You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அரசியல் தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி" - நாராயணசாமி வலியுறுத்தல்
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக காணொளி காட்சி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் முதற்கட்டமாக 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இந்த தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் நானும் பிரதமரிடம் சில விளக்கங்களைக் கேட்டோம். அப்போது, இந்த மருந்திற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க முன்னுதாரணம் என்ன இருக்கிறது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் அவசர கால அடிப்படையில் இந்த மருந்தினை வழங்கி இருக்கிறார்கள். இந்த தடுப்பூசி மருந்துகள் சோதனை முறையில் வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த மருந்துகளை மக்களுக்குச் செலுத்துவதால், எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்," என்று முதல்வர் கூறினார்.
"கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆகவே மத்திய அரசு இலவசமாக அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசு முழுமையாகச் செலவை ஏற்றுக்கொண்டு புதுச்சேரி மாநில அரசின் நிதியிலிருந்து மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்," என நாராயணசாமி கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், "மூன்று கட்டங்களாக இந்த தடுப்பூசி போடப்படும் போது அரசியல் தலைவர்கள் காத்திருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதற்கட்டமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பொது மக்களுக்கு நம்பிக்கை வரும். இது சம்பந்தமாக முன்னுதாரணமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். இந்த கோரிக்கையைப் பிரதமர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
"நேர்மைமிக்க வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம்" - கமல்ஹாசன்
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சாதி, மதங்களை கடந்து நேர்மைமிக்க வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொழில்துறை வளர்ச்சிக்கான ஏழு வாக்குறுதிகளை கமல்ஹாசன் அறிவித்தார்.
தொழில்துறை புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான அமைச்சரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதி, மதங்களை பார்க்காமல் நேர்மைமிக்க தகுதியான நபர்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். பொதுத்தொகுதிகளிலும் கூட தகுதியின் அடிப்படையில் எந்த சாதியினரும் வேட்பாளராகலாம்" என கூறினார்.
"எங்கள் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்காது என்ற அமைச்சர் கருப்பண்ணனின் கருத்தை அவரது பிரார்த்தனையாக மட்டுமே பார்க்கிறேன். எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது. கூட்டணி தொடர்பாக இப்போது முடிவு சொல்ல முடியாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன்." என்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, 'அது தகவல்தான்' என பதிலளித்தார்.
வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், நியமிக்கப்பட்ட குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
"நாங்கள் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள் கிடையாது. மனித வளத்திற்கான முதலீடு. அரசுடன் தொடர்பில் இருக்க அவை உதவும்" என்று கூறிய கமல், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைது நடவடிக்கைகளை தாமதிக்கப்பட்ட நீதியாக பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்தோனீசிய விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு: கடலில் விழுந்த காரணம் தெரிய உதவுமா?
கடந்த சனிக்கிழமை 62 பேருடன் கடலில் விழுந்த இந்தோனீசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஜாவா கடலில் விழுந்த இந்த போயிங் 737 ரக விமானம், ஸ்ரீ விஜயா ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமானது.
கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத் தரவு பதிவு கருவி கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டாலும், விமான ஓட்டி அறையின் குரல் பதிவு கருவியை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
குரல் பதிவுக் கருவி, தரவுப் பதிவுக் கருவி இரண்டுமே கருப்புப் பெட்டி என்றே அழைக்கப்படுகின்றன.
இன்னொரு கருப்புப் பெட்டியும் மீட்கப்படும் பட்சத்தில், விமானம் விழுந்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல்களை அறிய முடியும் என்று இந்தோனீசிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
26 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்த இந்த விமானம் கடந்த மாதம் நடத்தப்பட்ட பறக்கும் தகுதியை பரிசோதிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தது.
அடையாளம் காணப்பட்ட முதல் நபரின் உடல்
கடந்த சனிக்கிழமை ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் கிளம்பி போண்டியானக் என்ற தீவுக்கு சென்றுக்கொண்டிருந்த இந்த எஸ்.ஜெ.182 என்ற இந்த விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணித்தவர்களில் முதலாவதாக 29 வயதான பணிப்பெண் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனீசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றல் பல மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த விமானம், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பிறகே மீண்டும் பறக்க அனுமதி வழங்கப்பட்டதாக அந்த நாட்டின் போக்குவரத்துத்துறை நேற்று (ஜனவரி 12) தெரிவித்தது.
கடந்த சனிக்கிழமையன்று, உள்ளூர் நேரப்படி 14:36 (07:36 GMT) மணிக்கு இந்த விமானம் 10,900 அடி (3.3 கி.மீ) உயரத்தை எட்டியதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் (கே.என்.கே.டி), முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, அது திடீரென செங்குத்தாக சரிந்து 14:40 மணியளவில் 250 அடியை எட்டியதாக தெரியவந்துள்ளது.
விமானத்தின் சேதமடைந்த இறக்கையிலுள்ள விசிறியுடன் விசையாழி வட்டும் (Turbine disc) கிடைத்துள்ளதால், விமானம் நடுவானில் வெடித்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் தவறானது என்று தெரியவந்துள்ளதாக அந்த இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜோனோ தெரிவித்துள்ளார்.
தேடல் பணியின் தற்போது நிலவரம்
விமானம் கடலில் விழுந்தது முதல் அதை கண்டறியும் பணியில் இந்தோனீசிய அரசின் பல்வேறு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களையும், விமான ஓட்டி அறையின் குரல் பதிவு கருவியையும் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன.
முன்னதாக, விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டறிய பயன்படும் கருவியொன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விமானத்தின் சில உடைந்த பாகங்கள், பயணிகளின் உடைகள் உள்ளிட்டவை ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் பணியில் சுமார் 2,600 நபர்களும், 50 கப்பல்கள் மற்றும் 13 விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக ஏ.எஃப்.பி. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களை கொண்டு முதல்கட்ட ஆய்வுகள் முழுவீச்சியில் நடந்துவந்தாலும், இது நிறைவுற சுமார் ஓராண்டு வரை ஆகுமென்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தில் இருந்தவர்கள் யார் யார்?
விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.
போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: