'வலிமை' இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி: 'அஜித் 61' கதைக்களம் இதுதான்"

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் அஜித்தின் அறுபதாவது படமாக 'வலிமை' அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போதுவரை சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் படப்பிடிப்பு தாமதமானபோது 'வலிமை அப்டேட்' வேண்டும் என சமூக வலைதளங்களிலும், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் நேரில் கேட்டதன் மூலமும் இந்த படம் உலக அளவில் டிரெண்ட் ஆனது.

படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியான நிலையில் தற்போது U/A தணிக்கை சான்றிதழ் பெற்று இந்த படம் புத்தாண்டில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஹெச். வினோத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அவரது நேர்காணலில் இருந்து...

'வலிமை' படத்தின் முன்னோட்ட காணொளியில் இருந்தே இந்த பேட்டியை தொடங்கலாம். நிறைய பாராட்டுகள் வந்திருந்தாலும் நடிகர் அஜித்துடைய படங்களுக்கான முன்னோட்ட வீடியோவில் இதுதான் அதிக நேரம் (3.06) கொண்ட ஒன்று என்றும், 3 நிமிட முன்னோட்டத்தில் கதையும் கிட்டத்தட்ட சொல்லப்பட்டுவிட்டது என்ற கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

சினிமா குறித்து ரசிகர்களின் பார்வை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. பெரு நகரங்களில் இருக்கும் பிள்ளைகள் ஓடிடியில் பல மொழி படங்கள், உலக சினிமாக்கள் போன்றவற்றை பார்க்கிறார்கள். அவர்களுடைய அப்பாக்கள் தொலைக்காட்சியில் சாதாரண படங்கள் பார்க்கிறார்கள்.

இங்கிருந்து சற்று விலகி நகரங்கள், கிராமங்கள் பக்கம் சென்றால் அவர்களுக்கு ஒரு விதமான சினிமா தேவைப்படுகிறது. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சினிமாக்கள் பார்க்க விரும்புகிறார்கள். மேலும், ஒரு படம் குறித்தான அறிவிப்பு வெளியானதும் அது குறித்த நிறைய ஊகங்கள், பொய்ச் செய்திகள் எல்லாம் கலந்து ஒரு கதையாக வருகின்றன. இப்படி ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு கதை உருவாகி விடுகிறது. இதையெல்லாம் எதிர்பார்த்துதான் அவர்கள் அந்த படத்திற்கு போகிறார்கள். அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்து போகும்போது, அந்த படம் சரியாக இல்லை அல்லது எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டது என்பது மாதிரியான பின்னூட்டங்களை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். அதனால் நீங்கள் என்ன பார்க்க போகிறீர்கள் என்ற அடிப்படையான ஒரு தெளிவை ஏற்படுத்துவதுதான் ஹாலிவுட், பாலிவுட் மாதிரியான படங்களின் முன்னோட்ட வீடியோக்களை உருவாக்குவதன் நோக்கம். அதைதான் 'வலிமை' படத்துக்கும் செய்திருக்கிறோம்.

மேலும் நாங்கள் கதையை முழுவதுமாக எல்லாம் சொல்லவில்லை. அடிப்படையான விஷயங்களை மட்டும்தான் டிரெய்லரில் சொல்லியிருக்கிறோம். படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது.

உங்களுடைய முந்தைய படங்களில் எல்லாம் இடம்பெற்ற 'No Means No' மாதிரியான பல விஷயங்கள் விவாதத்தை முன்னெடுத்தது. போலீஸ் என்கவுன்ட்டர் தீவிரமான விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் இதுபோன்ற சமயத்தில் வலிமை' படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் அஜித் ' இன்னொருவர் உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை' என பேசுவது போன்று வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? அஜித்துடைய ஒத்துழைப்பு இதில் எப்படி இருந்தது?

அஜித் இது குறித்து பெரிதாக எதுவும் என்னுடன் விவாதம் செய்யவில்லை. நாம் என்ன மாதிரியான படம் எடுக்கப் போகிறோம் என்பது அவருக்கு தெரியும். அந்த காட்சிக்கு வசனம் சரியாக இருந்தால் பேசிவிடுவார். ஒரு இயக்குநருக்கு அது சரியா தவறா என தெரியும் என்பதை அவர் உறுதியாக நம்புவார். அதேபோல, 'No Means No' என்பது என்னுடைய வசனம் இல்லை. அது 'பிங்க்' படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த வசனம் பல காலங்களாக வெவ்வேறு வடிவங்களில் வேறு படங்களில் கூட வந்திருக்கிறது. ஆனால், 'பிங்க்' படத்தில் அந்த இடத்தில் உபயோகிக்கும் போது அதன் தாக்கம் இன்னும் அதிகம் இருக்கிறது.

என் படங்களில் நான் எழுதும் பல வசனங்களும் வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவை நமக்கே கதைக்கு இணையாக தோன்றும். இப்படி பெரிய ஞானிகள் சொன்னவை மக்களுக்கு தேடி படிக்க நேரமில்லாமல் இருக்கும். அதை நாம் சினிமாவுக்கேற்ற வசனமாக மாற்றி அஜித் மாதிரியான பெரிய நடிகர்களை வாயிலாக சொல்லும் போது பெரிய ரீச் இருக்கிறது. அதுதான் வறுமை மாதிரியான வசனங்கள் வைக்கக் காரணம். என்கவுன்ட்டர் வசனம் குறித்து கேட்டிருந்தீர்கள். அது குறித்து நான் படம் வெளியானதும் விரிவாக பேசுகிறேன்.

மேலே சொன்ன காரணத்திற்காகத்தான் காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் மேற்கோள்களை படம் நெடுக வைத்தீர்களா அல்லது கதைக்கு உண்மையிலேயே தேவையாய் இருந்ததா?

அஜித் போன்ற மாஸ் ஹீரோவை வைத்து முழுக்கவே தீவிரமான ஒரு கதையை எடுக்க முடியாது. அவருடைய ரசிகர்களுக்கு கமர்ஷியலாக மாஸ் இருக்கக்கூடிய ஒருவராக பார்க்க விருப்பம் இருக்கும். அஜித்துடைய ரசிகர்களை இரண்டாக பிரிக்கலாம். 'பில்லா', 'மங்காத்தா' படங்களில் வருவது போன்று ஸ்டைலிஷ்ஷாக பார்க்க விரும்புபவர்கள். இன்னொரு பக்கம் 'வேதாளம்', 'விஸ்வாசம்' போன்று பார்க்க விரும்பும் ஃபேமிலி ஆடியன்ஸ். இந்த இருவருக்கும் சேர்த்தே படம் செய்ய வேண்டும். அதோடு நான் பேச விரும்பும் கதையும் உள்ளே வர வேண்டும். இவை எல்லாம் ஒன்றாக வர வேண்டும் என்பதால், தீவிர கதைக்களத்தை நேரடியாக முழுதும் கொண்டு வராமல் மேற்கோள் மாதிரியான விஷயங்களில் Secondary Layer ஆக எடுத்து வந்தோம்.

ஆனால், 'நேர்கொண்ட பார்வை'யில் அஜித்திற்கென சண்டை காட்சிகளை தவிர கதையில் பெரிய சமரசம் இல்லாத போது 'வலிமை'யில் அதற்கான தேவை என்னவாக இருந்தது?

'நேர்கொண்ட பார்வை' பொருத்தவரை வியாபார கட்டாயம் என்பதை எல்லாம் தாண்டி அந்த படம் செய்ய வேண்டும் என்பது அஜித் சாருடைய விருப்பம். ஆனால், இந்த சூழலில் வியாபரம் என்பது அந்த எல்லைகளை உடைக்கிறது. முன்பெல்லாம் தமிழ் படம் என்றால் தமிழகத்தில் வெளியாகும். அதைத்தாண்டி பக்கத்து மாநிலங்களில் அங்கங்கு வெளியாகும். இப்போது ஓடிடி, சமூக வலைதளங்களின் வளர்ச்சி வந்த பிறகு உலக அளவில் சினிமாக்களில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இதைத்தாண்டி அவர்கள் தியேட்டர் சென்று படம் பார்க்க வேண்டுமென்றால் 'தியேட்டர் அனுபவம்' என சொல்லிக்கொள்ள சில விஷயங்கள் தேவைப்படுகிறது. அதனால், அஜித்துடைய ரசிகர்கள் அதைத்தாண்டி இந்த படம் வேறு எங்கு வெளியானாலும் அங்கிருக்கக்கூடிய ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும் என சில விஷயங்களை யோசித்து சேர்த்த விஷயம்தான் 'வலிமை'.

அப்போது ஓடிடியின் தாக்கமும் 'வலிமை'யில் இருக்கிறது என்கிறீர்களா?

அப்படி நேரடியாக சொல்லவில்லை. ஓடிடி மூலமாக மக்களுக்கு பட அனுபவம் அதிகமாகியுள்ளது. அதனால் இயல்பாகவே அவர்கள் மற்ற படங்களோடு ஒப்பீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதனால் நமக்கும் அழுத்தம் அதிகமாகி விட்டது. ஹாலிவுட் படங்களில் பத்தில் ஒரு பகுதி பட்ஜெட்தான் நமக்குக் கிடைக்கும். அதில் எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்பதைத்தான் பார்க்க முடியும்.

'வலிமை' தொடக்கம், கொரோனாவால் இடையில் படப்பிடிப்பு தாமதம், வலிமை அப்டேட் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது, மீண்டும் படப்பிடிப்பு என இந்த படம் உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தை கொடுத்துள்ளது?

பட்ஜெட்டை தாண்டி அதிகம் நாம் எதுவும் செலவு செய்துவிடவில்லை. 'எக்ஸ்ட்ரா' என்று பார்த்தால் கொரோனாவால் ஒரு வருடம் தாமதமானது இல்லையா? அதற்கான வட்டிதான் அழுத்தம் கொடுத்தது. இதுதான் பட்ஜெட், இதுதான் பிசினஸ் என நினைப்போம். அத்துடன் இந்த வட்டியும் கூடுதலாக சேர்ந்தது. அப்படி வரும்போது சீக்கிரம் படம் எடுக்க வேண்டும் இன்னும் தாமதமானால் வட்டி அதிகம் வரும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் நிறைய சமரசங்கள் செய்ய வேண்டியிருந்தது. நடிகர்கள் தேதி, திரைக்கதையில் மாற்றம், படப்பிடிப்புக்கான இடம் கொரோனா அச்சத்தால் 100 பேருக்கும் மேல் இருக்கக்கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்த படம் எடுத்து முடித்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்தான்.

'வலிமை' என்பதை தாண்டி படத்திற்கு வேறு தலைப்புகள் யோசித்தீர்களா?

இல்லை. 'வலிமை' தாண்டி வேறு எதுவும் யோசிக்கவில்லை. கதையுடைய ஒரு வரி இதுதான் என யோசிக்கும் போதே மக்களுக்கு மன வலிமையும் உடல் வலிமையும் வேண்டும் என்பதை வலியுறுத்தப் போகிறோம் என்பதை பேச ஆரம்பித்த பிறகே 'வலிமை'தான் சரியான தலைப்பாக இருக்கும் முடிவெடுத்தோம். இதுவே எனக்கு, அஜித், தயாரிப்பாளர் என படக்குழுவில் அனைவருக்குமே பிடித்திருந்தது.

'வலிமை'க்கான எழுத்துரு (font) மற்றும் பச்சை நிறத்தேர்வு ஏன்?

அதற்குள் நான் அதிகம் போகவில்லை. மார்க்கெட்டிங் குழுதான் அதை செய்தது. அதை அவர்கள் கொஞ்சம் International ஆக செய்து விட்டார்கள்.

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' தற்போது 'வலிமை' என தீவிர கதைக்களங்களையே தேர்ந்தெடுக்கக் என்ன காரணம்?

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு என்ன வருகிறதோ அதைத்தான் செய்ய முடியும். முழுக்க நகைச்சுவை படம் எடுக்கச் சொன்னால் எனக்கு வராது. என் வாழ்க்கை என்ன, என்ன மாதிரியான சினிமாக்கள் பார்த்தேன், அது வழியாக நான் ஒரு படம் எடுக்க முயற்சிக்கும் போது நான் எதை நம்புகிறேன். அது பார்வையாளர்களுக்கு எப்படி போய் சேருகிறது என்பதைத்தான் பார்ப்பேன். இது எவ்வளவு தூரம் போகிறது என பார்ப்போம். மற்றவை எல்லாம் பிறகு யோசிப்போம்.

'நேர்கொண்ட பார்வை' சமயத்திலேயே அஜித்துடன் அடுத்த படம் என்று முடிவாகிவிட்ட நிலையில், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றை அவருக்காகதான் சேர்த்தீர்களா? இல்லை கதையோடு அமைந்ததா?

நிச்சயம் அவருக்காகத்தான். ஒரு ஹீரோவுக்காக படம் எடுக்கிறோம் என்று முடிவெடுத்துவிட்டால் அடுத்த எண்ணம் கிடையாது. இங்கு ஹீரோவை எந்த அளவிற்கு Build செய்து பார்வையாளர்களுடன் ஒன்றிணைய வைக்கிறீர்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அதில் எனக்கு இருக்கும் புரிதலில் அவரை எப்படி காட்டினால் மாஸாக இருக்குமோ அதை செய்திருக்கிறேன். அஜித்துடைய பிளஸ், மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை எப்படி உபயோகிக்கலாம் என்றுதான் பார்த்தேன்.

அப்படியானால் அஜித்துடன் அடுத்து இணையும் 'அஜித் 61' கதைக்களமும் அஜித்துக்கான கதையாகவே இருக்குமா?

அந்த படத்தில் முக்கியமான ஒரு பிரச்னையைத்தான் பேச போகிறோம். அஜித்துடைய Strong Zone இல் சின்ன எதிர்மறை தன்மையும் இருக்கும்.

மேக்கிங் வீடியோவில் ஆக்‌ஷன் காட்சி எடுத்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுபோன்று படத்தில் அதிக ரிஸ்க் உள்ள காட்சிகள் ஏதும் இருக்கிறதா?

ஆக்‌ஷன் காட்சிகள் முழுவதுமே ரிஸ்க்தான். நமக்கு ஒரு காட்சி தோன்றும். அதை ஃபைட் மாஸ்டரிடம் கொண்டு செல்லும்போது அவருடைய இன்புட்டும் அதில் சேரும். இப்படி கேமராமேன், கலை இயக்குநர், ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட் என ஒவ்வொருவருடையதும் இதில் சேரும். இதெல்லாம் எழுதும்போது, வரையும் போது பயங்கர உற்சாகமாக இருக்கும். ஆனால், இதையெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் கொண்டு போய் வைக்கும் போது அதன் வேகம், மெக்கானிசம் எல்லாம் வேறு மாதிரியாக இருக்கும். பைக் ஓட்டியவர்கள், ஃபைட்டர்ஸ், கேமரா மேன் இவர்களுக்கெல்லாம் படமாக்கும் போது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். ஆனால், எல்லாரும் தங்களது கடின உழைப்பை கொடுத்திருந்தார்கள். அஜித் சாருக்கு அடிபட்டதுபோல இன்னொரு ஃபைட்டருக்கு தொடை எலும்பு முறிந்துள்ளது. பேருந்துக்குள் இருந்த ஃபயர் டிப்பார்ட்மெண்ட் சேர்ந்தவருக்கு கை உடைந்துள்ளது. இதெல்லாம் அத்தனை பாதுகாப்பு முறைகள் செய்தும் நடந்தது. நமக்கு மனரீதியான அழுத்தம்தான். ஆனால், அவர்கள்தான் களத்தில் இறங்கி வேலை செய்தது.

ஒரு வருடத்திற்கும் மேலாக 'வலிமை அப்டேட்' என்ற விஷயம் ட்ரெண்ட் ஆனது. அது ஏன் அந்த சமயத்தில் கொடுக்க முடியவில்லை என்பதை சொல்லியிருந்தீர்கள். ஆனால், அந்த சமயத்தில் உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

இவர்களிடம் எல்லாம் போய் கேட்கிறார்களே, தப்பாக இருக்கிறதே என பதட்டமாக இருக்கும். அதிகம் எதிர்பார்க்கிறார்களே என அழுத்தமாக இருக்கும். சில சமயம் சிரிப்பாகவும் இருக்கும். கலவையான மனநிலையில்தான் இருந்தேன்.

வில்லன் தேர்வுக்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு முன்பு வேறு சில நடிகர்கள் உங்கள் தேர்வாக இருந்தபோது அவர்கள் செய்யாத எதை செய்தார் கார்த்திகேயா? ஹீமா குரேஷி எப்படி உள்ளே வந்தார்?

கார்த்திகேயாவை தேர்வு செய்தபோது அவர் நன்றாக நடிப்பாரா என்ற சந்தேகம் எல்லாம் இல்லை. அவர் முகத்தில் ஒரு Evilness கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. அதை அவர் போகப் போக வெளிப்படுத்தியதும் அவரைப் பற்றி நான் நினைத்தது தவறு என்பதை நிரூபித்து விட்டார். தற்போதுள்ள கதாநாயகிகள் அஜித்துடன் ஒன்றிரண்டு படங்கள் நடித்து விட்டார்கள். அதனால் அவருடன் இதுவரை நடிக்காத வேறு மொழிகளில் வெளியிட்டாலும் தெரிந்த ஒரு முகமாக தேடிய போதுதான் ஹீமா உள்ளே வந்தார்.

படத்தில் காதல் காட்சிகள் இடம்பெறாதது ஏன்?

கொரோனா சமயத்தில் திரைக்கதையில் செய்த மாற்றத்தால் அதை எடுத்துவிட்டோம்.

கடைசியாக இந்த கேள்வி. 'சதுரங்க வேட்டை-2' ஜனவரியில் வெளியாகும் என்பது போன்ற செய்திகளை பார்க்க முடிகிறது. அது உண்மைதானா?

அந்த படத்தில் இப்போது நான் பெரிதாக தொடர்பில் இல்லை. அதனால் அது குறித்து எதுவும் நான் சொல்வதற்கில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: