பீஸ்ட் விமர்சனம்: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா படம்?

பட மூலாதாரம், Beast/Sun Pictures
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படம் எப்படி உள்ளது? அதில் உள்ள நிறை குறை ஆகியவை குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
"காட்சிகளை ஊகித்துவிடலாம்"
ஏற்கனவே வெளியான ட்ரைலரில் ஒரளவிற்கு கதையை சொல்லிவிட்டதால் பெரும்பாலான காட்சிகளை முன்னதாகவே ஊகிக்க முடிகிறது என தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக தீவிரவாதிகள் மக்களை சிறைப்பிடித்ததும் பார்வையாளர்களிடையே ஒருவித பதைப்பதைப்பு தொற்றிவிடும் ஆனால் பீஸ்ட் படத்திலோ தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை அப்படி எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் பெரிய குறை.
ஏற்கனவே வெற்றிப் பெற்று படமாக்கப்பட்ட அனிரூத்தின் பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன என்கிறது தினமணி விமர்சனம்.
பில்டப்பற்ற அறிமுகம்
விஜய்யின் அறிமுக காட்சிகளில் பெரிதான பில்டப்புகள் இல்லை.அவர் யார் அவரின் திறன் என்ன? எத்தனை ஆபத்தானவர் என்ற வழக்கமான பில்டப்களோ அல்லது முகத்தை காட்டுவதற்கு முன்னதாக கை கால்களை க்ளோசப் சப்பில் காட்டும் காட்சிகளோ இல்லதது பாராட்டத்தக்கது. இது ஒரு நல்ல அறிகுறி. என்கிறார் நியூஸ் மினிட் ஊடகத்தில் விமர்சனம் எழுதியிருக்கும் செளம்யா ராஜேந்திரன்.
டாம் சாக்கோ போன்ற நடிகரின் திறனை முழுவதுமாக வெளிக்காட்டும் கதாப்பாத்திரம் வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இயக்குநர் நெல்சன் ரசிக்கும்படியாகவும் வழக்கத்தை உடைக்கவும் முயற்சி செய்கிறார். ஆனால் யோசனை உதிக்காத சமயங்களில் அவர் வழக்கமான பாணியைதான் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.
பாடலில் வருவது போல விஜய் நிச்சயமாக லீனர், மீனர், ஸ்ட் ராங்கராகதான் உள்ளார் ஆனால் துரதிஷ்டவசமாக படம் தான் அப்படி இல்லை. ஆங்காங்கே எடுபடும் நகைச்சுவையும் விஜய்யை கொண்டு மட்டுமே படம் நகர்ந்து செல்கிறது என்கிறது நியூஸ்மினிட் விமர்சனம்
'நகைச்சுவை கைக்கொடுக்கவில்லை'
நகைச்சுவையை வித்தியாசமாகவும் பிரதானமாகவும் கையாள்வதில் கைத்தேர்ந்தவர் நெல்சன். அவரின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் அது பெரிய அளவில் கைக்கொடுத்தது.
ஆனால் அது பீஸ்டில் கைக்கொடுக்கவில்லை என்கிறார் தி இந்துவில் திரைவிமர்சனம் எழுதியுள்ள ஸ்ரீநிவாச ராமானுஜம்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என நெல்சன் மற்றும் அவரின் குழுவினர் படத்தை எடுத்தது போல புதிய யோசனைகள் அற்றதாக உள்ளது.
தீவிரவாத கும்பலுக்கும் அரசாங்கத்தும் இடையே தூது போகும் செல்வராகவனுக்கும் விஜய்க்குமான பேச்சுகள் இயல்பாகவுள்ளது. பூஜா ஹெக்டே மற்றும் அவர் வரும் காட்சிகளை படத்தில் தவிர்த்திருக்கலாம் என்கிறது தி இந்துவில் வெளியாகியுள்ள விமர்சனம்.

பட மூலாதாரம், Beast/Sunpictures
'வலிமையற்ற வில்லன்கள்'
நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் வரும் கதாநாயகர்கள் எந்த அளவிற்கு திறன் கொண்டவர்கள் எந்த எல்லை வரை அவர்களால் செல்ல முடியும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கும். ஆனால் இதில் வீரராகவனுக்கு வசனங்களால் கொடுக்கப்படும் பில்டப்புகள் அதை கெடுத்துவிடுகிறது என்கிறார் ஃபிலிம் கம்பானியனில் விமர்சனம் எழுதியுள்ள ரஞ்சனி கிருஷ்ணகுமார்.
வில்லன்கள் வலிமையற்று பெரிதாக ஈடுகொடுப்பவர்களாக இல்லை. ஒரு கட்டத்தில் வீரராகவனாக வரும் விஜய்யின் பொய்யை எளிதாக நம்பி ஏமாந்துவிடுகிறார்கள்.
திரைப்படத்தின் திரைக்கதை வலுவாக இல்லை. மாறாக சண்டைக் காட்சிகளை மட்டுமே படம் நம்பியிருக்கிறது.
அன்பறிவின் சண்டை அமைப்பு, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, அனிரூத்தின் பின்னணி இசை மற்றும் ஜானியின் டான்ஸ் நடனம் படத்திற்கு வலு சேர்க்கிறது ஆனால் நெல்சனின் எழுத்து அதை செய்யவில்லை என்கிறது விமர்சனம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













