You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விக்ரம் திரைப்படம் - கமல்ஹாசனின் 1986 விக்ரம் எப்படியிருந்தது?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கமல் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகிவிருக்கிறது. இதற்கு முன்பாக கமல் நடித்து இதே பெயரில் வெளியான விக்ரம் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியது?
தற்போது ஒரு சினிமா எடுக்கப்படும்போது, அதன் ஒரு புகைப்படம் வெளியாகிவிட்டால்கூட, இயக்குநர்கள் பதறிவிடுகிறார்கள். ஆனால், 1980களின் மத்தியில் கமல் - சுஜாதா கூட்டணி துணிந்து ஒரு முயற்சியில் இறங்கியது. அதாவது, குமுதம் வார இதழில் ஒரு படத்தின் கதையை சுஜாதா தொடராக எழுத, அதே நேரத்தில் அந்தக் கதை படமாக்கவும்பட்டது. தொடரின் நடுவே அந்தப் படத்தின் ஸ்டில்களும் வெளியாகி ரசிகர்களுக்குப் பரவசமூட்டின. அந்தப் படம் விக்ரம்.
1985ல் கமலின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. 'ஒரு கைதியின் டைரி', 'காக்கிச் சட்டை', 'உயர்ந்த உள்ளம்' என தமிழில் பெரும் வெற்றிப்படங்களையும், 'சாகர்', 'கிராஃப்தார்' என இந்தியில் மெகா வெற்றிப்படங்களையும் கொடுத்துக்கொண்டிருந்தார் கமல். இந்தத் தருணத்தில்தான் சொந்தமாக, ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்க நினைத்தார் கமல். அப்படித்தான் 'விக்ரம்' என்ற புராஜெக்ட்டைத் துவங்க முடிவானது. படத்தின் கதை - வசனத்தை சுஜாதா எழுத, திரைக்கதையை கமலும் சுஜாதாவும் இணைந்து எழுதினார்கள்.
அந்த தருணத்தில் மிக வெற்றிகரமான இயக்குநராக இருந்தார் ராஜசேகர். ஒரே ஆண்டில், அதாவது 1985ல் ரஜினிகாந்திற்கு படிக்காதவன், கமலுக்கு காக்கிச்சட்டை என தமிழ் சினிமாவின் இரு துருவங்களுக்கும் வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தார் ராஜசேகர். அவரே விக்ரமை இயக்குவார் என முடிவுசெய்யப்பட்டது. குமுதத்தில் விக்ரம் படத்தின் கதை வாராவாரம் வெளியாக, வெளியாக மற்றொரு புறம் படப்பிடிப்பு வளர்ந்து வந்தது.
விக்ரம்: ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து சலாமியா வரை
1984 மார்ச் 15ஆம் தேதி விக்ரம் படத்தின் கதை தொடங்குகிறது. அஸ்ரஃப் ஹுசைன், ஃப்ரான்சிஸ் அடைக்கல ராஜ், டி.சி. போரா என்ற மூன்று தேசத் துரோக குற்றவாளிகளுக்கு தலா 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கிறது நீதிமன்றம். விரைவிலேயே வெளியில் வந்துவிடுவோம் என்ற சவாலுடன் சிறைக்குச் செல்கிறார்கள் மூவரும்.
இந்தத் தருணத்தில், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு 'அக்னிபுத்ரன்' என்ற பெயரில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்று அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த ஏவுகணை அதிரடியாக சுகிர்தராஜா (சத்யராஜ்) கும்பலால் கடத்தப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் விடுவிப்பதோடு, ஐந்து கோடி ரூபாய் பணமும் கொடுத்தால்தான் ஏவுகணையைக் கொடுப்போம் என்கிறார்கள்.
அவ்வளவு பெரிய ஏவுகணை எங்கே போனதென்றும் தெரியவில்லை. இதையடுத்து 'ரா'வில் உள்ள மூத்த அதிகாரியான ராவ், தனது முன்னாள் ஏஜென்டுகளில் ஒருவரான அருண்குமார் விக்ரமை (கமல்ஹாசன்) அழைக்கிறார்.
ஆனால், விக்ரம் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மனைவியுடன் (அம்பிகா) தேனிலவில் இருக்கிறார். ஆகவே, இந்தப் பணியை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில், மனைவி திடீரென கொல்லப்பட, அக்னிபுத்ரனை கண்டுபிடிக்க 'வான்டடாக' வந்து வண்டியில் ஏறுகிறார் விக்ரம்.
இதற்குப் பிறகு, அதே அலுவலகத்தில் உளவாளியாக இருக்கும் தங்கராஜைப் (ராகவேந்தர்) பிடித்து விசாரிக்கிறார்கள். அவர், சுகிர்தராஜா பெயரைச் சொல்லிவிட்டு செத்துவிட, சுகிர்தராஜாவைத் தேடி சலாமியா என்ற தேசத்திற்கு செல்கிறார் விக்ரம். கூடவே, ப்ரீத்தி (லிசி) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரும் வருகிறார். ஏனென்றால் பத்து நாட்களுக்குள் செயலிழக்கச் செய்யாவிட்டால், அந்த ஏவுகணை தானாகவே வெடித்துவிடுமாம்.
அந்த சலாமியா தேசத்திற்கு ராஜாவும் அழகான ஒரு தங்கையும் (பெயர் இனிமாசி) இருந்தாலும், ஒரு மந்திரவாதியின் பிடியிலிருக்கிறது தேசம். அங்கே உள்ள எலி கோயிலில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது அந்த ஏவுகணை. இதற்கிடையில், இனிமாசிக்கு விக்ரம் மீது காதல் வந்துவிடுகிறது. இதைப் பார்க்கும் ப்ரீத்திக்கு, பொறாமை வருகிறது. ஆனால், சுகிர்தராஜா காரியமே கண்ணாக இருக்கிறார்.
அவருக்கு விக்ரம் ஒரு 'ரா' ஏஜென்ட் என்பது தெரிந்துவிட, ஒரே களேபரம். இதற்கு நடுவில் ஏவுகணை புறப்பட்டுவிட, அதை வங்கக் கடலுக்கு திருப்பிவிடுகிறார் விக்ரம். ஒரு க்ளைடர் விமானத்தில் நடக்கும் சண்டைக்குப் பிறகு, எல்லாம் சுபம். இனிமாசியும் ப்ரீத்தியும் காதலைச் சொல்ல, விக்ரம் தப்பி ஓடுவதாக முடிகிறது படம்.
சுஜாதாவின் வசனங்கள்
படத்தில் தமிழ் அரசியல்வாதிகளைக் கேலி செய்திருந்தார் சுஜாதா. ஏவுகணை காணாமல்போன பிறகு, படைத் தளபதிகள், 'ரா' உயரதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது. அதற்கு சற்றுத் தாமதமாக வருகிறார் அரசியல்வாதியான வி.கே. ராமசாமி. ஐந்தாவது வட்டத்தில் தண்ணீர் தொட்டி திறக்கப்போனதாகச் சொல்கிறார் (பிரச்னையின் தீவிரம் புரியாத அரசியல்வாதி!).
பிறகு, ஏவுகணை காணாமல் போன விஷயமும், அதன் தீவிரமும் அவருக்கு விளக்கப்படுகிறது. அப்போது வி.கே. ராமசாமி கேட்கிறார், "இங்க வெடிச்சா ஆம்பூர் வரைக்கும் கேட்குமா?" அதற்கு பதிலளிக்கும் ராவ், (சாருஹாசன்) "கேக்குறது மட்டுமல்ல, புல்லு பூண்டு இல்லாம அழிஞ்சு போகும்." என்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்துபோகும், வி.கே. ராமசாமி, "ஐய்யய்யோ சீக்கிரம் கண்டுபிடிங்கைய்யா, ஆம்பூர்ல என் நிலத்தில கரும்பு போட்டிருக்கேன்" என்பதாக அந்தக் காட்சி நிறைவடையும்.
இதற்குப் பிறகு, விக்ரம் ப்ரீத்தியுடன் பேசும் ஓர் உரையாடல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தான் ஐஐடியில் படித்த கம்ப்யூட்டர் பொறியாளர் என்பார் லிசி. பதிலுக்கு கமல், "பரவாயில்ல, பொம்பளைங்ககூட படிக்கிறீங்க" என்பார். அதைக்கேட்டு ஆவேசமடையும் லிசி, "என்ன பொம்பளைங்ககூட? ஆம்பளைங்க செய்யிற அவ்வளவு வேலையும் நானும் செய்வேன்" என்பார். உடனே கமல், "நான் வெயில் காலத்தில வேர்த்தா சட்டையை அவுத்துட்டு அலைவேன். நீ எப்படி..?" என்று சொல்வார். இந்தக் காட்சி அந்தத் தருணத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.
1986 மே 29ஆம் தேதி 'விக்ரம்' வெளியானது. சென்னையில் சத்யம், சங்கம், ஸ்ரீ கிருஷ்ணா, பிருந்தா, காசி ஆகிய திரையரங்குகளில் வெளியானது. கிருஷ்ணவேணியில் பகல் காட்சி மட்டும்.
இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தவர் இளையராஜா. பாடல்கள் எல்லாமே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, 'விக்ரம்' என்ற டைட்டில் பாடல். ஜேம்ஸ் பாண்ட் படங்களின் துவக்கத்தில் வரும் இசைத் தொகுப்புகளின் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் பாடல், அந்த காலகட்டத்தில் பெரும் அதிசயமாகத்தான் இருந்தது. அதுபோக, 'வனிதாமணி', 'மீண்டும்... மீண்டும் வா', 'ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி' ஆகிய பாடல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படத்தின் மூலம்தான் லிசி, தமிழுக்கு அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பாத்திரத்தின் பெயரான "ப்ரீத்தி" என்று டைட்டில் கார்டில் வெளியானது. சுகிர்தராஜாவாக நடித்திருந்த சத்யராஜின் வித்தியாசமான கெட்டப்பும் (படம் நெடுக கோட் அணிந்திருப்பார்) கிண்டலான பேச்சும் கவனிக்கப்பட்டன. சலாமியா தேசத்தின் ராஜாவாக அம்ஜத்கானும் தங்கை இனிமாசியாக டிம்பிள் கபாடியாவும் நடித்திருந்தார்கள். டிம்பிள் கபாடியாவுக்கு இது ஒன்பதாவது படம். தமிழில் முதல் படம். அதற்கு முந்தைய ஆண்டு இந்தியில் வெளியான சாகரில் கமலும் டிம்பிளும் இணைந்து நடித்திருந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் அதாவது சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது இந்தப் படம். எதிர்பார்த்த அளவு மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெறவில்லையென்றாலும், அந்த காலகட்டத்திற்கு புதுமையான திரைப்படமாக இருந்ததால், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது.
இதே ஆண்டில்தான் ரஜினிகாந்த் முதல் முறையாக தயாரித்த திரைப்படமான மாவீரன் வெளியானது. அந்தப் படத்தையும் ராஜசேகரே இயக்கியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்