'பீஸ்ட்'Vs 'கே.ஜி.எஃப் 2': வசூல், தியேட்டர்களை அபகரித்தது எந்த படம்? எது உண்மை?

விஜய் பீஸ்ட் கேஜிஎஃப் யஷ்
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'கே.ஜி.எஃப்' vs 'பீஸ்ட்' என்ற விவாதம் ரசிகர்களிடையே இன்னும் முடியவில்லை. இரண்டு படங்களுமே வெளியாகி நான்கைந்து நாட்கள் கடந்து விட்ட நிலையில் இந்த படங்களுக்கான தியேட்டர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் என மாறி, மாறி ரசிகர்களிடையே பேசு பொருளாகி இருக்கிறது.

கடந்த வாரத்தில் இரண்டு படங்களுமே அடுத்தடுத்த தேதிகளில் வெளியாயின. இந்த நிலையில் 'பீஸ்ட்' படத்தை விட 'கே.ஜி.எஃப் 2' பட வெளியீட்டிற்கு தமிழ்நாட்டில் குறைவான தியேட்டர்களே கிடைத்திருக்கின்றன.

ஆனால், தற்போது 'பீஸ்ட்' படத்தை விட 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருப்பதால், 'பீஸ்ட்' படத்தை நீக்கி விட்டு, 'கே.ஜி.எஃப்2' க்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உண்மை தானா? வசூல் ரீதியாக இரண்டு படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியனிடம் பேசினோம்.

அதிக தியேட்டர்கள் எந்த படத்திற்கு?

"பொதுவாக வார இறுதி நாட்களில்தான் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், 'பீஸ்ட்', 'கே.ஜி.எஃப் 2' ஆகிய இரண்டு படங்களுமே வார கடைசியில் அதுவும் ஒரு நீண்ட விடுமுறை இருக்கும் சமயத்தில் வெளியாகி இருக்கின்றன. எதிர்பார்ப்பு நிறைந்த இரண்டு பெரிய கதாநாயகர்களின் படங்கள் விடுமுறை நாட்களில் வெளியாகும் போது அது நிச்சயம் இளைஞர்கள், குடும்பங்கள் என அனைவருக்கும் கொண்டாட்டமான ஒன்றாகத்தான் அமையும். அதனால், இந்த இரண்டு படங்களுக்குமே வரவேற்பு வசூல் பொறுத்த வரை எந்த குறையுமே இல்லை".

தமிழகத்தை பொருத்தவரை 'பீஸ்ட்' படத்திற்கு மட்டும் சுமார் 800க்கும் அதிகமான தியேட்டர்களும் 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு 300க்கும் அதிகமான தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விமர்சன ரீதியாக 'பீஸ்ட்' திரைப்படம் பின்தங்கி இருப்பதால் 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தியை முற்றிலும் பொய் என மறுக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

'பீஸ்ட்' விமர்சனம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா?

"நீங்கள் சொல்வது போல 'பீஸ்ட்' படம் விமர்சன ரீதியாக வேண்டுமானால் பின் தங்கி இருக்கலாம். ஆனால், வசூல் ரீதியாக மோசமாக இல்லை. வெளியான ஐந்து நாட்களிலேயே 'பீஸ்ட்' படத்திற்கு நல்ல வசூல் தான் இதுவரை கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி தியேட்டர்கள் எண்ணிக்கையை குறைப்பார்கள். வசூல் ஒரு படத்திற்கு குறைவாக இருந்தால் தான், படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை என்பது குறைக்கப்படும்.

இதற்கு முன்பு கூட 'அண்ணாத்த', 'வலிமை' படங்களுக்கும் இது போன்ற கலவையான விமர்சனம் வந்தது. ஆனால், அந்த படங்களுக்கான வசூல் திருப்தியாகவே இருந்தது.

கே.ஜி.எஃப்2' படத்திற்கு இங்கு தியேட்டர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த படத்தின் டிக்கெட் டிமாண்ட் அதிகம் உள்ளது. மேலும் 'பீஸ்ட்' படம் வெளியாகி ஐந்து நாட்களை கடந்து விட்டது. அதனால் மக்கள் கூட்டம் முன்பை விட இப்போது குறைந்திருக்கிறது. இந்த பேச்சு தான் 'பீஸ்ட்' படத்திற்கு தியேட்டர்கள் குறைப்பு என மாறி வந்திருக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை 'பீஸ்ட்' பட வசூலுக்கு பக்கத்தில் கூட 'கே.ஜி.எஃப் 2' நெருங்கவில்லை.

பீஸ்ட்

பட மூலாதாரம், BEAST/SUN PICTURES

படங்களின் வசூலில் எந்த படம் முன்னிலை வகிக்கிறது?

'பீஸ்ட்' பட விமர்சனம் குறித்து இங்கு யாரும் கவலைப்படவில்லை என்பது தான் உண்மை. அதன் விமர்சனம் எந்த விதத்திலும் படத்தின் வசூலை பாதிப்படையச் செய்யவில்லை. 'பீஸ்ட்' பட வசூலில் 30% - 40% மட்டும் தான் 'கே.ஜி.எஃப் 2' தமிழகத்தில் வசூல் செய்திருக்கிறது.

ஏனெனில், 'பீஸ்ட்' படத்திற்கான திரையரங்குகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகம். எந்த படம் வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு மட்டும் தான் தாக்குப் பிடிக்கும். அதற்கு பிறகு முக்கியமான திரையரங்குகளில் மட்டுமே அவை ஓடும். ரசிகர்கள், சினிமாவை சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் இந்த இரண்டு வாரங்களின் ரிசல்ட் தான் முக்கியமானது!"

கே.ஜி.எஃப்2' படத்திற்கும் வரவேற்பு இருக்கத்தானே செய்கிறது....

கடந்த முறை 'கே.ஜி.எஃப்1' படத்தின் தமிழக விநியோகஸ்த உரிமையை நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' கைப்பற்றி இருந்தது. இந்த முறை அந்த உரிமையை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கைப்பற்றி இருக்கிறார்.

KGF 2

பட மூலாதாரம், KGFTheFilm/Twiiter

கே.ஜி.எஃப்2' படத்திற்கு வரவேற்பு

கடந்த முறை 'கே.ஜி.எஃப்1' படத்தின் தமிழக விநியோகஸ்தர் உரிமையை நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' கைப்பற்றி இருந்தது. இந்த முறை அந்த உரிமையை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கைப்பற்றி இருக்கிறார்.

'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு தமிழகத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பு, ரசிகர்களின் 'பீஸ்ட்' vs 'கே.ஜி.எஃப்2'' மனநிலை, தியேட்டர்கள் எண்ணிக்கை குறித்து அவரிடம் பேசியபோது விரிவாகவே பிபிசி தமிழுக்கு அவர் பதிலளித்தார்.

"தமிழகத்தை பொருத்தவரை 'கே.ஜி.எஃப்2' படத்திற்கான வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததை விடவே நன்றாக இருக்கிறது. ஒரு படத்திற்கு தியேட்டர்களில் பெரும்பாலும் இரண்டு வாரங்கள் தான் அளவுகோல். ஆனால், அதை எல்லாம் தாண்டி, நான்கு வாரங்களுக்கு இந்த படம் தாக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையை தமிழகத்தில் 'கே.ஜி.எஃப் 2' கொடுத்திருக்கிறது" என்கிறார் எஸ்.ஆர். பிரபு.

'பீஸ்ட்' படத்திற்கு தமிழகத்தில் 'கே.ஜி.எஃப் 2' படத்தை விட அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது. 'பீஸ்ட்' போன்ற பெரிய படத்துடன் வெளியாகும் போது, தியேட்டர்கள் எண்ணிக்கை குறித்த பயம் இருந்ததா என கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்வேன். 'கேஜிஎஃப்2' படத்தை பொருத்தவரை நாங்கள் 250+ தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால், 350க்கும் அதிக தியேட்டர்கள் கிடைத்தன.

முன்பெல்லாம் படத்தின் கதை பற்றிய விவாதம் தான் அதிகம் இருக்கும். ஆனால், இப்போது தியேட்டர்களின் எண்ணிக்கை, பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் என்பவற்றிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்துவது போல இருக்கிறதே?

"வேறு வழியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ஒரு படத்தின் கதைக்கருவை பற்றிப் பேசும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. ஆனால், தியேட்டர்களின் எண்ணிக்கையோ பாக்ஸ் ஆஃபிஸ் வசூலோ அது போல கிடையாது. அது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயமாக மாறி வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது தான். ஆனால், வேறு வழியில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

'பீஸ்ட்' படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருப்பதால் 'கே.ஜி.எஃப்2' படத்துக்கு அதிக தியேட்டர்களை அதிகப்படுத்துவதாக பேச்சு எழுகிறதே....

"பிசினஸ் மாடலே அப்படிதான். இது எதுவோ ஒரு பெரிய விஷயம் போல செய்தி போடுவது தேவையில்லாதது என்பேன். ரசிகர்கள் எதை விரும்பிப் பார்க்கிறார்களோ அதற்கேற்றாற் போல, திரைகளை திரையரங்க உரிமையாளர்கள் பார்த்து விட்டு அதிகப்படுத்துவார்கள். இது வியாபரத்தின் ஒரு பகுதி. காலங்கலமாக நடந்து வரக் கூடிய ஒன்று தான். இதில் போட்டியே கிடையாது. அதனால், இதை வசூல் தியேட்டர்கள் கொண்டு ஒப்பிடத் தேவையில்லை" என்கிறார் எஸ்.ஆர். பிரபு.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :