இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள்: பண்ணைப்புரத்து ராசய்யா மாஸ்ட்ரோ ஆன கதை

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் சினிமாவில் எழுபதுகளில் ஆரம்பித்து, தலைமுறைகள் கடந்து பலராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார் இளையராஜா.

இசையமைப்பாளராக, பாடகராக தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி கொண்டிருப்பவர் இன்று தன்னுடைய எண்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

* பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜாவுக்கு வரதராஜன், கங்கை அமரன் என இரு சகோதரர்கள் உண்டு. இதில் வரதராஜன் அப்பொழுது காங்கிரஸ் கட்சிக்காக பிரசார கச்சேரிகளில் பாட தொடங்கினார். அவர் மூலமாக இளையராஜாவும் இந்த வகையான பிரசார கச்சேரிகளில் பங்கு கொண்டு அதன் மூலம் கிடைத்த தொடர்புகளிலேயே சினிமா துறைக்குள் நுழைந்தார்.

* ஞானதேசிகன் என்ற இயற்பெயர் கொண்டவருக்கு பள்ளியில் சேர்க்கும் போது ராசய்யா என பெயர் மாற்றினார் தந்தை. பின்பு இசை கற்க சென்ற தன்ராஜ் மாஸ்டர் ராஜா என்று திருத்த, இளையராஜாவை 'அன்னக்கிளி' படம் மூலம் அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் 'இளைய'ராஜா என்று மாற்றினார்.

* சினிமாவில் நுழைவதற்கு முன்பு இளையராஜாவும் அவரது சகோதரர்களும் நாடகங்கள் போடுவது வழக்கம். அது மட்டுமில்லாமல் தினமும் சொந்த ஊரான பண்ணை புரத்தில் அவர்கள் வீட்டில் மாலை நேரத்தில் ஊர் மக்கள் கூடி இருக்க இசை கச்சேரிகளை அவர்கள் நடத்துவது வழக்கம்.

* தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரீதிகௌளை இசையை பயன்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜா தான். 'கவிக்குயில்' என்ற படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடலில் அது பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

*பெரும்பாலும் திரைக்கதைக்கு ஏற்றவாறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் இயக்குநர்கள் இசையமைப்பாளர்களிடம் இசை கேட்பார்கள். ஆனால், இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களுக்காகவே கதை எழுதி இயக்கிய திரைப்படங்களும் உண்டு. அவை 'அரண்மனைக்கிளி' மற்றும் 'வைதேகி காத்திருந்தாள்'.

* அதேபோல படத்தின் கதையை கேட்காமல் இளையராஜாவின் பாடலுக்கான சூழ்நிலையை வைத்து உருவாக்கிய படம் 'கரகாட்டக்காரன்'.

*இளையராஜா ஒரு முறை ஜப்பானுக்கு போன போது அங்கு எலக்ட்ரானிக் வாத்திய கருவிகள் செய்யப்படும் இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு தங்களுடைய சமீபத்திய கண்டுபிடிப்பை இளையராஜாவிடம் காட்டி இருக்கிறார்கள். அதாவது ஒரே வாத்தியக் கருவி மூலம் பல வாத்தியக் கருவிகளை இசைத்து 2000க்கும் அதிகமான இசையை உருவாக்கி அதை கணினியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதை வாசித்துப் பார்த்த இளையராஜா பின்பு கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் இணைத்து அந்த கருவிகளில் இல்லாத இன்னொரு புது இசையை உருவாக்கினார். அதை பார்த்து இளையராஜாவின் திறமையில் பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

* ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் இளையராஜா. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய ரமண மகரிஷி ஆலயத்திற்கு தவறாமல் சென்று விடுவார்.

*வருடா வருடம் இளையராஜா இசைக்கச்சேரிகளை நடத்துவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இசை கச்சேரி நடக்காமல் இருந்தது. கொரோனா தீவிரம் சற்றே ஓய்ந்ததும் இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் அவரது இசை கச்சேரி நடந்தது இது போன்ற இசைக் கச்சேரிகளில் ராஜா தனது பாடல் உருவாக்க கதைகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார்.

அப்படி நடந்த இந்த வருட இசைக்கச்சேரியில் ராஜா 'நாயகன்' பட பாடல்கள் கதையை பகிர்ந்தார். இதில் 'நாயகன்' படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வேண்டும் என இயக்குநர் மணிரத்தினம் கேட்ட போது, இளையராஜா இசையமைத்த இரண்டு மூன்று பாடல் இசையில் 'தென்பாண்டி சீமையிலே' இயக்குநரை திருப்திப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் தாலாட்டு பாடலை மனதில் வைத்து இசையமைத்த 'நிலா அது வானத்து மேலே' பாடல் இசையும் பிடித்து போக, அதையும் படத்தில் பயன்படுத்த நினைத்திருக்கிறார் மணிரத்தினம். அதனால், ராஜாவிடம் இந்த தாலாட்டு பாடலை கொண்டாட்ட பாடலாக மாற்றி கொடுங்கள் என கேட்க அப்படி உருவானது தான் 'நிலா அது வானத்து மேலே' பாடல். இதே போல மிக குறைந்த நேரத்தில் அதாவது அரை மணி நேரத்திலேயே இளையராஜா இசையமைத்த பாடல் 'அவதாரம்' படத்தில் இடம்பெற்ற 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடல்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: