அரசியல் சிக்கலில் நேபாளம்: பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர் வித்யா பண்டாரி

நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கூடிய அமைச்சரவை நாடாளுமன்றத்தை கலைக்கப் பரிந்துரை செய்தது.

நேபாளத்தின் ஆளும் இடதுசாரி கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான விஷ்ணு ரிசால், "பிரதமர், நாடாளுமன்றத்தில், மத்திய கமிட்டியில், கட்சி செயலகத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார். தற்போதைய பிரச்னைக்கு தீர்வு காணாமல் அவர் நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்துள்ளார்," என்று தெரிவித்தார்.

பிரதமரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து 7 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேபி. ஷர்மா ஒலி.

இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா என்று அறியப்படும் புஷ்ப கமல் தஹால். இருப்பினும் கட்சிக்குள் அதிகார சண்டை மூண்டது.

இந்தியாவுடனான பிரச்சனையின் பின்புலம்

இந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான எல்லை பிரச்னையின்போது கட்சியின் மூத்த தலைவர்களான புஷ்ப் கமல் தஹல் மற்றும் ஜலநாத் கானல் ஆகியோர் பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதே சமயம், பிரதமர் கேபி. ஷர்மா ஒலி குடியரசுத் தலைவரிடம் அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கோரினார்.

குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின் கட்சியில் சர்ச்சை வெடித்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த அவசரச் சட்டத்தை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் கோரினர்.

உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட குடியரசுத் தலைவரை கோரினர். மேலும் கேபி. ஒலி பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதற்குப் பின் பிரதமர் மீது அழுத்தம் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோரிக்கையை திரும்ப பெறுவது என்றும் அதற்கு பதிலாக பிரதமர் அவசரச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இருப்பினும் இது ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல், பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கோரினார்.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

இருப்பினும் நேபாள நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அதன் அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை.

நேபாளத்தின் புதிய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 83-ன் படி நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்.

அரசமைப்பின் 76-வது பிரிவு, நாடாளுமன்றம் கலைக்கப்படும் சூழல் குறித்து கூறுகிறது. அதன்படி, அவையின் பெரும்பான்மையை பெறாத பிரதமர், ஒரு மாத காலத்திற்குள் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தை கலைக்க கோரலாம். மேலும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும் அறிவிக்கலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :