நெஞ்சுக்கு நீதி - உதயநிதியின் படம் ஊடகங்கள் பார்வையில் எப்படி?

போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தியில் வெளியான ஆர்டிக்கிள் 15 (Article 15) படத்தின் ரீ-மேக்கான இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ், சிவ கார்த்திகேயன் நடித்த கனா படத்தை இயக்கியவர்.
நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனன், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஷிவாங்கி கிருஷ்ணகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே; ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்; இசை: தீபு நைனன் தாமஸ்; இயக்கம்: அருண்ராஜா காமராஜ்.
இந்தப் படம் எப்படியிருக்கிறது என பல்வேறு ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
"பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தலித் சிறுமிகள் மூன்று பேர் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ஒரு சிறுமி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார். அவரை அந்த வழக்கை விசாரிக்கவிடாமல் மேலதிகாரியான காவல்துறை கண்காணிப்பாளரும் கீழதிகாரியான சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் அழுத்தம் கொடுக்கிறார்கள். மூன்று சிறுமிகளின் விவகாரத்தில் அமைச்சரின் அக்கா மகன் சம்பந்தப்பட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் விசாரிக்கத் தொடங்குகிறார் உதயநிதி. குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தாரா, காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை," என இந்தப் படத்தின் கதையை விவரித்துள்ளது தினமலர் நாளிதழ்.
ஒரு த்ரில்லர் படமாகக் கொடுக்க வேண்டிய கதையை சாதிய பாகுபாடுகள் இங்கு எப்படி இருக்கின்றன என்பதைக் காட்டும் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். அந்த சிறுமிகளின் வழக்கு விசாரணையையும் மீறி சாதிய பிரச்னைகளைத்தான் திரைக்கதை வசனத்தில் அதிகம் சேர்த்திருக்கிறார்கள் என்றும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஜாலியான ஹீரோவாக சந்தானத்துடன் காமெடி செய்து வந்த உதயநிதி ஸ்டாலின், தனது எதிர்காலத்தை நினைத்து மனிதன், சைக்கோ என கதையின் நாயகனாக மாறி வருகிறார். அந்த வரிசையில் நெஞ்சுக்கு நீதி அவரது நடிப்பை இன்னும் சற்று கூடுதலாகவே உயர்த்தி இருக்கிறது. அதிரடியான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் எல்லாம் இல்லை. நிறுத்தி நிதானமாக அதேநேரத்தில் ஆழமாக விசாரிக்கும் போலீஸ் கதாபாத்திர நடிப்பை பக்கவாகச் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்" என உதயநிதி ஸ்டாலினின் நடிப்பைக் குறிப்பிட்டுள்ளது ஃபில்மி பீட் இணையதளம்.

பட மூலாதாரம், Red Giant Movies/Twitter
"தமிழகத்தில் நடந்த நிறைய உண்மைச் சம்பவங்கள் படத்தின் திரைக்கதையில் பிரதிபலிக்கிறது. ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அவர் துன்புறுத்தப்பட்டு, அவர் சமைத்த உணவும் வீணாக்கப்பட்டதில் துவங்கி டாக்டர் அனிதா மற்றும் காவலர்களுக்கு இடையே இருக்கும் சாதிய பாகுபாடு என அனைத்து நிலையிலும் மண்டிக் கிடக்கும் சாதிப் பிரச்னையை, உண்மைச் சம்பவங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் முதல் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பாதியின் துவக்கத்தில் படம் கொஞ்சம் தொய்வடைவதாக உணர்ந்தாலும் மீண்டும் அதையடுத்த சில காட்சிகளில் சரி செய்து மிகத் திறமையாக இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
விஜயராகவனாக நடித்திருக்கும் உதயநிதி முதன் முறையாக ஊருக்குள் நுழைகிறார். அப்போது போனில் அவருடன் தொடர்பில் இருக்கும் தன்யாவிடம் "இங்க ஒரு அம்பேத்கர் சிலை இருக்கு. ஊருக்குள் வந்தாச்சுனு நினைக்கிறேன்," என்கிறார். அதற்கு தன்யா, "அம்பேத்கர் சிலை கூண்டுக்குள் இருக்கா?" எனக் கேட்டதற்கு, "இல்லை" என பதில் தருகிறார் உதயநிதி. "அப்போ இன்னும் ஊரு வரல" என்கிறார் தன்யா. இது ரொம்ப நுட்பமாக எழுதப்பட்ட காட்சியாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இக்காட்சி மூலம் அம்பேத்கர் சிலையை ஊருக்கு வெளியே வேண்டுமானால் பாதுகாப்புக் கூண்டு இல்லாமல் வைக்க முடியும். ஊருக்குள் அப்படி வைக்கும் நிலைக்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை எனக் கூறுகிறார் இயக்குநர். உண்மைதான்." என விவரிக்கிறது புதிய தலைமுறை இணையதளம்.

பட மூலாதாரம், PRO IMAGES
"ஆர்ட்டிகிள் 15 படத்தையே பெரும்பான்மையாகத் தழுவி எடுக்கப்பட்டாலும் நாயகியை தலித் பெண்ணாகவோ, களச் செயற்பாட்டாளராகவோ சித்தரித்திருந்தால் இன்னும் நெருக்கமான உணர்வைக் கொடுத்திருக்கும். ஆரி அர்ஜுனன் கதாபாத்திரத்தை அப்படி ஒரு முடிவுடன் விட்டதைத் தவிர்த்திருக்கலாம். பொது வாழ்க்கையில் அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பவர்களுக்கான முடிவு இப்படித்தான் அமையும் என்ற எதிர்மறை விளைவுக்கான தோற்றமாக அமைந்துவிடுகிறது.
மலம் அள்ளும் மனிதர்களின் துயரம், தலித் பெண் சமைத்தால் அதைச் சாப்பிடாமல் குப்பையில் கொட்டும் ஆதிக்க சாதியினரின் மனோபாவம், இந்தித் திணிப்பு, இருமொழிக் கொள்கை, அம்பேத்கரை இன்னும் சாதி சங்கத் தலைவராகவே பார்ப்பது, இட ஒதுக்கீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படுவது ஆகியவற்றைப் பதிவு செய்து கேள்விக்கு உட்படுத்தும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நேர்மையாகப் பணிபுரியும் மருத்துவருக்கு அனிதா என்று பெயர் சூட்டியிருப்பதன் மூலம் தன் சமூக அக்கறையைப் பதிவு செய்துள்ளார்" என்கிறது ஸீ நியூஸ் தமிழ் இணைய தளம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













