You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா ஊரடங்கு, திரையரங்குகள் மூடல் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியாக, தமிழ் திரையுலகத்தின் இயக்கம் பெருமளவு பாதிப்படைந்த ஆண்டு 2021. எனினும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கணிசமான திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகின. அவற்றில் சில திரைப்படங்கள், தமிழ் சமூகத்தைக் கடந்தும் பேசுபொருளாகின.
இந்தாண்டு வெளியான திரைப்படங்களில், விஜய், ரஜினி போன்ற ஜனரஞ்சகமான கதாநாயகர்களின் திரைப்படங்களிலும் சரி, பெரிய கதாநாயகர்கள் இல்லாமல், நயன்தாரா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி கதாநாயகிகளின் 'பெண் மைய' திரைப்படங்களிலும், பெண்களின் பிரதிநிதித்துவம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு கதையின் தன்மைக்கு ஏற்ப போதுமான வெளியை தருவது, சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம் - பெண்களுக்கு எதிரான பொதுபுத்தியை ஊக்கப்படுத்தும் வகையிலான காட்சி அமைப்பையோ, வசனங்களையோ தவிர்ப்பது உள்ளிட்ட பலவற்றை தமிழ் சினிமா இந்தாண்டு எப்படி கையாண்டது?
'மாஸ்டர்' முதல் 'அண்ணாத்த' வரை, இந்தாண்டு வெளியான பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்களில், கதாநாயகிகள் உட்பட பெண் துணை கதாபாத்திரங்களின் வடிவமைப்பு கேள்விக்குறியதாகவும் போதிய முக்கியத்துவமின்றியும் இருந்திருக்கிறது.
இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' திரைப்படத்தில், விஜய்யை தவிர்த்து இருந்த ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் பெண் கதாபாத்திரங்களும் அதிகம். மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா போன்றோரின் கதாபாத்திரங்கள் எவ்வித முக்கியத்துவமின்றியே இருந்தன. கல்லூரி பேராசிரியராக இருந்தும், மாளவிகா மோகனின் கதாபாத்திரம் என்ன என்பதில் சிக்கல் நீடித்துக்கொண்டே இருந்தது.
சில காட்சிகளில் கதாநாயகருக்கு உதவுவது, அவரை காதல் பார்வையுடன் அணுகுவது மட்டுமே மாளவிகாவின் அதிகபட்ச வேலையாக இருந்தது. அதேபோன்று, நுணுக்கமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் ஆன்ட்ரியாவையும் இப்படத்தில் அதிகளவு பயன்படுத்தாதது ஏமாற்றமாகவே இருந்தது. நடிப்புத்திறன் கொண்ட ஆன்ட்ரியாவுக்கு, படத்தில் விஜய்யின் தோழி, கடைசி காட்சியில் வில் வித்தை என்பதாக குறுகிய அளவுக்கே இடம் இருந்தது. மாளவிகா-ஆன்ட்ரியா இருவரையும் கதையில் வலுவாக பயன்படுத்த வாய்ப்பு இருந்தும் விஜய் படம் என்றளவுக்கே மாஸ்டர் திரைப்படம் சுருங்கிப்போனது.
'அண்ணாத்த' திரைப்படத்தில் 4 பெண் கதாபாத்திரங்கள். கதாநாயகனின் தங்கை, காதலி, 2 முறைப்பெண்கள். வில்லன்களிடம் சிக்கிக்கொண்ட தன் தங்கையையும், அவரின் குடும்பத்தையும், நாயகன் தன்னுடைய உடல்பலத்தால் மீட்பதே கதை. கீர்த்தி சுரேஷுக்கு படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் என்றளவுக்கு அவருக்கான வெளி அதிகமிருந்தும், மிக அப்பாவியான தங்கை, தன்னைக் காப்பாற்ற இத்தனை முயற்சிகள் எடுப்பது யார் என்பதைக் கூட கண்டறிய முடியாத பலவீனமான பாத்திர வார்ப்பு.
ரஜினிக்கு ஜோடியாக வரும் நயன்தாரா, வழக்கறிஞர் பணியை விடுத்து, கதாநாயகருக்கு சிறு சிறு உதவிகளை செய்யும் மற்றுமொரு கதாநாயகி என்றளவிலேயே இருந்தார். குஷ்பு - மீனா என ரஜினியின் முந்தைய கதாநாயகிகளை, படத்திற்கு கூடுதல் வண்ணமேற்ற மட்டுமே களமிறக்கி, நகைச்சுவை என்ற பெயரில், ரஜினிக்காக உருகும், அவரை திருமணம் செய்ய விரும்பி, அவரது நாயக பிம்பத்தை ஏற்றிவிடும் முறைப்பெண்களாகவே வந்தனர்.
இந்தாண்டு வெளியான 'சுல்தான்', 'பூமி', 'ஜெகமே தந்திரம்', 'எனிமி', 'ஈஸ்வரன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும், கதாநாயகிகளுக்கு போதுமான காட்சிகள் தரப்பட்ட போதிலும், அவை தனித்துத் தெரிவதில் போதாமைகள் நிலவின.
"விஜய், ரஜினி போன்ற கதாநாயகர்களுக்கு இயக்குநர்கள் கதை எழுதும்போது, அவர்கள் அந்த கதாநாயகர்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். அப்படியிருக்கையில், 'ஏதாவது சேர்க்கணுமே' என்பதற்காக மட்டுமே பெண்களை நுழைப்பார்கள். இரண்டு காட்சிகளில் அந்த கதாநாயகர்களை காட்டாமல் நீங்கள் படம் இயக்கினால், பார்வையாளர்கள் பார்க்க மாட்டார்கள். இதனால், கதாநாயகிகள் உட்பட பெண் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்பு படத்தில் குறையும். பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் பெரும்பாலும் 'வருவார்கள், போவார்கள், கொஞ்சுவார்கள் , நடிப்பார்கள்' என்றளவிலேயே இருக்கின்றன" என்கிறார், தமிழ் சினிமா குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர் தீபா ஜானகிராமன்.
எல்லாவற்றையும் கடந்து, 'கர்ணன்', 'சார்பட்டா பரம்பரை' போன்ற திரைப்படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் நேர்மறையான விமர்சனங்களை பெற்றதை கவனிக்க வேண்டும். குறிப்பாக, 'சார்பட்டா பரம்பரை'யில் தன் விருப்பத்தையும் கருத்தையும் மறைக்காத பெண்ணாக 'மாரியம்மா' (துஷாரா விஜயன்), தன் பயத்திலிருந்து வெளியில் வந்து தன் மகனை பாக்ஸிங் போட்டிக்கு அனுப்பும் பாக்கியம் (அனுபமா குமார்), கலையரசனின் மனைவியாக வரும் 'லஷ்மி' கதாபாத்திரம் (சஞ்சனா நடராஜன்), 'மிஸ்ஸியம்மா' (பிரியதர்ஷினி ராஜ்குமார்) போன்ற கதாபாத்திரங்களை குறிப்பிடலாம்.
'கர்ணன்' திரைப்படத்தில் வரும் நாயகி ரஜிஷா விஜயன், தாய் (ஜானகி), சகோதரி (லஷ்மி பிரியா சந்திரமௌலி) கதாபாத்திரங்களும் கதை நகரும் வட்டாரத்துக்கு ஏற்ற பெண்ணாக வடிவமைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, கதாநாயகனின் இறந்த தங்கை, சிறுதெய்வ வழிபாட்டின் குறியீடாக காட்டப்பட்டார்.
"அடுத்தக்கட்ட நடிகர்களின் திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் இப்போது வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை வலுவான கதாபாத்திரங்கள் என்று சொல்ல மாட்டேன். உதாரணமாக, 'ஜெய்பீம்', பெண்ணின் போராட்டத்தின் கதைதான். அவருக்கு உதவும் துணை கதாபாத்திரம் தான் சூர்யா. முதன்மை கதாபாத்திரம் 'செங்கேணி' தான்" எனக்கூறுகிறார் தீபா.
பெண் பிரதிநிதித்துவத்தைக் கடந்து, திரைப்படங்களில் பெண்களின் உடைகள், குணநலன்கள் ஆகியவை குறித்த பொதுபுத்தியை ஊக்குவிக்கும் வகையிலான வசனங்களும் இந்தாண்டு வெளியான சில திரைப்படங்களில் இருந்தன.
"உனக்கு ஏத்த மாதிரி வாழ்றது சுதந்திரம் இல்ல, நீ வாழ்றது மத்தவங்க ஏத்துக்குற மாதிரி இருக்கணும் அதுதான் சுதந்திரம்", கொஞ்சம் இழுத்தா அவுந்திரும், இதுக்கு பேரு சுதந்திரம்" என, 'டிக்கிலோனா' திரைப்படத்தில், பெண்ணின் உடையை பார்த்து சந்தானம் பேசுவது 'நகைச்சுவை' யுக்தி என்ற அளவில் அல்லாமல், சமூக ஊடகங்களில் விமர்சனங்களை பெற்றது.
கதாநாயகர்கள் கதாநாயகிகளின் உடைகளை கேலி செய்து, அவர்களுக்குப் பாடம் எடுப்பது போன்ற வசனங்கள் வைப்பது, தமிழ் சினிமாவின் மரபு என்பதைக் கடந்து, அதைப் பேசிய கதாநாயகர்களே அதிலிருந்து திருத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம், பல ஆண்டுகள் நடைபெற்ற பிரசாரம், சமூக ஊடகங்களின் வழி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் பெண்ணின் உடையையும், அவளின் குணநலன் - சுதந்திரத்துடன் இணைத்து, சந்தானம் 'மாரல் போலிசிங்' செய்திருப்பது, மோசமான முன்னுதாரணம்.
'டாக்டர்' திரைப்படத்தில் விளையாட்டில் தோற்பவர்கள் நைட்டி அணிந்துகொண்டு, 'கோமதி' என பெயர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், பெண்களின் உடையை அணிவதை தோல்வியின் அடையாளமாக கருதுவதன் ஆண்மைய சிந்தனையிலிருந்து வெளிவந்தது. 'அழகா இருக்குற பொண்ணுக்கு அறிவு இருக்காது' என்பதும் அதே சிந்தனையை கதாநாயகனின் அம்மாவை வைத்துப் பேச வைத்தது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தில் ஜீவி பிரகாஷை அவமதிக்க சித்தார்த் நைட்டி அணிவித்து சாலையில் வரவைப்பார். இதனை படத்தின் பிற்பகுதியில் சித்தார்த்தின் அம்மா கேள்வி கேட்பார். இத்தகைய பொதுமைய சிந்தனைகளை உடைத்தெறியும் வாதமே இன்றைய தேவை.
"உண்மையில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அல்லாத, கதையின் போக்கில் அவர்களின் இருப்பு இல்லாத திரைப்படங்களை பொதுவெளியில் விமர்சிக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான சூழலாக கருதலாம். அதேபோன்று, பெண்களின் உடைகளையோ, அவர்களின் குணநலன்களையோ கேள்வி கேட்கும் வசனங்களை எல்லோரும் எளிதில் கடந்து செல்வதில்லை. சமூக ஊடகங்களின் வழி அதனை கேள்வி கேட்கின்றனர்."
"இது தவறு, இது பார்வையாளர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதை திரும்பத் திரும்ப உணர்த்தினால்தான் குறையும். இம்மாதிரியான வசனங்களுக்குக் கைத்தட்டி ரசிப்பது குறைந்திருக்கிறது. அதனால்தான் சந்தானத்தின் நகைச்சுவை அவுட்டேட்டடாகிவிட்டது. இன்னும் ஏன் வடிவேல் நிற்கிறார், சந்தானம் இல்லையென்றால், சந்தானம் செய்வதை கவனிக்க வேண்டும். சந்தானம் மிக மோசமாக பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தார். நடிகர் சதீஷும் அப்படித்தான். பெண்களை கேலி செய்வது என்ற விஷயம் இந்த காலத்திற்கேற்ற ஒன்று இல்லை என்பதால், அந்த நடிகர்கள் அவுட்டேட்டட் ஆகிவிட்டனர்" என்றார், எழுத்தாளர் தீபா.
பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் தவிர்த்து, 'பெண் மைய' திரைப்படங்களும் இந்தாண்டு ஓடிடி தளங்களில் வெளியாகின. நயன்தாரா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய முன்னணி கதாநாயகிகள், பெண் கதாபாத்திரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்தனர்.
நயன்தாராவின் 'நெற்றிக்கண்', ஜோதிகாவின் 'உடன்பிறப்பே', ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா', 'இரண்டாம் திட்டம்' ஆகியவற்றை முக்கியமானதாகக் குறிப்பிடலாம். 'நெற்றிக்கண்'ணில், கண் பார்வையை இழந்த சிபிஐ அதிகாரியான நயன்தாராவுக்கு, இளம்பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் வில்லனை கொலை செய்யும் பாத்திரம். திருமணத்திற்கு முந்தைய உறவின் மூலம் ஏற்படும் கர்ப்பத்தைக் கலைக்க வரும் பெண்களையே தான் பாலியல் வன்கொடுமை செய்வதாக, வில்லன் கூறும்போது வில்லனை எதிர்த்து நயன்தாரா பேசும் வசனங்கள் பொதுப்புத்தி கட்டமைப்பை உடைப்பதாக இருந்தது.
அதேபோன்று, 'உடன்பிறப்பே' திரைப்படத்தில், மோதலில் உள்ள கணவன் - சகோதரன் உறவை ஒட்டவைக்கும் கதாபாத்திரம். ஜோதிகாவை முதல் காட்சியிலேயே பெண் தெய்வமாக காட்டுவது, நயன்தாரா சண்டை காட்சிகளில் ஈடுபடுவது என, மீண்டும் பழைய கதைப்போக்கில் சிக்கிக்கொள்வதாகவும், நடிகர்கள் செய்வதை நடிகைகள் செய்யும் 'ஷீரோ' திரைப்படங்களாகவே இவை இருப்பதும் சிக்கல்கள். எனினும், இவை ஆரோக்கியமான போக்கை வரும் காலங்களில் ஏற்படுத்தும் என்கிறார் தீபா.
"பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ் சினிமாவில் டிரெண்டிங் மாறிக்கொண்டே வரும். கதாநாயகிகளை மையப்படுத்திய திரைப்படங்கள் எடுப்பதுதான் இப்போதைய டிரெண்ட். இப்போது, வலுவான பெண் கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர்கள் கருதுகின்றனர். ஜோதிகா, நயன்தாரா போன்றோர் படங்களை தயாரிக்கின்றனர். அப்போது, 'எங்களுக்குக் கதை சொல்லுங்கள்' என இயக்குநர்களிடம் கேட்கின்றனர்.
நயன்தாராவின் 'நெற்றிக்கண்' திரைப்படம், திரைக்கதையின் அடிப்படையில்தான் மிகவும் தளர்வான கதை. அதனால் தான் அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. முன்னணி கதாநாயகியை, பார்வையற்ற பெண்ணாக, நோயாளி போன்ற ஒல்லியான தோற்றம் கொண்டவராக கொண்டு போன விதம் மற்றவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. நயன்தாரா போன்ற முன்னணி கதாநாயகியும், கதைக்குத் தேவை என்றால் இதனை செய்யலாம் என முடிவெடுக்கிறார். நாயகர்கள் தன்னை நோயாளி போன்று காட்டிக்கொள்ள பெரும்பாலும் விரும்புவதில்லை.
'உடன்பிறப்பே' திரைப்படத்தைப் பொறுத்தவரை அது ஒரு கிராம பின்னணியில் நடைபெறும் கதை. கிராமத்தில் உள்ள ஓர் ஆளுமையான பெண் என்றாலே, அவர்களுக்குள் தெய்வம் என்ற சாயல் வந்துவிடும். அது இல்லாமல், கடக்க முடியாது என்பதால் வைத்திருப்பார்கள்.
கொரோனா பெருந்தொற்றைக் கடந்து மக்கள் இன்னும் திரையரங்குகளுக்கு செல்லும் போது இம்மாதிரியான படங்கள் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு ஏற்படும். புத்திசாலித்தனமான கதைகளில் யாரை தூக்கி உள்ளே வைத்தாலும் மக்கள் ரசிப்பார்கள். உதாரணம், 'மாநாடு'. இந்த இடத்தில் பெண்களை உள்ளே வைத்து கதை சொன்னாலும் நிச்சயமாக வெற்றி பெறும். தமிழ் பார்வையாளர்கள் உலகளாவிய திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
கதாநாயகிகள் ஐடம் பாடல்களுக்கு ஆடுவதும், அவர்களுக்கு எதிராக மட்டமான பாடல் வரிகளை வைப்பதும் குறைந்துள்ளது. இந்த போக்கு ஆரம்பித்திருக்கிறது.
இன்றைக்கு யார் திரைப்படங்கள் பார்க்க செல்கின்றனர் என்பது மிகவும் முக்கியம். எனக்குப் பிடித்த ஹீரோ நடித்திருக்கிறார், அவர் எப்படி நடித்திருந்தாலும் நான் பார்ப்பேன் என்பது ஒருவகை பார்வையாளர்கள். இன்னொன்று, 'எனக்குக் கதை சொல்லு' என வந்து படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள்.
மூன்றாவதாக, பெண்கள். இவர்கள் திரையரங்குகளுக்கு வருவது எப்போது குறைந்ததோ அப்போதுதான் படங்களுக்கான வசூல் குறைந்தது. ஒருவேளை கொரோனா வராமல் இருந்து, ஜோதிகா, நயன்தாரா போன்றோர், நல்ல திரைப்படங்கள் கொடுத்து திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் இந்த வருடம் நிச்சயம் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்" என்றார், தீபா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்