You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
WhatsApp பதற்றம்: "உங்க மெஸேஜ் எல்லாம் பத்திரமா இருக்கும்" - இதை நம்பலாமா?
வாட்சாப் செயலி தனது சேவையை தொடர கட்டாயமாக்கியிருக்கும் சமீபத்திய தனியுரிமை கொள்கை ஏற்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனால் தனி கணக்கு வைத்திருப்பவர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதிய தனியுரிமை கொள்கைகளை அறிமுகப்படுத்தியது வாட்சாப் செயலி. இந்த புதிய கொள்கைகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் பயனரால் ஏற்கப்படாவிட்டால் அதன் பிறகு அவர்களின் வாட்சாப் செயலி கணக்கு நீக்கப்பட்டு விடும் என வாட்சாப் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை கேள்விப்பட்டு பலரும் பல்வேறு மாற்று செயலிகளைத் தேடத் தொடங்கிவிட்டார்கள்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் ஈலான் மஸ்க், சிக்னல் செயலியைப் பயன்படுத்தலாம் என சமீபத்தில் கூறியது நினைகூரத்தக்கது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சை மற்றும் விவாதத்தை தோற்றுவித்த நிலையில், தற்போது வாட்சாப் நிறுவனமே அதன் புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறது.
வாட்சாப்பில் தனி நபர் குறுந்தகவல்கள், அழைப்புகள், கால் லாக்குகள், இருப்பிடம், தொடர்புகள் என எல்லாம் பத்திரமாக இருக்கும் என அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறது.
குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகள்: வாட்சாப் நிறுவனத்தாலோ ஃபேஸ்புக் நிறுவனத்தாலோ, உங்களின் தனி நபர் குறுஞ் செய்திகளையோ அழைப்புகளையோ பார்க்கவோ கேட்கவோ முடியாது. நீங்கள் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு இடையில் மட்டுமே இருக்கும். இதற்கு முழுமையாக என்க்ரிஃப்ட் செய்வது தான் காரணம். இந்த வசதியை நாங்கள் எப்போதும் பலவீனப்படுத்தமாட்டோம் என குறிப்பிட்டிருக்கிறது வாட்சாப்.
கால் லாக்: நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள் என்கிற லாக் விவரங்களை நாங்கள் சேமித்து வைத்துக் கொள்வதில்லை. 200 கோடி பயனாளர்களின் லாக் விவரங்களை சேமித்து வைப்பது என்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவை என்கிறது வாட்சாப்.
லொகேஷன்: நீங்கள் வாட்சாப்பில் பகிரும் லொகேஷன் என்க்ரிப்ஷன் ஆகிவிடும் எனவே அதையும் யாராலும் பார்க்க முடியாது. இதில் ஃபேஸ்புக்கும் அடக்கம். அந்த லொகேஷனை நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர் மட்டுமே பார்க்க முடியும்.
ஃபேஸ்புக்குடன் தொடர்புகளைப் பகிரமாட்டோம்: நீங்கள் உங்களின் தொடர்புகளை (Contact) அணுக அனுமதி கொடுத்திருப்பதைப் பயன்படுத்தி, வேகமாக வாட்சாப் செயல்பட உதவுமே ஒழிய, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உங்களின் தொடர்புகளைப் பகிரமாட்டோம்.
குறுஞ்செய்தி மறைவது: கூடுதல் தனியுரிமை பாதுகாப்புக்கு, உங்கள் குறுஞ்செய்திகள் எப்போது மறைய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்: வாட்சாப் செயலியில் இருந்து, உங்களைக் குறித்து நாங்கள் என்ன மாதிரியான தரவுகளை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை நீங்களே காணலாம் என தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளது வாட்சாப்.
வாட்சாப் தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தாலும், எந்த விளம்பரமோ சேவை கட்டணமோ பெறாமல் இலவசமாக தகவல் பரிமாற்ற சேவையை வாட்சாப் வழங்குவதும் அதற்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையிலான நிர்வாக தொடர்பும், தொடர்ந்து அதன் தனியுரிமை பாதுகாப்பு சேவை தொடர்பான சந்தேகங்களை பயனர்கள் மத்தியில் எழுப்பி வருகிறது.
தனி நபர்களின் வாட்சாப் கணக்குக்கு பாதிப்பு இருக்காது என்று கூறியுள்ள வாட்சாப் நிறுவனம், வாட்சாப் பிசினஸ் தொடர்புகளை பகிரும் வாய்ப்பை திறந்தே வைத்திருக்கிறது. அந்த வகையில் வாட்சாப் பிசினஸ் கணக்கு வைத்துள்ள தனி நபர் அல்லது நிறுவனத்தின் தொடர்புகள் பொதுவெளியில் பகிரப்படுமா என்பது குறித்து வாட்சாப் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
பிற செய்திகள்:
- செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்
- விவசாயிகள் போராட்டம்: "சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும்"
- விஜய் படத்துக்காக சிம்பு படத்தை முடக்குவதா? சீறும் டி. ராஜேந்தர்
- தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
- கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- சிகாகோவில் உலக நாடுகளை வியக்க வைத்த விவேகானந்தரின் உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: