You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஷ்பு: "வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை கண்டித்ததில் தவறில்லை"
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நேற்று நடந்த 94வது ஆஸ்கர் விருது விழா மேடை விருதுகளை தாண்டிய பேசு பொருளாகி இருக்கிறது.
அதற்கு காரணம் நேற்று 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சியின் போது தன் மனைவி ஜடா பிங்கெட்டினை உருவ கேலி செய்ததற்காக ஆஸ்கர் மேடையிலேயே கிறிஸ் ராக்கைஓங்கி அறைந்த சம்பவம் தான்.
'என் மனைவியை பற்றி எந்தவொரு வார்த்தையும் இனிமேல் உன் வாயில் இருந்து வர கூடாது' என்று வில் ஸ்மித் கோபத்தோடு கண்ணீர் மல்க கிறிஸ் ராக்கை நோக்கி பேசியது நேற்று இணையத்தில் வைரலானது.
இது போன்ற வன்முறையை ஆஸ்கர் அனுமதிப்பதில்லை எனவும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் ஆஸ்கர் தரப்பு அறிவித்து இருந்தது.
இதனையடுத்து, 'Love Do Crazy Things! என்னை பற்றிய ஜோக்குகளை என்னுடைய பணியின் ஒரு பகுதியாக நான் ஏற்று கொள்வேன். ஆனால், எனது மனைவி குறித்தான மருத்துவ ரீதியிலான பிரச்சனையை கிறிஸ் அப்படி பேசியதும் என்னால் தாங்கி கொள்ள முடியாமல் உணர்ச்சி வேகத்தில் அப்படி செய்து விட்டேன். பொது வெளியில் வரம்பு மீறியதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த இந்த உலகத்தில் வன்முறைக்கு இடமில்லை' என தனது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
வில் ஸ்மித்தின் நேற்றைய ஆஸ்கர் மேடையின் செயலும் அதற்கு பிறகு அவரது மன்னிப்பு கடிதமும் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. இதற்கு பல பிரபலங்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நகைச்சுவை என்கிற பெயரில் தொடரும் உடல் கேலிகள், ரிலேஷன்ஷிப்பில் ஒருவரை ஒருவர் எப்படி மதிக்க வேண்டும், வில் ஸ்மித் இப்படி பொது வெளியில் அடித்தது சரியா என்ற ரீதியிலான விவாதங்களையும் பதிவுகளையும் திரைப்பிரபலங்களிடம் பார்க்க முடிகிறது.
இது குறித்து நடிகை குஷ்பு தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், வில் ஸ்மித்தின் செயலுக்கு மன்னிப்பு கேட்க சொல்வது கருணையற்றது. ஆனால் வில் ஸ்மித் தன் மனைவிக்காக நின்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இது போன்ற உடல் கேலிகளை ஒரு பெண் எதிர்கொள்ளும் போது அவளால் நிச்சயம் தனக்காக பேச முடியும். ஆனால், தனக்காக தன் கணவர் அதையே செய்யும் போது அவள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவள் தான். அவனை நோக்கிய அன்பும் மரியாதையும் இன்னும் அதிகரிக்கும் என்றும் மன்னிப்பு கேட்பதால் நீ தாழ்ந்து விடமாட்டாய் உன் மதிப்பை நீயே உயர்த்தி கொள்கிறாய் எனவும் வில் ஸ்மித்தின் இந்த செயலை பாராட்டி உள்ளார்.
அதேபோல, கிறிஸ்ஸின் இந்த காமெடி ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்டட் (Scripted) தான் என்றும் அதை அகாடெமியே சரி என்று ஒப்புதல் கொடுத்த பின்பு மேடையில் அதை பேசும் போது இப்படி பொதுவில் அடிப்பது சரியல்ல என்று தனக்கி வந்த கருத்துக்கும் நடிகை குஷ்பு பதில் கொடுத்திருக்கிறார்.
அது அகாடெமியே ஒப்புதல் கொடுத்து இருந்தாலும் ஒருவரது உடல் நிலை, உருவ கேலி, அவர்களை இழிவு படுத்துவது போல பேசுவது என்பது சரியல்ல. கிறிஸ் ராக்கின் குடும்பத்தையோ அல்லது அவர்களது அன்புக்குரியவர்களை பற்றியோ இப்படி ஒரு நகைச்சுவை வந்திருக்கிறது என்றால் அவரே சம்மதித்து இருக்க மாட்டார் எனவும் சொல்லி இருக்கிறார் குஷ்பு.
இது குறித்து நடிகை குஷ்புவை தொடர்பு கொண்டு பேசினேன். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது ஒருவர் மீது ஒருவர் நீங்கள் எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள் என்பதை தாண்டி மரியாதையும் மிக முக்கியமானது என இந்த சம்பவம் பற்றி கேட்ட போது இப்படி தொடங்கினார் குஷ்பு.
"நான் போட்ட இந்த ட்வீட்டுக்குமே கூட, பலரும் என்ன தான் இருந்தாலும் 'கை நீட்டி அடித்தது தவறு' என்கிறார்கள். ஜாடாவுக்கு ஏற்கனவே உடல் பிரச்சனைகள் இருக்கிறது என்பது ஹாலிவுட் சொசைட்டியில் அனைவருக்கும் தெரியும். அதை பொது மேடையில் கேலி செய்வது யாரையும் கோபப்படுத்தும். வில் ஸ்மித் அடித்தது சரியா தவறா என்பது குறித்து நான் விவாதிக்க வரவில்லை. கிறிஸ் பேச்சில் எவ்வளவு புண்பட்டிருந்தால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும். நான் அதை தான் பார்ப்பேன். எனக்கோ என் குழந்தைகளுக்கோ இப்படி நடந்தால் என் கணவரும், அவருக்கு இப்படி ஒன்று என்றால் நானும் அடிபட்ட புலியாக மாறுவோம்.
அப்படி இருக்கும் போது, உலக மேடையில் தன் மனைவியின் உடல் பிரச்சனையை கேலிக்குள்ளாக்கியதை வில் ஸ்மித் கண்டித்தது எனக்கு தவறாக தெரியவில்லை" என்கிறார் குஷ்பு.
நடிகை சமந்தாவும் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் ராக் இருவரில் யார் சரி என இணையம் தற்போது பிரிந்து இருக்கிறது. கிறிஸ் ராக்கோ அல்லது வேறு ஒரு நகைச்சுவை கலைஞனோ யாரும் ஒருவருடைய எடை, உயரம், கூந்தல் இவற்றை வைத்து நகைச்சுவை செய்ய கூடாது.
அதே நேரத்தில் இதற்கு எதிர்வினையாக உடல் ரீதியிலான வன்முறையை பிரயோகிப்பது சரியா என்றால் நிச்சயம் இல்லை என சமந்தா தெரிவித்து இருக்கிறார்.
இதே போல, இயக்குநர் வெங்கட்பிரவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வில் ஸ்மித்தின் மனைவியின் உடல் நிலையை வைத்து கிறிஸ் ராக் நகைச்சுவை என்ற பெயரில் பேசியது ரசிக்கத்தக்கதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகர்களான, வருண் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித்தின் இந்த்ஜ செயலை எதிர்ப்பார்க்கவில்லை எனவும் ,நீது கபூர் 'பெண்கள் மட்டும் தான் உணர்ச்சிகளை அடக்க தெரியாதவர்கள் என சொல்வார்கள் ஆனால் ...' எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர ஹாலிவுட் பிரபலங்களான கார்டி பி, மரியா ஷிவர் என பலரும் வில் ஸ்மித்தின் செயலை பாராட்டியும் அதே நேரத்தில் உடல் ரீதியிலான வன்முறை தவறு எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்