நடிகை ஜோதிகா பிறந்தநாள்: '43 வயதில் என் பிள்ளைகளுக்கு ஹீரோ ஆனேன்'- ஜோதிகா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழ்

'வாலி', 'குஷி', 'தூள்' என சினிமா பயணத்தின் முதல் பாதியில் கமர்ஷியல் படங்களின் முன்னணி கதாநாயகியாக அறியப்பட்டவர் நடிகை ஜோதிகா. ஆனால், தனது இரண்டாம் பாதியில் கதாநாயகர்களுக்கு இணையாக கதை தேர்விலும், கதாபாத்திரங்களிலும் முன்னணியில் இருக்கிறார்.

ஜோதிகாவின் 44ஆம் பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

  • தமிழில் 1999-ல் வெளி வந்த 'வாலி' படம்தான் ஜோதிகாவின் முதல் அறிமுகம். முதல் படத்திலேதே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ஜோதிகா.
  • மிகை நடிப்பு என பல விமர்சனங்கள் அவரது நடிப்பின் மீது சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் அவர் துறுதுறு முகத்திற்கும் நடிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 'குஷி', 'டும் டும் டும்', 'தூள்', 'திருமலை', 'மொழி', 'சந்திரமுகி', 'வேட்டையாடு விளையாடு' என ஏராளமான வெற்றி படங்களின் நாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா.
  • 'சந்திரமுகி' திரைப்படம் ஜோதிகாவின் சினிமா பயணத்தில் நிச்சயம் மறக்க முடியாத ஒன்று. முதலில் அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு நடிக்க தேர்வானவர் நடிகை சிம்ரன். 'சந்திரமுகி' கதாபாத்திரத்தின் நளினத்திற்காகவும், பரத நாட்டியம் ஆடத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த படத்தின் இயக்குநர் வாசு, சிம்ரனை தேர்வு செய்தார். ஆனால், சில காரணங்களால் சிம்ரனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின்பு ஜோதிகா உள்ளே வந்தார். நடனம், நளினம் என 'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் ஜோதிகா பொருந்துவாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், இதற்காகவே பரதநாட்டியம் கற்று, சரியான நடிப்பை கொடுத்து அந்த பாத்திரத்தை சிறப்பாக செய்தார் என ஒரு பேட்டியில் குறிப்பிடிருந்தார் இயக்குநர் வாசு.
  • சூர்யாவுடன் ஜோதிகாவுக்கு 2006இல் காதல் திருமணம் நடந்தது. 27 வயதில் திருமணம் செய்து கொண்டவர், அதன் பிறகு குழந்தை, திருமண வாழ்க்கை என பிஸியாக இருந்தவர் கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் '36 வயதினிலே' படம் மூலமாக நடிக்க வந்தார்.
  • தன்னுடைய செகண்ட் இன்னிங்க்சில் மிகை நடிப்பு, தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி என்ற பிம்பங்களை எல்லாம் கதை தேர்வு மூலம் தகர்த்தார். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ராட்சசி', 'பொன்மகள் வந்தாள்', 'உடன் பிறப்பே' என கதாநாயகிகளை முன்னிறுத்தும் கதையுள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. ரசிகர்கள் மத்தியிலும் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
  • குழந்தைகளை மீதான பாலியல் வன்முறையை பேசிய படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த கதையில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த போது, 'இது போன்ற சமூக அக்கறையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம், 43 வயதில் என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஒரு ஹீரோவாக உணர்கிறேன்,' என்றார்.
  • சமீபத்தில், சென்னை ராயபுரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தில் குழந்தை தாயிடம் எதையும் மறைக்க கூடாது என்ற காட்சியை பார்த்தே இந்த பாலியல் தொல்லை விவகாரத்தை சிறுமி பெற்றோரிடம் கூறி, பின்பு காவல்துறையில் புகாரளித்து தக்க தண்டனை கிடைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த செய்தியை நெகிழ்ச்சியாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகொர்ந்திருந்தார் ஜோதிகா.
  • மும்பையில் வளர்ந்த பஞ்சாபி பொண்ணு ஜோதிகா தன்னுடைய குடும்பத்துடன் எப்படி ஒன்றிணைவார் என்பது போன்ற குழப்பங்கள் தனக்கு ஆரம்பத்தில் இருந்ததாகவும் ஆனால் திருமணத்திற்கு பின்பு அந்த எண்ணத்தை தலைகீழாக மாற்றியமைத்து தன்னை விட தன் குடும்பத்தின் செல்லப்பிள்ளை இப்போது ஜோதிகாதான் என்பார் சூர்யா.
  • சமீபத்தில் வெளியான 'உடன் பிறப்பே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு கொரோனா சமயத்திற்கு முன்பு தஞ்சையில் நடைபெற்றது. அப்போது அங்கு பெரிய கோவிலை சென்று பார்த்தவர் அங்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை சரியாக பராமரிப்பின்றி இருந்ததை பார்த்து, கோவிலுக்கு செலவு செய்வதை விட மக்கள் நலன் காக்கும் மருத்துவமனைக்கு செலவு செய்வதுதான் முக்கியம் என தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் மேடையில் ஜோதிகா பேசினார். அரசியல் வட்டாரத்தில் பிஜேபி உள்ளிட்ட சில கட்சிகள் ஜோதிகாவின் மதத்தை முன்னிறுத்தி இந்த பேச்சை சர்ச்சைக்குள்ளாக்க இறுதி வரை தனது பேச்சில் இருந்து பின்வாங்கவோ மன்னிப்போ கேட்கவில்லை ஜோதிகா என்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
  • 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உயிரிலே கலந்தது' உள்ளிட்ட சில படங்கள் நடித்திருந்தாலும் சூர்யா- ஜோதிகாவிடையே காதல் மலர்ந்தது 'காக்க காக்க' பட சமயத்தில்தான்.
  • தியா, தேவ் என இரண்டு குழந்தைகள். இருவரது பெயரிலும் ஜோதிகா, சூர்யா இருவரும் இணைந்து 2D எண்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர்.
  • தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில்தான் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் அதிக படங்கள் நடித்து வருகிறார் ஜோதிகா. சொந்த தயாரிப்பு நிறுவனம் என்றாலும் படத்தில் நடித்ததற்கு சரியா சம்பளம் வந்துவிடும் என்பார் சிரித்து கொண்டே.
  • சமூக வலைதளங்கள் எதிலும் கணக்கு வைத்திருக்காதவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கி இருக்கிறார். அதில் முதல் பதிவாக நீண்ட நாட்கள் இமாலய பயணம் செய்ய வேண்டும் என்ற தனது சிறுவயது ஆசை திருமணத்திற்கு பின்புதான் நிறைவேறியது என மகிழ்ச்சியாக அந்த புகைப்படத்தையும் வீடியோவையும் பதிவு செய்திருந்தார் ஜோதிகா.
  • நடிகர் சிவக்குமார் போலவே இடது கை பழக்கம் கொண்டவர் ஜோதிகா. மேலும் திறமையாக ஓவியமும் வரையக்கூடியவர். தனது ஓவியங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :