'ஓ மை டாக்' அருண்விஜய்: "அப்பா, மகனுடன் இணையும் புதிய கதை தேர்வுக்கு இதுதான் காரணம்"

அருண் விஜய்

பட மூலாதாரம், insta@arunvijayno1

படக்குறிப்பு, அருண் விஜய்
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் சினிமாவில் தந்தை- மகன் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் தந்தை - மகன் - தாத்தா என மூன்று தலைமுறையும் இணையும் கதைக் களமாக 'ஓ மை டாக்' படத்தோடு களம் இறங்குகிறார் அருண் விஜய். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் இது என்பவர் தன் மகன் அர்னவ்வை இதில் அறிமுகப்படுத்துகிறார். வருகிற 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் படம் நேரடியாக வெளியாக இருக்கிறது.

'ஓ மை டாக்', சினிமாவில் தனது பயணம், அடுத்து ஹரியுடன் இணையும் 'யானை' படம் என பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் அருண் விஜய்.

உங்கள் மகன் அர்னவ் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக கூடிய கதை இது. நடிக்க வேண்டும் என அவர் விரும்பினாரா அல்லது உங்கள் விருப்பமா?

"இதில் என் விருப்பமோ திட்டமிடலோ என எதுவும் இல்லை. அர்னவ் 'ஓ மை டாக்' படத்தில் நடிக்க வேண்டும் என்பது எதேச்சையாக நடந்தது. அர்னவுக்கும் நடிப்பதில் ஆர்வம் இருந்தது. 'ஜெயம்' ரவியின் மகன் நடித்த படம் பார்த்து விட்டு வந்ததும் அர்னவ் கேட்ட முதல் கேள்வி, 'நான் எப்போது நடிக்க போகிறேன்?' என்பது தான். அப்போதே என்னால் அர்னவின் நடிப்பு ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிந்தது. படப்பிடிப்பு தளங்களுக்கு எல்லாம் அடிக்கடி அவரை கூட்டி செல்வேன். என் ஆக்‌ஷனும் அவருக்கு பிடிக்கும். இதெல்லாம் சேர்த்து தான் அவருக்கு நடிப்பில் ஆர்வத்தை கொண்டு வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

"எனக்காக கதை எதுவும் கேட்டீர்களா?' என அர்னவ்வே வந்து அடிக்கடி கேட்பான். அப்படி இருக்கும் சமயத்தில்தான், 'ஓ மை டாக்' படம் போன்று ஒரு கதை அதுவும் 2டி புரொடக்‌ஷன் தயாரிப்பில் குடும்ப நண்பர் சூர்யாவிடம் இருந்து வந்தது மகிழ்ச்சியான ஒன்று. அர்னவ், சிம்பா நாய்க்குட்டி, அப்பா, தாத்தா என அனைவருக்குமான உறவு படத்தில் மிகவும் அருமையாக இருக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் இது."

அப்பா, மகன், தாத்தா என மூன்று தலைமுறை இணைந்து நடித்திருக்கிறீர்கள். படப்பிடிப்பு தளம் எப்படி இருந்தது?

"அர்னவ் என்னுடன் நடித்ததை விட அவனது தாத்தாவுடன் நடித்ததுதான் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். படப்பிடிப்பு, பள்ளிக்கூடம் என நாங்கள் மூவரும் சந்தித்து கொள்வதே அதிகம் இருக்காது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் எங்கள் மூவருக்குமே குடும்பமாக நிறைய நேரம் கிடைத்தது."

'ஓ மை டாக்' படத்தில் அர்னவ் விலங்குகளை நேசிப்பவராக இருக்கிறார். ட்ரெய்லர் காட்சிகளில் நீங்கள் அதற்கு எதிராக இருப்பது போல தெரிகிறது. நிஜத்தில் நீங்களும் விலங்குகளை நேசிக்க கூடியவர் எனும் போது எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு சம்மதித்தீர்கள்?

"படத்தில் சில சர்ப்ரைஸ்ஸான விஷயங்களும் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல நானும் அர்னவ்வும் விலங்குகளை நேசிக்க கூடியவர்கள். படத்தின் கதையிலும் அவனுடைய கதாபாத்திரம் கிட்டத்தட்ட அவனுடைய உண்மையான கதாபாத்திரம் போல தான் இருக்கும். கதையிலும் என்னுடைய கதாபாதிரம் எப்படி மாறுகிறது என்பதையும் பார்ப்பீர்கள். குழந்தைகளுக்காக அப்பா எப்படி மாறுகிறார், என்னவெல்லாம் விட்டு கொடுக்கிறார் என்பதை மிக அழகாக இயக்குநர் சரவ் இதில் எடுத்து வந்திருக்கிறார்".

அருண் விஜய்

பட மூலாதாரம், insta@arunvijayno1

நீங்களும் அர்னவ்வும் சேர்ந்து மணிக்கணக்கில் சினிமா பற்றி பேசுவீர்களாமே?

"என்னை விட அர்னவும், ஆர்த்தியும் சேர்ந்து ஆங்கிலம், தமிழ், மலையாளம் என நிறைய படங்கள் பார்ப்பார்கள். அதிலும் அடுத்த நாள் பள்ளி விடுமுறை என்றால் அர்னவ் விடிய விடிய கூட படம் பார்ப்பான். படம் குறித்து விவாதிக்கவும் செய்வான். ஆனால், அவன் படித்து முடித்து விட்டு பிறகு சினிமா தான் அவன் விருப்பம் என்றால் அப்போது வரட்டும் என நானும் ஆர்த்தியும் முடிவு செய்திருக்கிறோம்."

முதல் முறையாக நீங்களும் உங்கள் அப்பா விஜயகுமாரும் இணைந்து நடித்த படம் 'பாண்டவர் பூமி' அதன் பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம். இடையில் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லையா?

"அப்படி இல்லை! அதுவாக அமைய வேண்டும் என்று தான் நினைப்பேன். இடையில் 'மாஞ்சா வேலு' படத்தில் மட்டும் எனக்கு அப்பாவாக நடித்திருப்பார். 'பாண்டவர் பூமி' படத்தில் அப்பா- மகனாகவே நடித்திருப்போம். அந்த படம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் அதற்கு பிறகு நான்-அப்பா-அர்னவ் என மூவரும் இணைந்திருப்பது இன்னும் ஸ்பெஷல். படத்தின் கதைக்கு சரியாக இருக்கும் என இயக்குநரும் நினைத்தால் மட்டுமே அது நடக்கும்.

மேலும், அப்பா நடிக்காத கதாப்பாத்திரமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு சவாலானதாக, பிடித்தமானதாக இருந்தால் நிச்சயம் செய்வார்".

அருண் விஜய், விஜயகுமார்

பட மூலாதாரம், insta@arunvijayno1

'இயற்கை', 'பாண்டவர் பூமி' என ரசிகர்கள் விரும்பிய படங்கள் கொடுத்தாலும் அதற்கு பிறகு சினிமாவில் ரீ- எண்ட்ரி என அந்த இடைப்பட்ட காலத்தில் உங்களை தக்க வைத்து கொள்ள என்ன செய்தீர்கள்? அந்த காலம் எப்படி இருந்தது?

"அந்த இடைவெளியில் என்னை நானே தயார்படுத்தி கொண்டிருந்தேன். ஒரு விஷயம் சாதிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுடைய முழு கவனமும் அதில் தானே இருக்கும். அந்த கோவத்தின் வெளிப்பாடு காரணமாகவே உடற்பயிற்சி, புதிய விஷயங்களை கற்று கொள்வது என என் எனர்ஜியை எதிலாவது செலவழித்துக் கொண்டே இருப்பேன்.

அந்த விரக்தியை எல்லாம் நேர்மறை எண்ணங்களாக மாற்றி கொள்வேன். அப்போது கற்று கொண்ட பல விஷயங்கள் தான் இப்போது என பல வகைகளில் உதவுகிறது. இந்த விஷயத்தை இப்போதுள்ள இளைஞர்களும் கற்று கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஒரு விஷயம் 'நடக்குமா? நடக்காதா?' என யோசித்து கொண்டிருப்பதை விட நம் விஷயத்தில் கவனமாக இருந்து கற்று கொண்டால் விருப்பப்பட்டது நிச்சயம் நடக்கும் என்பது தான் என் நம்பிக்கை."

சினிமா பின்புலம் உங்களுக்கு எந்த அளவுக்கு ப்ளஸ் & மைனஸ்?

"சினிமா பின்புலம் உள்ள குடும்பம் என்பதால் சினிமாவுக்குள் வருவது மட்டும் தான் எளிதாக இருந்தது. உண்மையில் அது மட்டும் தான் நடக்கும். மற்றபடி சினிமாவில் தக்க வைத்து கொள்வது எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது. அப்படி ஏதேனும் இருந்தால் நான் என்றோ முன்னணியில் வந்திருப்பேன்.

சினிமா சூழலுக்குள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன உங்களுக்கு சரியானது என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். கதை கேட்பது, அதை படமாக மாறுவது, தயாரிப்பு நிறுவனம் என பல விஷயங்கள் இதில் அடங்கி இருக்கிறது.

'சினிமா குடும்பம்' என்பதால் சினிமா எப்படி இயங்கும் என்பது முன்பே தெரிந்திருந்தது. நிறைய புது விஷயங்கள் கற்று கொண்டேன். மற்றபடி அதிர்ஷ்டத்தை பெரிதாக நான் நம்ப மாட்டேன். உங்கள் நேரம், கதை, தாக்கு பிடிப்பது இவை எல்லாம் இருக்கிறது".

அருண் விஜய்

பட மூலாதாரம், twitter@2D_ENTPVTLTD.jpg

'என்னை அறிந்தால்'விக்டர் கதாபாத்திரத்துக்கு பின்பு 'நெகட்டிவ் ஷேட்' இருக்க கூடிய கதாபாத்திரங்களை நீங்க அதிகம் தேர்ந்தெடுக்காததற்க்கு காரணம் என்ன?

"எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்றில்லை. நிறைய பெரிய படங்களில் இருந்து கூட வாய்ப்புகள் வந்தன. ஆனால், 'விக்டர்' போல அதற்கு பிறகு வந்த எந்தவொரு எதிர்மறை கதாபாத்திரமும் நடிகனாக என்னை ஈர்க்கவில்லை. கமர்ஷியல் படங்களில் வழக்கமான வில்லனாகவே அந்த கதாப்பாத்திரங்கள் என்னை சித்தரித்தன. அப்படி நடிக்க எனக்கு விருப்பமில்லை.

பார்வையாளர்களும் இப்போது தெளிவாகவே இருக்கிறார்கள். ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரம் நடித்தால் அடுத்து அதே போன்ற கதாப்பாத்திரத்தில் தான் அந்த நடிகரை எதிர்ப்பார்க்க வேண்டும் என்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான், 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகும் 'குற்றம் 23', 'செக்க சிவந்த வானம்', 'பார்டர்', 'சினம்', 'யானை' என புதுப்புது முயற்சிகளையும் செய்ய முடிந்தது.

நீங்கள் எந்த பேட்டி கொடுத்தாலும் அடுத்து இயக்குநர் ஹரியுடன் எப்போது படம் என்ற கேள்வி பெரும்பாலும் இருக்கும். அது இப்போது சாத்தியமாகி 'யானை' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படம் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்?

"எனக்கு அடுத்த கட்டத்துக்கான படமாகவே 'யானை'யை பார்க்கிறேன். ஒரு கிராமத்து கதையில் நான் நடித்தே நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அப்படியான கதையை ஹரி போன்ற ஒரு இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. வழக்கமான ஹரி சாருடைய படமாக இல்லாமல் புதிதாக இதில் சில விஷயங்கள் முயற்சி செய்திருக்கிறோம். அந்த தருணத்தில் நான் இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. என்னை இந்த படத்தில் வித்தியாசமான அருண் விஜய்யாக பார்ப்பீர்கள். கோர்வையான ஒரு கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது 'யானை'".

உங்கள் அப்பா விஜயகுமாருடைய எந்த ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எடுத்து நடிக்க வேண்டும் என விருப்பம் உண்டு?

"அப்பாவும் ரஜினி சாரும் இணைந்து 'காளி' என ஒரு படம் நடித்திருப்பார்கள். அதில் அப்பாவுடைய கதாபாத்திரம் ஜி.கே. என்று வரும். பயங்கர ஸ்டைலிஷ்ஷான ஒரு கதாபாத்திரம். ரஜினியுடைய ஸ்டைலுக்கு இணையாக யாருமே இருக்க முடியாது. ஆனால், அந்த படத்தில் அவருக்கு இணையாக ஸ்டைலாக அப்பாவும் நடித்திருப்பார். பல முறை அந்த படத்தை நான் பார்த்திருக்கிறேன். அது போன்ற ஒரு கதாபாத்திரம் எடுத்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது."

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :