புத்தாண்டு 2022 நெருங்குகிறது: 2021ஆம் ஆண்டின் கவனம் பெற்ற 5 தமிழ் சினிமா படங்கள்

இந்த 2021ஆம் ஆண்டிலும் கொரோனா பாதிப்பால் சில மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டுகிடந்தன. இருந்தபோதும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் குறிப்பிடத்தக்க பல திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி பிளாட்ஃபார்ம்களிலும் வெளியாயின.

அவற்றில் மிக முக்கியமான ஐந்து திரைப்படங்களின் பட்டியலை மட்டும் இங்கே பார்க்கலாம். படங்களின் வரிசை, அவை வெளியான தேதியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

1. மாஸ்டர் (13.01.2021)

இந்த வருடத்தின் ஆரம்பமே விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் வருகையுடன் அமர்க்களமாக அமைந்தது. விஜய் நாயகன், விஜய் சேதுபதி வில்லன் என்று அறிவித்ததிலிருந்தே இந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியானது மாஸ்டர்.

நன்மை VS தீமை என்ற வழக்கமான மோதலை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருந்தாலும், விஜய் ரசிகர்களுக்கு ரொம்பவுமே படம் பிடித்திருந்தது.

தளர்வான திரைக்கதையின் காரணமாக விமர்சகர்களால் சுமாரான திரைப்படங்களின் வரிசையில் இந்தப் படம் சேர்க்கப்பட்டாலும் வசூலை வாரிக் குவித்தது இந்தப் படம். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று.

2. கர்ணன் (09.04.2021)

சமகால முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வருவது மிகவும் குறைவு. அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதால், மிகுந்த கவனத்துடன் திரைக்கதையை உருவாக்க வேண்டுமென்பதோடு, அரசியல் ரீதியாக சரியாக இருக்க வேண்டிய கட்டாயங்களும் இருக்கும்.

அம்மாதிரி சவாலான ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதில் மிகப் பெரிய நட்சத்திரம் ஒருவரையும் நடிக்கவைத்து, வெற்றிபெறச் செய்து காட்டினார் மாரி செல்வராஜ். 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் மாரி செல்வராஜ்.

சிறப்பான நடிகர் தேர்வு, நேர்த்தியான திரைக்கதை ஆகியவற்றால் விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பெரும் வெற்றியைப் பெற்றது இந்தத் திரைப்படம். கடந்த பத்தாண்டுகளின் சிறந்த சினிமாக்களின் பட்டியலை உருவாக்கினால், அதில் கர்ணனுக்கு நிச்சயம் இடமிருக்கும்.

3. சார்பட்டா பரம்பரை (22.07.2021)

பா. ரஞ்சித் இயக்கிய ஒவ்வொரு படமும் தமிழ்த் திரையுலகில் ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. ஆனால், சார்பட்டா திரைப்படம் அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

வட சென்னையில் குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம், அதன் காலப் பின்னணி, அதிலிருந்த அரசியல், கச்சிதமான திரைக்கதை, சிறப்பான நடிகர் தேர்வு ஆகியவற்றின் காரணமாக ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு அனுபவத்தை அளித்தது.

இந்தப் படம் ஒரு ஓடிடி ப்ளாட்ஃபாமில் வெளியானது. முக்கியமான இயக்குனரின் திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் திரையரங்கில் வெளியானதற்கிணையான வரவேற்பைப் பெற முடியுமென இந்தப் படம் நிரூபித்தது.

4. ஜெய்பீம் (02.09.2021)

இதுவும் சமகால சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான். ஆனால், இந்தத் திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையான இருளர் பழங்குடியினர் மீது நடத்தப்படும் காவல்துறையின் அத்துமீறலை மையமாகக் கொண்டு, வணிகரீதியான ஒரு திரைப்படத்தை முயற்சிப்பதற்கே மிகப் பெரிய துணிச்சல் வேண்டும்.

பிறகு, அந்த அத்துமீறலையும் நியாயத்தைப் பெறுவதற்கான போராட்டத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிறப்பான சினிமா திரைக்கதையாக உருவாக்க வேண்டும். த.செ. ஞானவேலிடம் இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு, ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தை அளித்தார்.

இந்தத் திரைப்படமும் ஓடிடியில்தான் வெளியாகி உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐஎம்டிவி தரவரிசையில் சஷாங்க் ரிடம்ஷன் படத்தையும் மீறி தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது இந்தப் படம்.

5. மாநாடு (25.11.21)

தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், Time - Loop என்பதை மையமாக வைத்து வெங்கட் பிரபு இயக்கியிருந்த மாநாடு திரைப்படும் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்தது.

ஏகப்பட்ட தடைகள், தாமதங்களைத் தாண்டி இந்தப் படம் திரையரங்கில் வெளியானபோது முதல் காட்சியிலேயே ரசிகர்கள் அசந்துபோனார்கள். அடக்கி வாசித்த சிம்புவும் வெவ்வேறு பாணியில் பேசி கலக்கிய எஸ்.ஜே. சூர்யாவும் ரசிகர்களை திரும்பத் திரும்ப திரையரங்கிற்கு வரவைத்தார்கள்.

டைம் - லூப் கதை என்றாலும் சிக்கலே இல்லாமல் எளிதாகப் புரியும் வகையில் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவின் திரைப்படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் வந்தார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக திரையுலகே சுணங்கிப்போயிருந்த நிலையில், ரசிகர்களும் வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பிய நிலையில் மேலே சொன்ன திரைப்படங்கள் மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்தை திரைப்படங்களின் பக்கம் திருப்பின.

இந்தத் திரைப்படங்கள் தவிர அண்ணாத்தே, விநோதய சித்தம், ராக்கி, கடைசீல பிரியாணி, ஆல்ஃபா அடிமைகள் என பல திரைப்படங்கள் இந்த ஆண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: