You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளையராஜா பார்வையில் ரஜினியின் வேறு அவதாரம் - சென்னை கச்சேரியின் ஹைலைட்ஸ் இதோ
சென்னை தீவுத்திடல் நேற்று இளையராஜாவின் இசை திடலாகி இருந்தது. கிட்டத்தட்ட முழுதாக இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னையில் இளையராஜாவின் இசைக்கச்சேரி.
மாலை வேளையில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருக்க, மேடைக்கு வந்தார் இசை ராஜா.
கொரோனா பரவலால் தள்ளிப்போன நிகழ்வு
கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்திய இளையராஜா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்த முடியாமல் போனதற்கு காரணம் கொரோனா. சமீபத்தில் இவரது இசை நிகழ்ச்சி துபாயில் நடந்தது. இதில் இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்றிருந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருவரது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில் தான், நேற்று சென்னை தீவுத்திடலில் ராஜாவின் இசை நிகழ்ச்சி 'RockWithRaja' என்ற பெயரில் நடந்தது. மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 12 மணி கடந்தும் நடந்தது.
எஸ்.பி. சரண், பாடகர் கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, தனுஷ், கங்கை அமரன், தேவி ஸ்ரீ பிரசாத் என பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஹைலைட்டான தருணங்களை பார்க்கலாம்!
ரஜினியின் வாழ்த்து!
இளையராஜாவின் இசை பற்றியும் தனது வாழ்த்துச் செய்தியையும் நடிகர் ரஜினிகாந்த் குரல் வடிவில் வழங்கியிருந்தார். அது ஒலிபரப்பான பிறகு, இளையராஜா தனது இசைக்கச்சேரிகளில் வழக்கமாக பாடும் 'ஜனனி ஜனனி' பாடலோடு நிகழ்வு தொடங்கியது.
"கொரோனா காலம் பலரது வாழ்வை மாற்றி இருக்கிறது. அந்த கட்டுண்ட காலத்தில் இருந்து மீண்டு வர, மகிழ்ச்சி படுத்தவே என்னுடைய இந்த இசைக்கச்சேரி," என்றார் இளையராஜா.
எஸ்.பி.பி-க்கு அஞ்சலி
வழக்கமாக ராஜாவின் இது போன்ற இசைக்கச்சேரிகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, ஜேசுதாஸ் தவறாமல் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்த கச்சேரியில் இவர்கள் இல்லாதது குறையே. அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்களை எஸ்.பி. சரண் பாடிய போது நிச்சயம் ரசிகர்கள் எஸ்.பி.பியை மிஸ் செய்திருப்பார்கள்.
கொரோனா நம் அன்புக்குரிய பலரையும் நம்மிடம் இருந்து பிரித்து இருக்கிறது என்றவர் தன் பால்ய கால நண்பர் எஸ்.பி.பியின் பிரிவு குறித்து வருந்தினார். பின்பு கொரோனாவால் உயிரிழந்த எஸ்.பி.பி. மற்றும் லதா மங்கேஷ்வர் ஆகியோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, எஸ்.பி. சரண், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி, கங்கை அமரன், மனோ, ப்ரேம்ஜி, கார்த்திக், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்வேதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய பாடல்களுக்கு பின்னுள்ள 'பாடல் உருவாக்க கதையை' இளையராஜா பகிர்ந்து கொள்வது வழக்கம். அது போல, 'வள்ளி' படத்தில் இடம் பெற்ற 'என்னுள்ளே என்னுள்ளே' பாடலின் இசை உருவாக்க கதையை மேடையில் பகிர்ந்தார்.
இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ரஜினிகாந்த். திரைக்கதை ஆசிரியராக அவர் இந்த பாடல் எப்படி வர வேண்டும் என விவரித்த போது அவருக்குள் இருந்த இயக்குநரை கண்டு வியந்தாராம் இளையராஜா.
இதன் பிறகு, அடுத்தடுத்து இளையராஜாவின் பாடல்கள் பாடப்பட்டது. தனுஷ், யுவன், மனோ, உஷா உதுப் இவர்கள் சேர்ந்து 'நாயகன்' படத்தின் 'நிலா அது வானத்து மேலே' பாடலை பாடினார்கள். தனுஷ் நிகழ்வுக்கு தன் மகன்களோடு வந்திருந்தார்.
தாலாட்டு பாடல் மாறிய கதை
இதில் 'நாயகன்' படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வேண்டும் என இயக்குநர் மணிரத்தினம் கேட்ட போது, இளையராஜா இசையமைத்த இரண்டு மூன்று பாடல் இசையில் 'தென்பாண்டி சீமையிலே' இயக்குநரை திருப்திப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் தாலாட்டு பாடலை மனதில் வைத்து இசையமைத்த 'நிலா அது வானத்து மேலே' பாடல் இசையும் பிடித்து போக, அதையும் படத்தில் பயன்படுத்த நினைத்திருக்கிறார் மணிரத்தினம். அதனால், ராஜாவிடம் இந்த தாலாட்டு பாடலை கொண்டாட்ட பாடலாக மாற்றி கொடுங்கள் என கேட்க அப்படி உருவானது தான் 'நிலா அது வானத்து மேலே' பாடல்.
பின்பு, இளையராஜாவின் பாடல்கள் அடுத்தடுத்து பாடப்பட இரவு ஒரு மணி வரை இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பாடகர்களுக்கான மைக் சரியாக இல்லாமல் பிரச்சனை செய்தது. இதனால், 'தென்பாண்டி சீமையிலே' பாடல் பாடும் போதே இளையராஜா சிரமப்பட்டார். ஆனால், இது போன்ற இடையூறுகளால் நிகழ்ச்சி முழுக்க ராஜா கோபப்படாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இயக்குநருடன் மீண்டும் இணைந்து வேலை பார்க்கும் போது தன் பாடலையே சிறிது மாற்றி இசையமைத்தது, தன் பாடல்களையே காப்பி அடித்தேன் என ராஜா பகிர்ந்த விஷயம் என ஹைலைட்டான தருணங்களோடு இசை ரசிகர்களின் ஆரவாரத்தோடு 'Rock With Raja' இனிதே முடிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்