You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்
அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, கியூரியாசிட்டி மார்ஸ் ரோவரின் முக்கிய சாதனை படங்களை வெளியிட்டிருக்கிறது.
இந்த மார்ஸ் ரோவர், கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தில் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி தரையிரங்கியதில் இருந்து இப்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த மார்ஸ் ரோவர், தன் 3,000ஆவது நாளை செவ்வாய்கிரகத்தின் பரப்பில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12ஆம் தேதி) கடக்கவிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்கள் ஆகும். இதை விஞ்ஞானிகள் "மேர்ஷியன் டே" அல்லது "சோல்" என்கிறார்கள்.
கடந்த ஜூன் 2018இல் இந்தப் படம் நாசாவுக்குக் கிடைத்தது. இந்த படம் கிடைத்த பிறகு நாசா நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இந்த படம், செவ்வாய் கிரகத்தில் ரோவர் துளையிடும் வேலையைத் தொடங்கியபோது எடுத்த படம். அக்டோபர் 2016-க்குப் பிறகு துலுத் (Duluth) தான் ரோவர் துளையிட்ட முதல் பாறை மாதிரிகள். இயந்திர கோளாறால் அந்த பணியை மேற்கொள்ள முடியாமல் போனது. ஜூன் 2018-ல் ஒரு புதிய வழியில் ஜேபிஎல் அணியினர் சோதனையை மேற்கொண்ட பிறகு, மீண்டும் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.
செவ்வாயிலிருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்?
செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் இரு முறை, செவ்வாய் கிரகத்தின் நிலவான ஃபோபோஸ், டெய்மோஸ் ஆகிய இரு நிலவுகளும், சூரியனுக்கும், செவ்வாய்கிரகத்துக்கும் இடையில் வந்து போகும். இதை கியூரியாசிட்டி ரோவர் படம் பிடித்திருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிரங்கி 2,359-வது நாளில் ஃபோபஸ் நிலவு, சூரியனைக் கடக்கும் காட்சியைப் படம் பிடித்திருக்கிறது. இது 35 நொடிகள் மட்டுமே நீடித்தது.
செவ்வாய் கிரகத்தில் ஜொலிக்கும் வானம்
Noctilucent என்றழைக்கப்படும், இரவு நேரத்தில் ஜொலிக்கும் வானம் செவ்வாய் கிரகத்தில் தோன்றியது. செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கிய 2,410-ம் நாள் இந்த படங்களை ரோவர் எடுத்தது. பொதுவாக இந்த ஒளி வீசும் வானம், அதிக உயரத்தில் தான் தோன்றும். சூரிய ஒளியால் இரவில் ஜொலிக்கிறது இந்த வானம்.
இந்த புகைப்படம் 180 கோடி பிக்ஸல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் படங்களிலேயே அதிக பிக்ஸலைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது தான். செவ்வாய் கிரகத்தில் க்ளென் டாரிடான் (Glen Torridon) என்கிற இடத்தில் இந்தப் பனோரமா படம் எடுக்கப்பட்டது. இப்படி ஒரு பனோரமா படத்தை உருவாக்க, நிறைய படங்கள் தேவை, பல நாட்களின் உழைப்பு தேவை. அடிக்கடி இப்படிப்பட்ட படங்களை எடுக்கும் வாய்ப்பு கிடைக்காது என்கிறது நாசா.
கடந்த 2020-ம் ஆண்டு கோடைக் காலத்தில், க்யூரியாசிட்டி ரோவரின் அறிவியல் அணி, மவுண்ட் ஷார்ப் என்கிற மலையின் உயரமான பகுதிகளை நோக்கி ரோவரைச் செலுத்தினார்கள். அங்கு சல்ஃபேட் தாது அதிகமாக இருக்கும் பாறைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. மவுன்ட் ஷார்ப்பில் உயரமான பகுதிகளுக்குச் செல்லச் செல்ல, குறைந்த வயது கொண்ட படிமப் பாறைகள் கண்டுபிடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ரோவர் தன் 2,696-ம் நாள், தன்னுடைய மிகவும் செங்குத்தான பயணத்தை நிறைவு செய்தது. அதன் பின் க்ரீன்ஹியூக் சரிவின் (Greenheugh Pediment) கீழ் வந்து கொண்டிருந்த போது, 2,729-ம் நாளில் மணற்கல் நிறைந்த பகுதியைப் படமெடுத்தது.
பல நிறத்தில் செவ்வாய்: செவ்வாய் கோள் ஒரு சிவப்பு நிற கோள் என்பதை அறிவோம். ஆனால் செவ்வாய் கிரகத்தைத் துளையிட்ட போது, பல்வேறு நிறங்கள் வெளிப்பட்டன. 29 முறை செவ்வாய் கிரகத்தை துளையிட்டபோது ochre-red என்றழைக்கப்படும் ஒரு வித சிவப்பு நிறம் முதல் ப்ளூ க்ரே வரை பல நிறங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
ரோவரை படமெடுத்த செவ்வாய் கண்காணிப்பு சுற்றுவட்டக் கலன்
செவ்வாய் கோளில் க்ளாஸ்கோ என்ற இடத்தில் இருந்த ரோவரை, மார்ஸ் ரெக்கானைசென்ஸ் ஆர்பிட்டரில் இருந்த ஹைரைஸ் (HiRISE) என்கிற கேமரா வழியாக படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஒவ்வொரு பிக்ஸலும் 25 சென்டிமீட்டர் கொண்டது. எனவே ரோவரை இந்த படத்தில் எளிதில் அடையாளம் காண முடிகிறது.
செவ்வாய் கோளில் தற்போது மழை இல்லை. எனவே அதன் பரப்பில் தூசு படிவது அதிகரிக்கிறது. சூரியனின் வெப்பத்தால் வலுபெறும் காற்று சுழல் காற்றாகிறது. ஐந்து மீட்டர் அகலமும், சுமாராக 50 மீட்டர் உயரமும் கொண்ட அந்த சுழல்காற்று காணொளியை மேலே பார்க்கலாம். பொதுவாக செவ்வாய் கிரகத்தில் சுழல் காற்றைக் காண முடியாது. இந்த காணொளியை 2,847-ம் நாள் பதிவு செய்தது ரோவர்.
கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ரசாயனம் மற்றும் கனிம பரப்பில் ஆய்வுக்காக மூன்று துளைகளையிட்ட போது 2,922ஆம் நாள் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டது.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
- கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- சிகாகோவில் உலக நாடுகளை வியக்க வைத்த விவேகானந்தரின் உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: