'வலிமை' மேக்கிங் வீடியோ: அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்தது ஏன்? ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேட்டி

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் அஜித், கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் அடுத்த வருடம் பொங்கல் வெளியீடாக 'வலிமை' திரைப்படம் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச். வினோத்துடன் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. 'வலிமை' பட பூஜையில் இருந்து கொரோனா சமயத்தில் படப்பிடிப்பு நின்றது, படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பொது வெளியிலும், இணையத்திலும் வைரல் செய்தது என அனைத்தையும் இந்த காணொளியில் இணைத்திருந்தார்கள்.

மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள், அஜித் பைக் ரேஸில் இருந்து கீழே விழுந்தது என இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கம், அஜீத்துடன் பணியாற்றிய அனுபவம் ஆகியவை குறித்து இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"'வலிமை' பொருத்தவரை அனைத்து சேசிங் காட்சிகளுமே உண்மையான வேகத்தில் எடுக்கப்பட்டது. 120 கிமீ வேகம் என்றால் அதே 120 கிமீ வேகத்தில் காட்சிகளும் படமாக்கப்பட்டது. காட்சி முதலில் எடுத்து விட்டு பின்பு அதை படமாக்கப்பட்ட பின்பு வேகப்படுத்துவது என்பது போன்றவற்றை நாங்கள் செய்யவில்லை. ஏனெனில், திரையில் பார்வையாளர்கள் பார்க்கும்போது எந்த அளவுக்கு வேகத்தில் ஓட்டுகிறார்கள் என்பது உண்மையாக அவர்கள் ரசிக்க வேண்டும். இதற்காக சிறப்பு வாகனங்கள், கேமரா எல்லாம் தயார் செய்து 120/150 கிமீ வேகத்தில் படமாக்கினோம். ஏனென்றால் அவை எல்லாமே 'சூப்பர் பைக்குகள்'. பைக் ஸ்டார்ட் செய்த உடனே அதி விரைவாகத்தான் செல்லும்.

அதனால், அதை சரியாக படமாக்க சரியான கருவிகள் தேவைப்பட்டதால் மெனக்கெட்டு அதற்காக வேலை செய்தோம். படத்தை திரையில் பார்க்கும்போது இதை இவ்வளவு வேகத்தில் எப்படி படமாக்கினார்கள் என பார்வையாளர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். அதேபோல, இடைவேளை காட்சியும் 'தீரன் அதிகாரம் ஒன்று' போல பார்வையாளர்களை இருக்கை நுணிக்கு எடுத்து வரக்கூடிய தருணமாக 'வலிமை'யில் 10%- 20% அதிகமாக இருக்கும்.

எல்லா காட்சிகளுமே 'டூப்' எதுவும் இல்லாமல், முறையான பயிற்சி எடுத்து தவறுகளை திருத்தி எடுக்க முடியும் என்று நம்பிக்கை வந்த பின்பே படமாக்கப்பட்டது".

'வலிமை' மேக்கிங் வீடியோவில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்த தருணம் மிகவும் பரபரப்பாக ரசிகர்களிடையே பேசப்பட்டதே! என்ன நடந்தது?

"நிறைய காட்சிகள் அப்போது எடுக்க வேண்டி இருந்ததால், ஒரு பாதுகாப்புக்காக கடைசியாகதான் அதை படமாக்கினோம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நான் அடுத்த சாலையில் வேறொரு காட்சியை படமாக்கி கொண்டு இருந்தேன். இந்த பக்கம் அஜீத் பைக் ஓட்டும் காட்சியை எங்கள் அணியில் இருந்த ஒருவர் 110-120 கிமீ பைக் ஓட்டும் வேகத்தில் அவரும் பயணித்து மாலை வேளையில் படமாக்கி கொண்டு இருந்தார்.

அது, ஹைதராபாத்தில் பெரிய சாலை. உண்மையில் அந்த காட்சி நான் எதிர்பார்த்தது போலவே முன்பே கிடைத்து விட்டது. ஆனால், அஜித் மற்றுமொரு முறை எடுக்கலாம் என்று சொன்னார். அது ரிஸ்க் நிறைந்த காட்சி என்பதாலும், 'இல்ல சார் போதும்' என்று நான் சொன்னேன். ஆனால் அவர் காட்சியின் நீளத்தை அதிகப்படுத்தலாம் என்று மீண்டும் எடுத்த காட்சிதான் அது.

அப்படி படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தை விட்டு கிட்டத்த நான்கைந்து கிலோமீட்டர் தள்ளி வந்து விட்டோம். அஜித் பயணித்த அந்த சாலையில் சிறு கல் இருந்திருக்கிறது. வண்டி சென்ற வேகத்தில் அதை கவனிக்க முடியவில்லை. அந்த கல் தடுக்கித்தான் வண்டியில் இருந்து அஜித் கீழே விழ நேரிட்டது. அதை பார்த்தும் கூட எங்களால் உடனே வண்டியை நிறுத்த முடியவில்லை. ஏனென்றால் அதே 120 கிமீ வேகத்தில் நாங்களும் இங்கு வண்டி ஓட்டி கொண்டிருக்கிறோம். உடனே அப்படி நிறுத்தினால் எங்களுக்கும் நிலை தடுமாறும், வண்டியில் இருக்கும் கேமரா முதலிய கருவிகள் எல்லாமே சேதாரமாகும். எனவே, பொறுமையாக வண்டியை நிறுத்திவிட்டுதான் அங்கு செல்ல முடிந்தது. அஜித் கீழே விழுந்ததை பார்த்ததும் அங்கே கேமராவை கையாண்டு கொண்டிருந்த நபர் பயந்து விட்டார். அந்த பதற்றத்தில்தான் கேமராவை ஆட்டியதால்தான் அது அங்கிருந்து விலகியது. அதைத்தான் மேக்கிங் வீடியோவில் பார்த்தீர்கள்.

கீழே விழுந்ததும் அஜித் பைக்கை விடவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் மோதியிருப்பார். பைக்கை விட்டதால்தான் அடி குறைவாக இருந்தது. எல்லாரும் பதறி அவரிடம் போனது போது, அவர் கேட்ட முதல் கேள்வி, 'எனக்கு எதுவும் இல்லை, பைக் என்னாச்சு? நாளைக்கு ஷூட்டிங் இருக்கே, மறுபடியும் பண்ணனுமே' என்பதுதான். 'பைக் எல்லாம் விஷயமே கிடையாது. அதை வாங்கிவிடலாம். உங்களுக்கு என்னாச்சு?' என்று கேட்டால் மீண்டும் பைக் குறித்தே விசாரித்தார்.

தண்ணீர் குடித்த பிறகு கூட, 'காட்சி சரியாக வந்து விட்டதா?' என்றுதான் கேட்டார். அந்த விபத்தில் பயங்கர அடி அவருக்கு. ஆனால், எங்களிடம் காட்டவேயில்லை. பைக் ஓட்டும்போது அவர் அணிந்திருந்தது தொழில்ரீதியான ரேஸருடைய உடைதான். அதனால் பாதுகாப்பானது என்றே சொல்லலாம். ஆனால், அன்று அஜித் அவர் விழுந்த வேகத்திற்கு நன்றாக அடி வாங்கியிருக்கும்.

அந்த பைக் கிட்டத்தட்ட 80 லட்சம் மதிப்பிலானது. இந்தியாவிலேயே ஒரு சிலர் மட்டும்தான் அதை வைத்துள்ளார்கள். அதனால், உடனே அஜித் அவருடைய நண்பரிடம் பேசி பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு அடுத்த நாள் காலையே வேறொரு பைக் வந்துவிட்டது. அதனால், அடுத்த நாள் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினோம். அஜித் ஒரு காட்சி தனக்கு திருப்தி ஏற்படும் வரை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதன் வெளிப்பாடுதான் இது".

இவ்வளவு ரிஸ்க்கான காட்சி எனும்போது 'டூப்' போட்டு செய்யலாம் என்ற எண்ணம் வரவில்லையா?

"அஜித்தை பொருத்தவரை எப்போதுமே 'டூப்' பயன்படுத்துவதை விரும்ப மாட்டார். 'நானே செய்கிறேன்' என்பதுதான் முதலில் அவரிடம் இருந்து வரும் வார்த்தையாக இருக்கும். 'ஒருமுறை செய்து காட்டுங்கள், நானே செய்கிறேன். என் மேல் நம்பிக்கை இல்லையா' என்பார். ஏனெனில், ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடுதான் இருப்பார்.

படத்தில் நிறைய உச்சமான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். பல பேருடைய உழைப்பு அதில் இருக்கிறது".

ஜித் அவருடன் வேலை பார்த்த அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

"சினிமாவில் முதன் முதலாக நான் 'ஃபைட்டர்'ராக அறிமுகமாகி வேலை பார்த்த படம் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த 'ஜீ' படம்தான். அதில் சில்வா மாஸ்டர் முழுவதும் செய்திருப்பார். அதில் ஒரு போர்ஷன் மட்டும் நான் செய்திருப்பேன். அதன்பிறகு, அஜித்துடன் 'விஸ்வாசம்', 'நேர்கொண்ட பார்வை', இப்போது 'வலிமை'. அப்பொழுதில் இருந்து இப்போது வரை தொழில்நுட்ப கலைஞர்களுக்கான மரியாதை, கலகலப்பாக பேசுவது என அவர் வந்தால் படப்பிடிப்பு தளமே குடும்பம் போலதான் இருக்கும்" என்றவர் 'வலிமை' படத்தின் சண்டை காட்சிகளுக்கு முன்பு மட்டும் தினமும் 10-15 நாட்கள் ஒத்திகை பார்த்ததாகவும் சொல்கிறார்.

படத்தின் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாப்பாத்திரத்திற்கும் சண்டை காட்சிகள் அமைந்திருக்கிறதா?

"படத்தில் பைக் சேஸ், கார் சேஸ், க்ளைமேக்கிஸ்ஸில் அதிரடி காட்சி என எல்லாமுமே இருக்கும். அஜித்திற்கு எந்த அளவிற்கு சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் கார்த்திகேயாவுக்கும் இருக்கும். பைக் இப்படிதான் ஓட்ட வேண்டும், உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது என படப்பிடிப்பு தளத்தில் கார்த்திகேயாவுக்கும் எங்களுக்கும் நிறைய விஷயங்கள் சொல்லி தந்தார். அஜித் பைக்கை பார்த்தாலே குழந்தை போல மாறிவிடுவார்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: