You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இல்லத்தரசிகள் வீட்டு வேலை செய்வதற்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் திட்டத்தை முன்வைத்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பெண் வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கவர்ச்சிகரமான திட்டங்களை அரசியல்வாதிகள் மேடையில் அறிவிப்பது தமிழகத்திற்கு புதிதல்ல. இருந்தபோதும், கடந்த டிசம்பர் மாதம் கமல் ஹாசன் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெண் வாக்காளர்களின் வாக்கை குறிவைப்பதாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசாரத்தின்போது தமிழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு ஏழு யோசனைகளை கமல் முன்வைத்தார். அதில் இல்லாதரசிகளின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்களின் உழைப்புக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கமல் ஹாசனின் கருத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் செயலாக இருக்கும் என்றார் சசி தரூர்.
கமலின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ''குடும்ப உறவுகளுக்கு பணிவிடை செய்வதற்கு, விலை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு சொந்தமானவர்களை, நாங்கள் தாயைப் போல கவனித்து கொள்வதற்கு, சம்பளம் தர வேண்டாம். எங்கள் மாளிகையில், நாங்கள் இல்லத்தரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை. அனைத்தையுமே வர்த்தகமாக பார்க்க வேண்டாம்,'' என விமர்சித்தார்.
இல்லத்தரசிகளுக்கு சம்பளம் பற்றி மேடையில் பேசியபோது, "பெண் சக்தி திட்டம், பல முறை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றுதான். ஆனால், அதைக் கிண்டலடிக்கும் போக்கு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் 'பெய்ஜிங் அறிவிப்பு' என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் 'பெண் சக்தி' என்கிற திட்டம்.இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம், சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்" என்றார் கமல்.
கமலின் கருத்து பெண்வாக்காளர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இல்லத்தரசி விஜயா கமல் ஹாசனுக்கு வாக்களிப்பது பற்றி யோசிப்பதாக கூறுகிறார். ''இல்லத்தரசிக்கு விடுமுறை கிடையாது. ஏன், பணியில் இருந்து எப்போதும் ஒய்வு கிடையாது. இதைவிட, பல வீடுகளில் அங்கீகாரம் இல்லை என்பதுதான் சிக்கலாக உள்ளது. பெண்கள் செய்யும் வேலையை பலர் மதிப்பதில்லை. கமல் இல்லத்தரசிக்கு ஊதியம் தரப்படும் என்று கூறுவது மிகவும் ஆறுதலாக உள்ளது. அரசியல்வாதிகள் எங்கள் ஓட்டை வாங்க பலவிதமாக பேசுவார்கள். ஆனால் கமல் எங்களுக்கு அங்கீகாரம் தருவது பற்றி பேசியிருக்கிறார். அவருக்கு ஓட்டு போடலாம் என யோசிக்கிறேன்,''என்கிறார் விஜயா.
இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது என்று கூறும் சபீதா பேகம், அது நடைமுறையில் சாத்தியம் ஆகுமா என்றும் கேள்வி எழுப்புகிறார். '
'பெண்கள் செய்யும் வேலைகளுக்கு அவர்கள் வீட்டில் மதிப்பு கொடுக்கவேண்டும் என பேசியிருக்கிறார் கமல். நல்ல யோசனைதான். ஆனால் அந்த ஊதியத்தை யார் தருவார்கள்? அரசாங்கம் கொடுப்பதாக இருந்தால் நல்லதுதான். இப்போதுவரை வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு ஊதியத்தை அரசாங்கம் நிர்ணயம் செய்யவில்லை. ஒருவேளை கமல் இல்லத்தரசிக்கு ஊதியம் தந்தால் எங்களை போன்றவர்களுக்கு மதிப்பு கிடைக்கும்,''என்கிறார் சபீதா.
கமல் ஹாசனின் கருத்து தேர்தல் நேரத்தில் சொல்லப்படும் பொய்யான வாக்குறுதி என்கிறார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கீதா. ''இல்லத்தரசிக்கு சம்பளம் கொடுப்போம் என்பது பொய் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் சம்பளம் வாங்கும் கூலி வேலை ஆட்கள் இல்லை. நாங்கள் செய்யும் வேலை என்பது எங்கள் குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கும் வேலை. இதற்கு சம்பளம் பெற்றால், நாங்கள் அவர்கள் மீது உண்மையான அன்பை செலுத்துவதாக இருக்காது,''என்கிறார் கீதா.
பிற செய்திகள்:
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது
- "அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, சமீபத்தில் தந்தையான இளைஞர்" - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்
- "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
- அட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: