன்னும் எந்த கடிதமும் வரவில்லை. ஆனால், அறிக்கை வெளியிட்டதாக நண்பர்கள் கூறினர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளியிடம் கேட்ட போது அவர் அப்படி எதுவும் இல்லை என கூறினார். நாளை காலை இரு தரப்பினரும் பேசி முடிவெடுத்த பின்பு இது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதனால், இந்த கடிதத்தின் மீது எந்த முடிவும் நாங்கள் எடுப்பதில்லை என தீர்மானித்துள்ளோம்" என பேசியுள்ளார்.
பிரச்னைக்கு என்ன காரணம்?
பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்.கே.செல்வமணி இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் இரு தரப்பினருக்கும் இடையே புரிதலின்மை என்பதை குறிப்பிட்டார். மேலும், தொழிலாளர்களை மீறி இங்கு தயாரிப்பாளர்கள் முடிவு எடுக்க முடியும் என்பது சாத்தியமா என கேட்கப்பட்டது. அதற்கு, 'எப்பொழுதும் பணிவாகவும் நட்பாகவும் போவதில் எங்களுக்கு பிரச்னையில்லை. நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்பதற்காக அவர்களை அடிக்கவோ அவமானப்படுத்தவோ விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள். நாளை இணைந்து பணியாற்றும் போது இந்த பிரச்னையால் தேவையில்லாத மனக்குறை வேண்டாம் என்பதை கவனத்தில் வைத்துள்ளோம்' என கூறியுள்ளார்.
அஜித் படப்பிடிப்பால் நஷ்டம்
தற்போது பல முன்னணி நடிகர்களும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தாதது குறித்து ஏன் FEFSI அமைதி காக்க வேண்டும் என கேட்ட போது, "விஜய், ரஜினி உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களிடம் FEFSI தொழிலாளர்கள் நிலை குறித்து பேசியதால் தான் அவர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என 'காலா' ஆகிய படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைத்தது.

பட மூலாதாரம், LYCA
பல சமயங்களில் சென்னையிலும் அது போன்ற பிரம்மாண்டமான செட்கள் அமைக்க வசதி இல்லாமல் போய் விடுவது உண்மைதான். ஆனால், நடிகர் அஜித்திடம் நாங்கள் நேரடியாகவே இப்போது கோரிக்கை வைக்கிறோம். நீங்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதால் இங்கு பல தொழிலாளர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத்திடம் கோரிக்கை வைத்தார் செல்வமணி.
நடிகர் அஜித்தின் முந்தைய படமான 'வலிமை' பெரும்பாலும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இப்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவரது 61வது படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதனை குறிப்பிட்டே ஆர்.கே. செல்வமணி இவ்வாறு கூறினார்.
மேலும், "விஜய் பைலிங்குவல் (இரு மொழிகளில்) படம் செய்யும் போது அங்கே போவதை தவிர்க்க முடியாது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல அடுத்த படத்தில் இங்கு சென்னையில் படப்பிடிப்பு வைத்து பணியாளர்களின் நலனுக்கு செய்து கொடுப்பார். நாங்களும் இங்கே மட்டும் தான் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், தொடர்ச்சியாக வெளி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்துவது ஏற்புடையதல்ல. நம் சென்னையிலேயே செட் அமைப்பதற்கான அனைத்து இடங்களும் பாதுகாப்பாக உள்ளது.
இந்தி மொழியில் மட்டும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்ற மொழிகளை விட அதிகம் இருக்கும். மற்றபடி தென்னிந்திய மொழிகளில் ஒப்பிடும் போது 10% வரை முன் பின் இருக்கும். இந்த ஊதிய உயர்வு பிரச்னையும் பேசி முடித்துள்ளோம். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எங்களுக்கும் மன பிரச்சனை தானே தவிர பண பிரச்னை இல்லை. எனவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












