சமந்தா, பாவனா, தீபிகா படுகோனே: மன அழுத்தம் குறித்து பிரபலங்கள் பொதுவெளியில் சொல்வது ஆரோக்கியமானதா?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமீபத்தில் நடிகை சமந்தா மனநலன் தொடர்பான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் மனநலம் தொடர்பாக சமந்தாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

விவாகரத்துக்கு பின்பு ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு முக்கிய காரணம் தன் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களது வழிகாட்டுதலே என்று குறிப்பிட்ட சமந்தா, மன நலன் தொடர்பான பிரச்சனைகளை மருத்துவர்களிடம் கலந்தாலோசிப்பது இயல்பான விஷயமாக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் தற்போது, 'என் வாழ்வின் அடுத்த கட்டத்தில் வெற்றி பெறுகிறேன் என்றால் அதற்கு காரணம் நான் உறுதியானவள் என்பது மட்டுமல்ல அந்த உறுதியை என்னை சுற்றியுள்ள பலரும் எனக்கு கொடுத்துள்ளனர்' என்பதையும் தெரிவித்துள்ளார்.

இன்னொரு பக்கம் நடிகை பாவனா தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்களில் கடந்த 2017ம் ஆண்டு தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் பிரச்சனைகளையும், அந்த புகார் தொடர்பாக தான் சந்தித்த அவமானங்களையும் அதை தான் எதிர்கொண்ட விதம் குறித்தும் தற்போது கூறியுள்ளார்.

'பாதிக்கப்பட்டவளாக இருந்து அதில் இருந்து மீண்டு வந்திருப்பது சாதாரண பயணம் கிடையாது. கடந்த ஐந்து வருடங்களாக என் மீது சுமத்தப்பட்ட இந்த அவதூறுகள் என் பெயரையும் என் அடையாளத்தையும் நசுக்கி இருக்கின்றன. நான் இதில் எந்த குற்றமும் செயயவில்லை என்றாலும் என்னை அவமானப்படுத்தவும் அமைதிப்படுத்தவும் நிறைய முயன்றிருக்கிறார்கள். அதுபோன்ற சமயத்தில் என் குரலை உயிர்ப்பிக்க கூடிய சிலரை பெற்றிருக்கிறேன். இப்போது எனக்காக வரும் ஆதரவை பார்க்கும் போது நான் தனி ஆள் இல்லை என்பதை உணர்கிறேன். இதில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களான பார்வதி, டொவினோ தாமஸ், ப்ரித்வி ராஜ் ஆகியோர் பாவனாவின் இந்த பதிவை மறுபகிர்வு செய்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

நடிகைகள் சமந்தா மற்றும் பாவனாவின் இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. மனநலன் தொடர்பாக பிரபலங்கள் வெளிப்படையாக பேசும்போது மற்றவர்களுக்கும் இது நல்ல முன்னுதாரணமாக அமையும் எனவும் பலரும் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.

பிரபலங்கள் தங்கள் சொந்த வாழ்வை இணைத்து பொது வெளியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அது தொடர்பாக ஏற்படும் மன அழுத்தம், அதில் இருந்து மீண்டு வருவதும் அதை பொதுவெளியில் பேசுவது என இது குறித்து சென்னையில் உள்ள மூத்த மனநல மருத்துவரான சிவநம்பியிடம் பேசினோம்.

"சாதாரணமாக எல்லோருடைய வாழ்விலும் என்ன மாதிரியான பிரச்சனைகள் வருமோ அதையேதான் பிரபலங்களும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பிரபலங்கள் என்ற காரணத்தினாலேயே அந்த பிரச்சனைகள் பொதுவெளியில் ஊதி பெரிதாக்கப்படுகிறது. இப்போது கூட பல பிரபலங்களுக்கு கொரோனா என செய்தி வந்ததே தவிர அந்த பிரபலங்கள் இருக்கும் தெருவில் எத்தனை பேருக்கு கொரோனா என யாரும் செய்தி போடவில்லையே. நன்கு தெரிந்த பிரபலங்களுக்கு வந்துவிட்டது. அதனால் நீங்களும் பாதுகாப்போடு இருங்கள் என்பதுதான் அந்த செய்திகளுக்கான முக்கியத்துவம். அதுபோலதான் மேலே சொன்ன செய்திகளும், அதில் இருந்து நமக்கான பாடம் என்ன இருக்கிறது என்பதுதான்.

பிரபலங்கள் என்பதால் அவர்களுக்கான ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். அவர்களுடைய தொழில் ரீதியாக மட்டுமில்லாமல், அவர்களுடைய சொந்த வாழ்க்கை குறித்தான கவனமும் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ரசிகர்களுக்கு இருக்கும். பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம். அதை விடுத்து பிரச்சனைகளுக்கு பின்னுள்ள உண்மை தெரியாமல் கவன ஈர்ப்புக்காக பேசுவது என்பது தவறான விஷயம்".

மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் வரும்போது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதை இயல்பான விஷயமாக்க வேண்டும் என்ற கருத்தை எப்படி பார்க்கறீர்கள் என்று கேட்டோம்.

"மனநலன் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பது நிச்சயம் வரவேற்க கூடிய ஒன்றுதான். இதனை பிரபலங்கள் பொதுவெளியில் சொல்லும் போது மக்களிடம் அதன் தாக்கம் இன்னும் வேறு விதமாக இருக்கும்." என்றார் மருத்துவர் சிவநம்பி.

"முன்பு நடிகை தீபிகா படுகோனே இதுபோன்று மன அழுத்ததில் இருந்த போது சிகிச்சை பெற்று நலம் அடைந்தது பாசிட்டிவான ஒரு விஷயம். தனக்கு ஒரு பிரச்சனை இருந்தது, அதை மருத்துவ ஆலோசனை மூலம் குணப்படுத்தி அதனை வெளிப்படையாகவும் சொல்லி பல பேருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என்ற பாராட்டுகள் தீபிகாவின் செயலுக்கு பார்க்க முடிந்தது."

"அதேபோல உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு அதனை மருத்துவரிடம் எடுத்து செல்வதற்கு தயக்கம் இருந்தால் உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் தரும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சொல்லலாம். அதை விடுத்து எல்லாரிடமும் உங்கள் பிரச்சனைகளை சொல்கிறேன் என எடுத்து போனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வு சொல்லி உங்களை மேலும் குழப்பி விட வாய்ப்புகள் அதிகம். அப்படி வழிகாட்டுதல் இல்லாத சூழ்நிலைகளில் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நீங்கள் மனநல மருத்துவரை நாடுவதுதான் சரியானதாக இருக்கும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: