You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல் கட்சியின் செயல்திட்டம்: "இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு ஊதியம்"
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி, கிராமப்புறங்களில் தொழில் நிறுவனங்கள், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் போன்றவற்றை நிறைவேற்றுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
"சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில், மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சிமுறை மற்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஏழு செயல் திட்டங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
1. கிராம பஞ்சாயத்து முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை காகிதங்களற்ற அலுவலகம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும். காகித கோப்புகள் தடை செய்யப்படும். இணைய வழியில் நேர்மையான, துரிதமான அரசு அமைவதற்கான வழிகள் செயல்படுத்தப்படும். அரசு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மக்களின் கைபேசியிலேயே கிடைக்க வகை செய்யப்படும்.
2. இணைய தொடர்பு அடிப்படை உரிமையாக அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும்.
3. கிராமங்களில் மனித ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களிலும் அலுவலகங்கள் அமைக்க தொழில் முனைவோரிடமும் தொழில் நிறுவனங்களிடமும் வலியுறுத்தப்படும்.
4. இல்லத்தரசிகளின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும்.
5. விவசாயத்தை "வருமானமும் நேர்மையும் லாபமும் உள்ள தொழில்" ஆக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு "பசுமைப் புரட்சி பிளஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.
6. சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக அமையும். சாத்தியமானவை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
7. வறுமைக்கோடு என்ற அளவீட்டிற்குப் பதிலாக செழுமைக்கோடு என்ற அளவீடு பயன்படுத்தப்படும். வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள மக்களை செழுமைக்கோட்டிற்கு கொண்டு வர திட்டங்கள் தீட்டப்படும்.
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம், செய்யாறு ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்றது. அங்குள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், பிறகு தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பிற செய்திகள்
- கொரோனா வைரஸின் புதிய வடிவம்: பிரிட்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள், பயணத் தடை விதிக்கும் நாடுகள்
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்