விஜய்யின் 'பீஸ்ட்': செல்வராகவனின் நடிப்பு முதல் பிரம்மாண்ட மால் செட் வரை - 7 சுவாரஸ்ய தகவல்கள்

பீஸ்ட் - விஜய்

பட மூலாதாரம், BEAST

தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கும் விஜயின் பீஸ்ட் நாளை வெளியாகிறது. படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த படக்குழு, டிரைலரை வெளியிட்டு மிரளவைத்தது. படத்தின் ஒட்டுமொத்த கதையும் அந்த டிரைலரில் சொல்லப்பட்டதுபோல் இருந்தது. ஒரு வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்துவிட, அதற்குள் மாட்டிக் கொண்டவர்களுள் ஒருவராக உளவுத்துறை அதிகாரியான விஜய் இருப்பதும், அவர் எப்படி தீவிரவாதிகளிடம் இருந்து கைதிகளை காப்பாற்றுகிறார் என்பதும் தான் படத்தின் ஒன்லைன்.

வெளியான சில மணி நேரங்களிலேயே டிரைலருக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

இந்தக் கதை, யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்கா திரைப்படத்தின் கதை என ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர். இன்னும் சிலரோ, மணி ஹெய்ஸ்ட், மால் காப் போன்ற வெளிநாட்டுப் படங்களையும், வெப்சீரிஸ்களையும் ஒப்பிட்டு பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

படக்குழுவைச் சேர்ந்த பலர் ஊடகங்களில் பேட்டி அளிக்கும்போத, இது தொடர்பான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டன. எல்லோரும் ஒட்டுமொத்தமாக அளித்த ஒரே பதில், "ரசிகர்களை விஜய் ஏமாற்றமாட்டார்" என்பதே.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து நெல்சன் எழுதி இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியீடு வரையிலான பீஸ்ட் படம் தொடர்பான சுவாரசிய தகவல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

  • 'தளபதி 65' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட விஜய்யின் 65வது படத்தின் தயாரிப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2020 ஜனவரி தொடக்கத்தில் வாங்கியது. படத்தை எழுதி இயக்கவிருந்த ஏ.ஆர்.முருகதாஸ், ஏதோ காரணத்ததால், அக்டோபர் 2020இல் படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் ஒப்பந்தமான நெல்சன், படத்திற்கு ஒரு புதிய ஸ்கிரிப்டை எழுதினார்.
பீஸ்ட் - விஜய் - நெல்சன் - பூஜா ஹெக்டே

பட மூலாதாரம், NELSONDILIPKUMAR

படக்குறிப்பு, பீஸ்ட் படக்குழுவினருடன் நடிகர் விஜய்
  • டிசம்பர் 2020இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. டெல்லி மற்றும் ஜார்ஜியாவில் ஆங்காங்கே அடுத்தடுத்தகட்ட படப்படிப்புகள் நடந்தன.
  • படத்தின் பெரும் பகுதி, ஒரு மாலுக்குள்ளேயே நடைபெறுவதால், உண்மையான மால் ஒன்றில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா பொதுமுடக்கத்தால் அது இயலாமல் போக, ஜார்ஜியாவில் உள்ள மால் ஒன்றில் படமெடுக்க படக்குழு முடிவு செய்தது. ஆனால், நம்ம ஊர் ஆட்களை படக்குழுவினரை அங்கே அழைத்துச்செல்வது சாத்தியமில்லை என்பதால், சென்னையிலேயே மால் செட் போட முடிவு செய்ததாக, படத்தின் கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
  • "முதலில் ஒரு ப்ளோர் மட்டும் செட் போட பிளான் செய்தோம். அதற்கு பின்பு மொத்தமாய் போட்டோம். மால் செட் 60 அடிக்கு மேல் போடணும்னா உட்புறம் - வெளியே என, தனித்தனியாக போடுவோம். ஆனால், இந்த செட்டை மொத்தமாக போட்டோம். 5 மாதத்தில் முடிக்க பிளான் செய்தோம். ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக மூன்று மாதத்தில் செட்டை போட்டு முடித்தோம்"என்று டி.ஆர்.கே.கிரண் கூறியிருந்தார்.
பீஸ்ட்

பட மூலாதாரம், SUN PICTURES/BEAST

  • கத்தி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து விஜய்க்காக அனிருத் இசையமைக்கும் மூன்றாவது படமாக அமைந்துள்ளது பீஸ்ட். அதேபோல், கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து நெல்சனுடனான கூட்டணியிலும் அனிருத்துக்கு இது மூன்றாவது படமே.
  • படத்தின் நாயகி, ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே, இருவரில் ஒருவராகத்தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. படப்பிடிப்பு, டிசம்பர் 2020-ல் தொடங்கிய நிலையில், பூஜா ஹெக்டே-தான் நாயகி எனும் தகவலை 2021 மார்ச் மாதம்தான் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, அச்சமயத்தில் ரசிகர்களால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனாலும், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சில ஹிட் படங்கள் கொடுத்துவிட்டு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார்.
  • இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது பீஸ்ட்டுக்கு கூடுதல் சிறப்பு. நடிப்பது என முடிவு செய்து களத்தில் இறங்கிய செல்வராகவன், பல படங்களில் கமிட் ஆகியிருந்தாலும், வெளியாகும் முதல் படம் இதுவே.
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: