You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரம்பலூர் பயங்கரம்: அக்குபஞ்சர் பிரசவத்தால் குழந்தை, தாய் உயிரிழப்பு - என்ன நடந்தது?
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயவர்மன் (35). இவருக்கு செவிலியர் பிரிவில் இளங்கலை படிப்பு முடித்த அழகம்மாள் (29) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு கருவுற்றிருந்த அழகம்மாளை மாதாந்திர பரிசோதனைக்காக கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது, எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம், இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கான வழிமுறைகளை நாங்களே பின்பற்றிக் கொள்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், அழகம்மாளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரது கணவர் விஜயவர்மன், மாமனார் வீரபாண்டியன் (60) ஆகியோர் அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர். ஆனால், குழந்தையின் தலைப் பகுதி மட்டும் வெளியே வந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், இயற்கை முறையில் குழந்தையை எடுக்க முயன்றுள்ளனர். இதனால், அந்த குழந்தையை வெளியே எடுக்காததால் அன்றைய தினமே அது உயிரிழந்து விட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர் அவரது வீட்டுக்குச் சென்று, அழுகிய நிலையிலிருந்த சிசுவின் உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழகம்மாளை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக, சுகாதாரத் துறையினர் அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விஜயவர்மன், வீரபாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் மு.கீதாராணி இது தொடர்பாக பிபிசியிடம் கூறுகையில், "இந்த சம்பவத்தில் உயிரிழந்த அழகம்மாள் கருவுற்றிருந்த இரண்டாம் மாதம் முதல் அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் பொது சுகாதாரத் துறை மூலமாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் கருவுற்றிருந்த தாய் மற்றும் குழந்தையின் நலன் குறித்து அறிந்துகொள்ள ரத்தம், சிறுநீர், சர்க்கரை அளவு, ஸ்கேன் உள்ளிட்ட ஆரம்ப பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்களிடம் அறிவறுத்தப்பட்டது.
ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் எங்களுக்கு இதில் விருப்பமில்லை. நாங்கள் மருத்துவமில்லா மருத்துவத்தைத் தான் பின்பற்றி வருகிறோம் என்றனர். எங்கள் குடும்பத்தினர் அக்குபஞ்சர் மருத்துவ முறையைப் பின்பற்றி வருவதாக தெரிவித்தனர்,"என்று கீதாராணி கூறினார்.
இருந்தபோதிலும் பொது சுகாதாரத் துறை சார்பாக அவர்களது வீட்டிற்கு சென்று சந்தித்துக் கேட்கும்போதெல்லாம், எங்களுக்கு மருத்துவம் தேவையில்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாக கூறுகிறார் சுகாதார துணை இயக்குநர்.
"மருத்துவம் செய்ய அவர்கள் மறுத்தாலும், மருத்துவர்கள் என்ற முறையில் அவர்கள் பின்பற்றம் வழக்கம் சரியானது அல்ல என்பதால் நான் உட்பட நேரடியாக அந்த பெண்ணை சந்திக்க முயன்றேன்.
கர்ப்பிணியை மருத்துவர்கள் சந்திக்க மறுத்த மாமனார்
ஆனால், அந்தப் பெண்ணின் மாமனார் வீரபாண்டியன், எனக்கு அக்குபஞ்சர் தெரியும். அவருக்குத் தேவையான அனைத்தும் நாங்கள் செய்து கொள்கிறோம் என்று கூறினார். அந்த பெண்ணிடம் நேரடியாகப் பேச அனுமதிக்கவில்லை," என்கிறார் கீதாராணி.
மேலும் இவர்களால் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஒருவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருக்கும் போது, அவரை கவனிக்க விடாமல் குடும்பத்தினர் தடுப்பதால், அவர்கள் மீது 296 IPC பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் சுகாதாரத்தூரை சார்பில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையும் அவர்களைச் சந்தித்து தேவையான அறிவுரை வழங்கியும் அவர்கள் அதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த பிரச்னை குறித்து சமூக நலத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அனைத்து துறை சார்பாக அவர்களைச் சந்தித்து இதன் தன்மையை எடுத்துக் கூறியும், எங்களுக்கு இதில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் போது சிகிச்சை எடுத்துக்கொள்வதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாராணி கூறுகிறார்.
"கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய தினம் சுகாதாரத்துறை சார்பாக அவர்களை சென்று சந்தித்தோம். இதையடுத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் பொது சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் சென்று சந்தித்து பேசினோம்.
தற்கொலை செய்வோம் என மிரட்டிய குடும்பத்தினர்
ஆனால் அந்த குடும்பத்தினர் பிடிவாதமாக இருந்தனர். இதனால் பெண்ணின் தாயாருக்குத் தகவல் கொடுத்து, பெற்றோரை அழைத்துவந்தோம். ஆனால், பெண்ணின் பெற்றோரும் எங்களுக்கு ஒத்துழைக்காமல், பெண்ணின் கணவர் குடும்பத்தினருக்கு ஆதவாக பேசி, எங்களை அந்த பெண்ணிற்கு மருத்துவம் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்," என்று கூறினார்.
மேலும் இதுபோன்று எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து நெருக்கடி ஏற்படுத்தினால், குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம் எனக் காவல் துறை முன்னிலையில் பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டியதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் கூறுகிறார்.
"பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் பூலாம்பாடி ஆம்பர சுகாதார நிலையம் மருத்துவரைத் தொடர் கொண்டு தனது மனைவிக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் தேவையான மருத்துவ வசதிகளுடன் 108 அம்புலன்ஸ் உடன் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்திருந்தது. குழந்தையின் உடம்பு வெளியேறவில்லை. மேலும் அந்த பெண்ணிற்குத் தேவையான சிகிச்சை அளித்தபடியே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அந்த மிகுந்த அதிர்ச்சியிலிருந்த காரணத்தினால், அவரை அதிலிருந்து மீட்டுக் கொண்டுவர சிகிச்சை அளித்தோம். அதே சூழலில், குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தோம். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த குழந்தையை வெளியே எடுத்தோம். ஆனால் குழந்தை உயிரிழந்து அழுகிய நிலையிலிருந்தது.
மேலும் தாய்க்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் தாயின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் உடனே உயர் சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே அவருக்குச் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்க முற்பட்டபோது அவரும் உடல் ஒத்துழைக்காமல் உயிரிழக்க நேரிட்டது," என பெரம்பலூர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாராணி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- WhatsApp பதற்றம்: "உங்க மெஸேஜ் எல்லாம் பத்திரமா இருக்கும்"
- செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்
- விவசாயிகள் போராட்டம்: "சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும்"
- விஜய் படத்துக்காக சிம்பு படத்தை முடக்குவதா? சீறும் டி. ராஜேந்தர்
- தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
- கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- சிகாகோவில் உலக நாடுகளை வியக்க வைத்த விவேகானந்தரின் உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: