You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாஸ்டர் - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.
லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது.
படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான்.
தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் படம்.
படத்தின் துவக்கம் பவானியின் டெரரான அறிமுகத்தோடு அதிரடியாகவே துவங்குகிறது. கதாநாயகனின் அறிமுகமும் கலகலப்பாகவே இருக்கிறது. ஆனால், படம் துவங்கி ஒரு மணி நேரம் ஆன பிறகும், திரைக்கதை மையக் கதையை நோக்கிச் செல்லாமல் இழுத்துக்கொண்டே செல்வது அலுப்பூட்ட ஆரம்பிக்கிறது. பிறகு சுதாரித்துக்கொண்டு மையக் கதைக்குள் நுழைகிறது படம். 'ஆகா' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளை.
இடைவேளைக்குப் பின் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது திரைக்கதை. ஆனால், எந்த இடத்தில் க்ளைமேக்ஸ் வர வேண்டுமோ அதையும் தாண்டி படம் நீண்டு கொண்டே செல்வதுதான் சிக்கல். குறிப்பாக க்ளைமேக்ஸிற்கு முந்தைய சுமார் 20 நிமிடக் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. ஒரு கட்டத்தில் இதற்கு எப்போதுதான் முடிவு என எதிர்பார்க்கும்படி ஆகிவிடுகிறது.
கதாநாயகனுடன் மோதல் துவங்கிய பிறகு, வில்லன் கதாநாயகனுக்கு நெருக்கமானவர்களை கொலை செய்வது, ஆத்திரமடையும் கதாநாயகன் வில்லனை வெறியோடு தேடிப்பிடித்து அடித்து நொறுக்குவதெல்லாம் பல படங்களில் பார்த்த காட்சிகள்தான்.
இந்தப் படம் சிக்கலான திரைக்கதையைக் கொண்ட ஒரு திரைப்படமல்ல. மாறாக, நல்லவன் VS கெட்டவன் என்ற வழக்கமான மோதலைக் கொண்ட ஒரு திரைப்படம். அதிலும், பவானியின் பாத்திரம் ரொம்பவும் பழகிப்போன வில்லன் பாத்திரம்தான் என்றாலும், அதில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் சற்று தனித்துத் தெரிகிறது.
கல்லூரி பேராசிரியராகவும் சீர்திருத்தப்பள்ளியின் ஆசிரியராகவும் வரும் விஜய், பத்து வயது குறைந்தவரைப் போல இருக்கிறார். மிகச் சிறப்பாக நடனமாடுகிறார். எதிரிகளைத் துவம்சம் செய்கிறார். அவருடைய ஃப்ளாஷ் பேக் என்ன என்று கேட்கும்போது, ஒவ்வொருவரிடமும் ஒரு பழைய சினிமா படத்தின் கதையைச் சொல்லும்போது ரொம்பவுமே ரசிக்க வைக்கிறார். ஆனால், பாதிப் படத்திற்கு மேல் கதாநாயகன் குடித்துக்கொண்டே இருப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை.
படத்தின் கதாநாயகியைப் போல வரும் மாளவிகா மோகனனுக்கு சொல்லும்படி ஏதும் வேலையில்லை. ஆண்ட்ரியா, நாசர் போன்ற முக்கியமான கலைஞர்கள் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார்கள்.
அனிருத்தின் பின்னணி இசை அட்டகாசம். திரைக்கதையோடு சேர்ந்துவரும் சில பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன.
பெரிதாக யாராலும் கவனிக்கப்படாத சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை மையமாக வைத்து, ஒரு கதையைச் சொல்லியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், தளர்வான திரைக்கதையின் காரணமாக, சற்று ஏமாற்றமளிக்கிறது படம்.
பிற செய்திகள்:
- ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
- பூமி - சினிமா விமர்சனம்
- விஜய் படத்துக்காக சிம்பு படத்தை முடக்குவதா? சீறும் டி. ராஜேந்தர்
- கோட்சே பெயரில் நூலகம் அமைத்த இந்து மகாசபா தலைவர்: எழும் கடும் எதிர்ப்பு
- கடலில் விழுந்த இந்தோனீசிய விமானம்: ஒரு கருப்புப் பெட்டி மீட்பு, இன்னொன்று தொடர்ந்து தேடல்
- வாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: