You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாடும் நிலா எஸ்.பி.பி. நினைவில் உருகிய மனோ, சித்ரா, வசந்த், சிவக்குமார்: "மனிதர்கள் இருக்கும் வரை அவர் குரல் ஒலிக்கும்"
- எழுதியவர், ச.ஆனந்தப் பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'பாடும் நிலா' என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 76வது பிறந்த நாள் இன்று.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் தன் வசீகரக் குரலால் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட அவருடனான நினைவலைகளை அவருடன் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த திரைத்துறை கலைஞர்கள் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.
"அவர் இல்லாத குறையை உணர்கிறேன்!"
பின்னணி பாடகர் மனோவிடம் எஸ்.பி.பி. பிறந்தநாளுக்காக பிபிசி தமிழிடம் பேசிய போது, "எஸ்.பி.பி. அவர்களை எப்போதும் அண்ணன் என்று தான் அழைப்பேன். அந்த அளவிற்கு வேலை என்பதை தாண்டியும் அவருடனான உறவு எனக்கு இருந்தது. அவர் இல்லாத குறையை ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அவர் இருப்பது போன்ற நிம்மதியை அவரது குரலால் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் சாதாரண மனிதர் இல்லை. கந்தர்வர். எனக்கு தெரிந்து உலகமும் மனிதர்களும் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்து கொண்டேதான் இருக்கும்.
இசை மேல் அவருக்கு இருந்த காதல், அர்ப்பணிப்பைப் பார்த்து தான் நாங்கள் அவரின் விசிறிகள் ஆனோம். அப்போது எல்லாம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளுக்கான பாடல் பதிவுகள் எல்லாம் சென்னையில் ஒரே இடத்தில் தான் நடக்கும். அந்த சயமத்தில் ஒரே நாளில் பல மொழிகளில் இருபது பாடல்கள் வரைக்கும் பதிவு செய்திருக்கிறார். அந்த அளவு இசை மீது காதல் கொண்டவர்," என்ற மனோ எஸ்.பி.பியை முதலில் பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.
"முதலில் 1979 என்று நினைக்கிறேன். ஒரு தெலுங்கு படத்தில் எம்.எஸ்.வி. அய்யாவின் பாடல் பதிவிற்காக வந்திருந்தார். அந்த படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அப்போதிருந்து அவர் என் மீது மாறாத அன்பு வைத்திருந்தார். அண்ணன், அப்பா என்ற ஸ்தானத்தில் அவரை வைத்திருந்ததால் அவர் என்னை எப்போதுமே சக போட்டியாளராக பார்த்தது இல்லை. என்னை மட்டுமில்லை யாரையுமே அவர் அப்படி நினைத்தது இல்லை. அவரை போலவே என் குரல் அமைந்தது எனக்கு பெரிய பலம். நான் வளராத காலத்தில் எனக்கு தைரியம் கொடுக்க என் திருமணத்திற்கு வந்த பெரியவர் அவர்" என்று நெகிழ்வோடு பகிர்ந்தார்.
"பாடகர் எஸ்.பி.பி.தான் எனக்கு பிடித்த முகம்!"
பின்னணி பாடகி சித்ரா முன்பு பிபிசி தமிழுக்கு அளித்திருந்த பேட்டியில், "எஸ்.பி.பி. அவர்கள் எனக்கு மூத்தவர். எப்போதும் அவரிடம் எனக்கு நிறைய மரியாதையும் அன்பும் உண்டு. தான் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் அது எதையும் காட்டி கொள்ளாமல் எங்களிடம் இயல்பாக பழகுவார். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எனக்கு அவருக்கு பன்முகங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது எஸ்.பி.பி. என்ற பாடகரைத்தான். நடிப்போ அது பாட்டோ எந்த விஷயம் எடுத்தாலும் அதில் முழுமையாக இறங்கிவிட வேண்டும் என்று நினைப்பார்.
தெலுங்கில் கீரவாணி இசையில் பாடிய ஒரு பாடலும், தமிழில் 'தகிட ததிமி' பாடலும் அவர் பாடியதில் நான் வியந்து கேட்டவை" என்கிறார்.
"எஸ்.பி.பி. குரலுக்காக பதிவு செய்த தனி பாடல்!"
தனக்குப் பல வெற்றிப் பாடல்களை கொடுத்த எஸ்.பி.பி. குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் சிவக்குமார், "எஸ்.பி.பி. எனக்கு முதன் முதலாக பாடிய பாடல் 'பால்குடம்' படத்தில் மல்லிகை பூ வாங்கி வந்தேன் என்பதுதான். இதற்கு முன்பே 'சாந்தி நிலையம்' உள்ளிட்ட படங்களில் சில பாடல்கள் பதிவு செய்திருந்தாலும் முதலில் வெளியானது என்னுடைய படப்பாடல்தான். அதற்கு பிறகு 'கண்காட்சி', 'சிட்டுக்குருவி' என என்னுடைய பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
என் நூறாவது படமான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் வரும் 'உச்சி வகுந்தெடுத்து' பாடலை எஸ்.பி.பி. பாடியதை கேட்டதும் அந்த பாடலை மட்டும் படப்பிடிப்பு எல்லாம் முடித்துவிட்டு தனியாகப் படமாக்கினோம்.
பாலு என்னை விட ஐந்து வயது இளையவர். அதனால், எப்போதும் தம்பி என்றே உரிமையாக அழைப்பேன். தன் சுவாசத்தையே இசையாக கொண்டவன் அவன். அதனால் தான் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடலை அவரால் பாட முடிந்தது. அவர் இல்லை என்றாலும் அவரது குரல் பாடல்கள் மூலம் என்றும் நிலைத்து இருக்கும்" என்றார்.
எஸ்.பி.பி-யை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன்?
எஸ்.பி.பி. நடிகராக பல படங்கள் நடித்திருந்தாலும் 'கேளடி கண்மணி' படத்தில் நாயகனாக அவர் நடித்ததும் 'மண்ணில் இந்த காதலின்றி' பாடலும் யாராலும் மறக்க முடியாதவை. அதில் எஸ்.பி.பியை நடிக்க வைக்க சம்மதிக்க வைத்த கதையை நினைவு கூர்ந்தார் இயக்குநர் வசந்த். "மனதில் உறுதி வேண்டும் படத்தில் நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். அதில் ஒரு சிறிய வேடத்தில் எஸ்.பி.பி. நடித்திருப்பார். அவரை நல்ல நடிகராக அந்த படத்தில் இருந்தே என் ஆழ்மனதில் பதிய வைத்திருந்தேன். அதனால் நான் இயக்குநரான பின்பு என் முதல் படத்தில் அவர்தான் கதாநாயகன் என முடிவு செய்தேன்.
அவரிடம் இதில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, 'இந்த படம் சரியாக போகவில்லை என்றால், என்னுடைய பாடல் கரியரும் பின்னுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் இந்த ரிஸ்க்கை எடுக்கிறாய்?' என்று சிரித்து கொண்டே கேட்டார். ஆனால், அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டேன். இந்த படத்தில் உள்ள 'மண்ணில் இந்த காதலின்றி' பாடல் முதலில் திரைக்கதையில் இல்லை. இந்த கதாப்பாத்திரத்திற்கான பாடல் திறமையை படத்தில் காட்ட எப்படி காட்சிப்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் மூச்சு விடாமல் பாடும் ஐடியா தோன்றியது. இதை அவரிடம் சொன்ன போது முதலில் சிரித்து விட்டு பின்பு பாடி கொடுத்தார். அவர் இறக்கும் வரைக்குமே அவரது குரலுக்கு வயதாகவில்லை. எந்த அலட்டலும் இல்லாத எளிமையான மனிதர்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்