You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சமீரா ரெட்டி: "ஜடாவின் அலோபீசியா நோயால் நானும் பாதிக்கப்பட்டேன்"
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா எதிர்கொண்டு வரும் அலோபீசியா நோயால் தானும் பாதிக்கப்பட்டதாக பாலிவுட் பிரபல நடிகை சமீரா ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் கடந்தபோதும், அதில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த சம்பவம் இப்போதும் பேசுபொருளாகி வருகிறது.
'கிங் ரிச்சார்ட்' படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் முதன் முறையாக ஆஸ்கர் விருது வாங்கினார். அவருக்கு முன்னதாக நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கும் விருதைப் பெற்றார். அப்போது அவர் விழா மேடையில் இருந்தபடி பார்வையாளர்கள் வரிசையில் இருந்த வில் ஸ்மித் மனைவி ஜடாவை உடல் கேலி செய்யும் வகையில் பேசினார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடை ஏறி கிறிஸ் ராக்கை அவரது கன்னத்தில் அறைந்தார்.
பின்பு தனக்கு விருது வழங்கப்பட்டபோது ஆற்றிய ஏற்புரையின்போது கண்ணீர் மல்க தனது செயலுக்காக வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்தார். சமூக ஊடக பக்கத்திலும் தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கோரினார்.
இது குறித்து ரசிகர்களும் பல திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்திய நடிகராக இணைந்திருப்பவர் பாலிவுட் நட்சத்திரம் சமீரா ரெட்டி. இவர் சில தமிழ் படங்களிலும் நடித்தவர்.
ஆஸ்கர் சம்பவம் குறித்தும் ஜடாவின் அலோபீசியா நோயால் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நடிகை சமீரா ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
நம் எல்லோருக்குமே தனிப்பட்ட பிரச்னைகளும் அதில் நம்முடைய போராட்டங்களும் அதில் இருந்து நாம் மீண்டு வந்த கதையும் இருக்கும். அதை நாம் பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கையை கடத்த முடியும். இந்த ஆஸ்கர் சம்பவம் என்னை அதற்கு தூண்டி இருக்கிறது என சமீராவின் அந்த பதிவு தொடங்குகிறது.
அலோபீசியா ஏரியாட்டா நோய் என்றால் அது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலை என்றும் அது கூந்தல் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது என்றும் அந்த நோய் குறித்து சமீரா விளக்குகிறார். 'இது உங்கள் முடியின் செல் வேர்களை தாக்கி கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்தும். தலையில் வழுக்கை பிரச்னையை ஏற்படுத்தும். 2016ஆம் ஆண்டு எனது பின் தலையில் இரண்டு அங்குல வழுக்கையை கண்டறிந்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மேலும் இரண்டு வழுக்கை வந்தது.
இதை கையாள்வது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அலோபீசியா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் நிச்சயம் அது அவர்களை உடல் ரீதியாக சோர்வாக்காது. அது தொற்றும் தன்மை கொண்டதும் அல்ல. ஆனால், இதை உணர்வு ரீதியாக சமாளிப்பது கடினம்' என்கிறார் சமீரா.
'மீண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவேன்'
இதற்கான சிகிச்சையில் இருந்த போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு முடி உதிர்வுக்கு பிறகு மெதுவாக முடி மீண்டும் அந்த இடத்தில் வளரும். எனக்கு கார்டிகோ ஸ்டீராய்டு ஊசி போடப்பட்டது. பிறகு உதிர்ந்த இடத்தில் மெதுவாக முடி மீண்டும் வளர தொடங்கியதாக சமீரா அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
'ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் நிச்சயம் சரியாகும் என்ற தீர்வு இல்லை என்பது எனக்கு தெரியும். அதேபோல, இந்த நோயால் ஒருவர் ஏன் பாதிக்கப்படுகிறார் என்பதற்கு குறிப்பிட்ட காரணமும் கிடையாது. இதில் மொத்த முடியும் இழந்து தலை மொத்தமும் வழுக்கையாகும் "Alopecia totalis", தலையின் பகுதியில் ஆங்காங்கே முடி உதிர்வும் வழுக்கையும் ஏற்படுத்தும் Alopecia Ophiasis, தலையை தாண்டி உடலின் மற்ற பகுதிகளிலும் முடி உதிர்வை ஏற்படுத்தும் alopecia universalis என இந்த அலோபீசியாவில் வகைகளும் உண்டு.
ஆனால், இப்போது எனக்கு நல்ல ஆரோக்கியமான முடிகள் இருக்கிறது. இதற்கு நான் ஒவ்வொரு நாளும் நன்றி தெரிவிக்கிறேன். இது மீண்டும் எப்போது வேண்டுமானாலும் எனக்கு திரும்ப வரலாம் என்பதும் எனக்கு தெரியும். ஹோமியோபதி சிகிச்சை எடுத்து வருகிறேன். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் கொடுத்துள்ளது' என்பவர் இந்த பரபரப்பான உலகத்தில் மனிதர்கள் இது போன்ற விஷயத்தில் யோசித்து ஒருவர் மீது ஒருவர் கருணையுள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சமீராவின் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு இந்த அலோபீசியாவால் பாதிக்கப்பட்ட சிலரும் தங்களது அனுபவங்களை சமீராவோடு பகிர்ந்து வருவதை இந்த பதிவில் பார்க்க முடிகிறது.
உடல் கேலிகளை எதிர்கொண்ட சமீரா
2008ஆம் ஆண்டு தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா. திருமணத்திற்கு பின்பு கோவாவில் தற்போது வசித்து வருகிறார். தன்னுடைய குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு அதில் இருந்து மீண்டு வந்தது, சிறு வயதில் இருந்தே உடல் கேலியால் தான் சந்தித்த அவமானங்கள் அவற்றை எதிர் கொண்டு அதில் இருந்து வெளியே வந்தது ஆகியவற்றை #PerfectlyImperfect என்ற ஹேஷ்டேக் மூலம் சமீரா தொடர்ந்து பதிவிட்டு வருவது அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்