You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளையராஜா- கங்கை அமரன் சந்திப்பு: "எங்களுக்குள் இருந்த நட்பு போய்விட்டதே என்று வருந்தினேன்"
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இசைக் கடலோடு மீண்டும் சங்கமித்திருக்கிறது 'கங்கை'.
ஆம் பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்திருக்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன்.
இருவரும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று நடந்த சந்திப்பு, இறை அருளுக்கு நன்றி! உறவுகள் தொடர்கதை…!!!' என எழுதி, இளையராஜாவை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில், இளையராஜா, அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தனது மகன்கள் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோரையும் டேக் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர்கள் இருவரும் சந்தித்து பேசியிருக்கும் இந்த நிகழ்வு இசை ரசிகர்களால் தற்போது மகிழ்ச்சியான விஷயமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ந்த பிரிவு
'கரகாட்டக்காரன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கங்கை அமரன் நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர்.
'சுவரில்லா சித்திரங்கள்', 'வாழ்வே மாயம்' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் அவர். அதேபோல, '16 வயதினிலே' படத்தில் செந்தூரப்பூவே, 'முள்ளும் மலரும்' படத்தில் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என பல வெற்றிப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதி உள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவும் இவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், 'சின்ன ராமசாமி பெரிய ராமசாமி' பட வேலையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை, குடும்ப நிகழ்வுகளில் சந்தித்து கொள்வது இல்லை என்ற செய்திகள் அப்போது வெளியாகிவந்தன.
மீண்டும் நிகழ்ந்த சந்திப்பு
இந்த நிலையில்தான் நேற்று இரவு 13 வருடங்கள் கழித்து இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை கங்கை அமரன் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் பிரேம்ஜி மற்றும் வெங்கட்பிரபு இருவரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து 'Pavalar brothers reunion!!!' என்ற தலைப்போடு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சியான சந்திப்பு குறித்து பேச பிபிசி தமிழுக்காக இசையமைப்பாளர் கங்கை அமரனை தொடர்பு கொண்டேன்,
"கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்து பேசினோம். நேற்று இரவு அவர் என்னை சந்திக்க வேண்டும் என அழைப்பு வந்ததும் உடனே கிளம்பி விட்டேன். என் உடல் நலன் குறித்தும் வேலைகள் குறித்தும் விசாரித்தார். 'இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்து விட்டோம், இனிமேலும் என்ன என தோன்றியது! அதனால்தான் அழைத்து பேசினேன்' என்று அண்ணன் சொன்னார்.
நானும் இதற்காகதான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக பேசினோம். பிறகுதான் அங்கிருந்து கிளம்பி வந்தேன்.
இடையில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். அது குறித்து எல்லாம் விசாரித்தார்.
நானும் அவரும் அண்ணன் தம்பி என்பதை எல்லாம் தாண்டி நல்ல நண்பர்களாகதான் இருந்தோம்.
அந்த நட்பு போய் விட்டதே என்றுதான் இத்தனை காலம் வருந்தினேன்.
அது மறுபடியும் கிடைத்ததில் மகிழ்ச்சி. முன்பெல்லாம் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை பார்த்த காலத்தில் அவர் இசையமைத்து விட்டு சில வேலைகளை எனக்கும் ஒதுக்கி பார்த்து கொள்ள சொல்வார்.
அந்தப் பணிகள் இனி வரும் காலங்களிலும் தொடரும். இனிமேல் இருவரும் இணைந்து நிச்சயம் வேலை பார்ப்போம். இறைவனுக்கு இந்த சமயத்தில் நன்றி" என்றார் நெகிழ்ச்சியோடு.
பிற செய்திகள்:
- எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண்
- திருச்சி மாநகராட்சியை வெல்லப் போவது யார்? - பிபிசியின் கள ஆய்வு
- இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு கேரளாவின் இளம் எம்.எல்.ஏவுடன் திருமண ஏற்பாடு
- உங்கள் வயிற்றுக்குள் வாழும் நுண்ணுயிரிகளை மகிழ்விக்க 5 வழிகள்
- ''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்