பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு: எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Lyca productions
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் இன்று வெளியிடப்பட்டது.
திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுகு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா, மோகன் லால், அமிதாப் பச்சன், மகேஷ் பாபு மற்றும் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் டீசரை வெளியிட்டனர்.
கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்கி படமாக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தி, அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக இவர்களின் கதாப்பாத்திரங்களுக்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் வழக்கமாக இருக்கும் மணிரத்னம், ரஹ்மான் மற்றும் வைரமுத்து கூட்டணி இல்லை.
இன்று டீசர் வெளியீட்டு விழா மேடையில் பேசிய மணிரத்னம், "பொன்னியின் செல்வன், எம்ஜிஆரால் படமாக நடிக்க வேண்டியது. இதை பலர் படமாக எடுக்க முயற்சி செய்தனர். நானும் மூன்று முறை இதை படமாக்க முயற்சி செய்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கான காலம் வந்துள்ளது.
கொரோனா காலத்தில், பொதுமுடக்கத்தின் இடையே படப்பிடிப்பை நடத்தினோம்." என்றார்.

பட மூலாதாரம், Lyca productions
அதன்பிறகு பேசிய இசையமைப்பாளர் ஏ ஆர். ரஹ்மான், பொதுமுடக்கத்திற்கு மத்தியில் படத்தில் சிறப்பாக பணி செய்த படக்குழுவை பாராட்டினார்.
டீசர் எப்படி?
சுமார் ஒரு நிமிடம் 21 நொடிகள் உள்ள டீசரில் வரும் போர் காட்சிகள் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஏறக்குறைய படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் டீசரில் தோன்றினாலும் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமின் வசனங்கள் மட்டும் வருகிறது.
பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோர் நடிக்கும் கதாபாத்திரங்களும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.
டீசரில் குந்தவையாக வரும் த்ரிஷாவும், நந்தினியாக வரும் ஐஷ்வர்யா ராயும் நேருக்கு நேர் பார்க்கும் காட்சியை ரசிகர்கள் பாராட்டி சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












