'விக்ரம்' லோகேஷ் கனகராஜ்: "கமல் ஹாசனுக்கான வசனங்கள் படத்தில் குறைவுதான்"

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா.
    • பதவி, பிபிசி தமிழுக்காக

முதல் படமான 'மாநகரம்' மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகர் கமல்ஹாசனின் சினிமா பணிகளால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்குள் வந்தவர் இன்று அவருடைய நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கியுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் 'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தினை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேர்ஷனல் தயாரித்து இருக்கிறது.

'விக்ரம்' படம் தொடர்பாக பிபிசி தமிழுக்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியிலிருந்து,

கே: நீங்கள் தீவிரமான கமல்ஹாசன் ரசிகர். அவரைப் பார்த்துதான் சினிமாவுக்குள் வந்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது உங்களது நான்காவது படத்திலேயே அவரை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 'விக்ரம்' படத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

பதில்: "சினிமாவில் எனக்கு அவர்தான் முன்மாதிரி. அப்படி இருக்கும் போது அவருடன் பணிபுரிய அனைவருக்கும் அந்த வாய்ப்பு சீக்கிரம் கிடைக்காத போது எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது முதலில் எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் உண்மையில் அது பெரிய process தான். அது குறித்தான அழுத்தத்தை எடுத்து கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனெனில், அப்படி எடுத்து கொண்டால் அது நம் வேலையை பாதிக்கும். சரியாக செயல்பட முடியாது என்பதால் அந்த அழுத்தத்தை எடுத்து கொள்ளவில்லை.

மேலும், இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு மேலாக அதில் இருக்கிறேன். படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பே கமல் அவர்களுடன் நன்றாக பேசி பழகி விட்டோம். அந்த comfort zone-க்குள் வந்த பிறகு படப்பிடிப்பு எளிதாகவே இருந்தது.

இன்னும் சொல்லப்போனால், நாம் எழுதிய கதையின் கதாப்பாத்திரங்களை களத்தில் முதல் நாள் கொண்டு வந்து நிறுத்தி இந்த படத்தை நாம் எப்படி எடுத்து போக போகிறோம் என்ற பதட்டம் இருந்தது. ஆனால், அது அடுத்தடுத்த நாட்களில் வேலையின் தீவிரமாக மாறி விடும். இது வழக்கமாக என் மற்ற படங்களுக்கும் இருக்கும்".

கே: 'விக்ரம்' படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் என அதிக நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறார்கள். 'விக்ரம்' படத்தில் மட்டுமல்ல உங்களுடைய முந்தைய படங்களிலுமே கூட இதுபோல பல நட்சத்திரங்களை கையாண்டு இருக்கிறீர்கள். உண்மையில் கதைக்கு அவர்கள் தேவைப்படுகிறார்களா அல்லது வணிகரீதியாக எடுத்து வருகிறீர்களா?

பதில்: வணிகரீதியாக என்று நான் எடுத்து வந்தால் அவர்களுடைய கதாப்பாத்திரங்கள் அனைத்திற்கும் நான் சரிசமமான முக்கியத்துவம் தருகிறேனா என்பது இருக்கும். அதனால், நீங்கள் கதையாக ஒரு விஷயத்தை அணுகினால் கதைக்கு என்ன தேவை அதற்கு அவர்கள் பொருந்தி போவார்களா என்பதோடு முடிந்து விடும். பட உருவாக்கத்தை பொருத்தவரை நல்ல கதாப்பாத்திர தேர்விலேயே 50% படம் முடிந்து விடும் என்பார்கள். அதை உறுதியாக நம்புபவன் நான்.

என்னுடைய ஆரம்ப படத்தில் இருந்தே பல நட்சத்திரங்கள், பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை (Multi Starrer, Multi Layers Of Story) கையாள்வதால் 'விக்ரம்' படத்தில் அது எனக்கு எளிதாகவே இருந்தது.

மேலும், நடிகர்கள் அனைவருக்கும் என்ன கதை, எப்படி நடிக்க போகிறோம், என்னுடைய முந்தைய படங்களின் மூலம் நான் எப்படி வேலை பார்ப்பேன் என்ற விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும். அதனால், எல்லாருக்கும் வேலை எளிதாகவே இருந்தது.

கே: நீங்கள் மட்டுமில்லாமல், படத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி, பகத் என அனைவருமே கமலுடைய ரசிகர்கள். அவர்களை நீங்கள் படத்தில் தேர்ந்தெடுக்கும் போது என்ன சொன்னார்கள்?

பதில்: எல்லாருமே சேர்ந்ததுதான் ஒரு படம். அதில் உங்களுடைய மகிழ்ச்சி என்னவோ அதை நீங்கள் மொத்த அணிக்கும் பரப்புவது முக்கியமானது. சீரியஸான கதைக்களம், இரவு முழுக்க படப்பிடிப்பு எனும் போது இதை எல்லாம் தாண்டி உங்களது மகிழ்ச்சியை தொழில்நுட்ப கலைஞர்களும் உணர வேண்டும்.

அதுவும் இல்லாமல் கமல் சார் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். அதை அவரது ரசிகன் இயக்குகிறான் எனும் போது அனைத்தும் சரியாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. அனைவரும் அந்த பொறுப்பை உணர்ந்து, சரியாகவே செய்திருக்கிறார்கள்.

கே: ஒவ்வொரு இயக்குநர் படங்களிலும் சில விஷயங்கள் தவறாமல் இருக்கும். அதுபோல, உங்கள் படங்களில் இரவு நேரம் நடக்கும்படியான கதைக்களம், பிரியாணி இந்த விஷயங்கள் தொடர்ச்சியாக அமைக்க தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இருக்கிறதா?

பதில்: அது ரசிகர்களுக்கான ஒரு சின்ன மகிழ்ச்சி கொடுக்கும் விஷயம் தான். ஒரு படத்தில் ரசிகர்கள் ஒன்றை குறிப்பிட்டு உங்களுடைய அடையாளம் என சொன்னால் அது மகிழ்ச்சி தானே! நமக்கு பிடிக்கும் ஒரு விஷயம் ரசிகர்களுக்கும் பிடிக்கிறது என்றால் அதை மீண்டும் மீண்டும் செய்வதில் தவறில்லையே?"

கே: ஆனால், அது ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு சலித்து விடாதா?

பதில்: அப்போது மாற்றி கொள்வேன். என் படங்களில் அந்த excitement விஷயம் ரசிகர்களுக்கு சலிப்பு வருகிறது எனும் கட்டத்தில் அதை நாம் திரும்ப செய்வதில் அர்த்தமில்லை".

கே: இசை வெளியீட்டு விழாவில் முதன் முறையாக விஜய்சேதுபதிக்கு ஒருவர் நடிப்பு சொல்லி கொடுத்ததாக சொன்னீர்கள். அந்த அளவுக்கு அவருடைய கதாப்பாத்திரத்தில் என்ன ஸ்பெஷல் அல்லது ஏன் அது தேவைப்பட்டது?

பதில்: இரண்டு விஷயங்கள்தான். விஜய்சேதுபதி கதாப்பாத்திரம் எப்படி இருக்கும், எப்படி செயல்படும் என்று ஒரு study இருந்தது. அதை ஒரு பயிற்சியாளர் வைத்து செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது முதல் விஷயம்.

இரண்டாவது, 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து விஜய்சேதுபதியுடன் வில்லன் கதாப்பாத்திரங்களிலேயே அவருடன் வேலை செய்கிறேன். அதனால், 'மாஸ்டர்' பவானி கதாப்பாத்திரம் இதில் தெரிய வேண்டாம் என்பதற்காக நானும் அவருமே பேசி பூஜா தேவரியா என்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டை கொண்டு வந்து அவருக்கு அந்த கதாப்பாத்திரத்திற்கான பயிற்சி கொடுத்தோம்.

கே: 'விக்ரம்' படம் பொருத்தவரை கமல்ஹாசன் உங்கள் வேலையில் அதிகம் தலையிடவில்லை, இயக்குநராக தயாரிப்பாளராக அவர் முழு சுந்ததிரம் கொடுத்தார் என சொல்லி இருந்தீர்கள். அவர் inputs கொடுத்திருக்கலாம் என தோன்றியதா இல்லை இப்படி இருந்ததே பிடித்திருந்ததா?

பதில்: தமிழ் சினிமாவில் என்னை பொருத்தவரைக்கும் கமலின் வயதிற்கு ஏற்ற அனுபவம் உள்ள ஆட்கள் மிகக்குறைவு. அப்படி ஒரு துறையில் மிகச் சிறந்தவராக விளங்குபவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளதான் வேண்டும். அதற்காக அவர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அர்த்தம் அல்ல அதை ஒரு அனுபவமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த படத்தில் இல்லை என்றாலும் இனி வரும் படங்களில் தேவைப்படும்போது அதை எடுத்துக்கொள்ளலாம். இந்த படம் பொருத்தவரை கமல் சார் ஏதாவது ஆலோசனை கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அப்படி எதுவும் செய்யவில்லை. அவருக்கு என்னுடைய முந்தைய படங்களின் வேலை பிடித்ததால் தான் இதில் பணியாற்ற முடிவு செய்திருக்கிறார். எல்லோரும் அவர்கள் வேலையை சரியாக செய்யும் பொழுது இன்னொருவர் தலையிட வேண்டும் என்பதிலேயே!

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் பொருத்தவரைக்கும் கமல் அவருடைய படப்பிடிப்பு நாட்களில் மட்டும் வந்து, என்ன காட்சி தருகிறோமோ அதை முடித்துக் கொடுத்து விடுவார். அவருடைய பொறுமையும் வேலையின் மீதான அக்கறையும் எங்களுக்கு எப்போதும் ஆச்சரியமான விஷயமாக தான் இருந்தது.

கே: சமீபத்தில் உங்கள் பிறந்த நாளின் போது கமல் மிகச் சரியாக 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். கமல் இதுபோல சமீபத்தில் ஒருவருக்கு மிகச் சரியாக 12 மணிக்கு வாழ்த்து சொல்வது இதுதான் முதல் முறை என்று பலர் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதேபோல இசை வெளியீட்டு விழாவிலும் முன்னோட்ட காட்சி ஒளிபரப்பப்பட்டபோது உங்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர்- இயக்குநர் என்பதை தாண்டி உங்கள் இருவருக்கிடையே உறவு எவ்வளவு சிறப்பானது?

பதில்: மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற அழுத்தம் இருந்தாலும் கூட, முதலில் எனக்கு இருந்த பதட்டம், நான் எழுதிக் கொடுத்த எழுத்து அவருக்கு பிடிக்க வேண்டும். அவரை நான் இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. தயாரிப்பாளராக, நடிகராக அவருக்கு என் எழுத்து பிடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி அவரை பார்த்து வளர்ந்து அவரால் சினிமாவுக்குள் வந்த பையன், என் கதையை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு மேலோங்கி இருந்தது.

அதில் ஜெயித்து விட்டேன் எனும்போது மற்றதெல்லாம் எளிதாகவே நடந்தது. நீங்கள் சொல்வது போல அவர் எனக்கு மிகச்சரியாக பணிரெண்டு மணிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என்றால் என்னுடைய பணி, என்னுடைய படங்கள் அவருக்கு பிடித்து நன்மதிப்பை பெற்றிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் ட்வீட் செய்தது மட்டும் இல்லாமல் எனக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வந்தது என்பதெல்லாம் என் தொழில் மூலம் அவரிடம் நான் மரியாதையை பெற்றிருக்கிறேன் என்பதை தான் எனக்கு உணர்த்தியது. மொத்த படமுமே எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் தான்".

கே: பழைய 'விக்ரம்' படத்தின் கதைக்கும் இந்த 'விக்ரம்' கதைக்கும் தொடர்பில்லை என நீங்கள் கூறிய போதும் ஏன் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்: அந்த கதாப்பாத்திரன் பெயர்தான். பழைய 'விக்ரம்' படத்தில் அவர் ஒரு ஏஜெண்ட்டாக இருந்திருப்பார். அந்த கதாப்பாத்திரத்தை spin off செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. பழைய 'விக்ரம்' படத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அதை நீங்கள் இந்த படத்தோடு பொருத்தி கொள்ளலாம். மேலும் இந்த தலைப்பை, படத்தலைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் முடிவு செய்தோம். ஆரம்பத்தில் வேறொரு தலைப்புதான் வைத்திருந்தோம்.

அது வேண்டாம் என முடிவு செய்த பிறகு, 'விக்ரம்' கதாப்பாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்து அந்த spin off முயற்சி செய்ய வேண்டும் என்று தான் அந்த தலைப்பு வைத்தோம். கமல்ஹாசன் சினிமாவில் எவ்வளவு புதிய முயற்சிகளை செய்து இருக்கிறார்! அவரை பார்த்து வளர்ந்த நான், இந்த திரைக்கதையில் என்ன புதிதாக முயற்சி செய்ய முடியுமென பலவற்றை இந்த படத்தில் செய்து இருக்கிறேன்".

கே: 'விக்ரம்3' இப்படத்திற்கும் நீங்கள்தான் இயக்குநர் என்பதை உங்களை கேட்காமலேயே முடிவு செய்துவிட்டதாக கமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சொன்னார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?*

பதில்: அவர் சொல்லிவிட்டால் சொன்னதுதான். அதைவிட வேறு என்ன பெருமை எனக்கு இருக்கப்போகிறது!அதுமட்டுமில்லாமல், இந்த கதையில் பரீட்சார்த்த முயற்சிகள் நிறைய இருப்பதால் மக்களுக்கு அது எவ்வளவு தூரம் பிடிக்கிறது, எப்படி அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை எல்லாம் பொருத்து தான் இந்த படத்தின் அடுத்த பாகம் இருக்கும். அதைத்தான் கமல் சாரும் சொல்லியிருந்தார். நான் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று.

கே: கேன்ஸ் திரைப்பட விழாவில் 'விக்ரம்' படத்திற்காக கமல்ஹாசன் சென்றிருந்தார். ஆனால் படக்குழு நீங்கள் செல்லாததற்கு என்ன காரணம்?*

பதில்: முதலில் நாங்களும் செல்வதாக தான் திட்டம் இருந்தது. ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் படம் வெளியாகிறது. அதற்கான இறுதி கட்ட வேலைகளும் புரமோஷன் பணிகளும் இப்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் இல்லை என்றால் அதெல்லாம் பாதிக்கும். கேன்ஸ் போயிருந்தால் நிச்சயம் அது எங்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கும். டிக்கெட் எல்லாம் போட்டு கடைசி நேரத்தில் அது ரத்தானது.

இப்போதும் கூட புரோமோஷன் பணிகளுக்காக கமல் சார்தான் முழுமையாக இறங்கி இருக்கிறார். நாங்கள் இன்னும் பட வேலையில் தான் இருக்கிறோம். சென்னையில் இருக்கும் புரோமோஷன்களுக்கு மட்டும் தான் நான் வந்து கொண்டிருக்கிறேன். வேலை முடிந்தால் மற்ற இடங்களிலும் சாருடன் இணைந்து கொள்வேன்.

கே: படத்தின் முன்னோட்ட காட்சியில் கமல் பேசும் 'கடினமான சமயத்தில் வீரன் சொல்லும் வசனம் விடு பாத்துக்கலாம்' என்பது மிகப் பிடித்த ஒன்றாக சொல்லியிருந்தீர்கள். இது தவிர்த்து படத்தில் வேறு ஏதேனும் காட்சி அல்லது வசனம் மிகவும் ரசித்து உருவாக்கியது பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்?*

பதில்: இந்தப் படத்தில் வசனங்கள் மிகக்குறைவு தான். பெரும்பாலும் ஆக்ஷன் காட்சிகள் தான் இருக்கும். இதில் இருக்கும் எல்லா காட்சிகளும் வசனங்களுமே எனக்கு பிடித்தது தான். வழக்கமாக கமல் தன்னுடைய படங்களில் பேசும் வசனங்களை கூட இதில் பேசி இருக்க மாட்டார். இது என் உலகத்துக்குள் இருக்கும் கதை என்பதால் எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாமல் கதையோடு ஒன்றி வருவதால் இதுதான் என தனியாக பிரித்து சொல்ல முடியவில்லை.

கே: படத்தில் நடிகர் சூர்யா கடைசி நேரத்தில் வந்தது பற்றி சொல்லுங்கள்?*

பதில்: இந்த படத்தில் சூர்யாவுக்கு தன்னுடைய கதாப்பாத்திரம் குறித்து மிகவும் மகிழ்ச்சி. அவருக்கான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறது. அவருடைய கதாப்பாத்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம், பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், அது வெளியில் கசிந்து விட்டது".

கே: 'மாஸ்டர்' திரைப்படம் 50% லோகேஷ் படம், 50% விஜய் படம்' என்று சொன்னீர்கள். 'விஜய்67' எப்படி?

பதில்: கண்டிப்பாக நூறு சதவீதம் என் படமாக தான் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: