You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
கேரளாவில் கடும் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் மழை பொழிவு இருக்கும் என்பதற்காக ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இது தவிர 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் என்ற இடத்தில் சாலையில் ஓடும் வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருக்கும் பேருந்தில் இருந்து உயிர் பயத்தோடு பயணிகள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தப்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆறுகள், மலைகள் அருகே செல்லவேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்றும் கேரள முதல்வர் அலுவலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலையால் இந்த மழை பெய்கிறது என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரள மாநில அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து மீட்புப் பணிக்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளது.
கஞ்சிரப்பள்ளி, கோட்டயம் பகுதிகளை நோக்கி இந்திய ராணுவத்தினர் செல்வதாகவும், பாங்கோடு ராணுவ நிலையம் உடனடியாக ஒரு காலம் ராணுவத்தினரை இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் திருவனந்தபுரம் ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலம் என்பதில் 30 படையினர், 1 அதிகாரி, 2 இளம் கட்டளை அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறுகள் எல்லாம் நிரம்பியும், சில இடங்களில் கரை கடந்தும் ஓடுகின்றன. தாழ்வான பகுதிகளில் ஆற்றுவெள்ளம் புகுந்துள்ளதாகவும் சில ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த மழை வெள்ளத்தில் குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன் சிந்தனை முழுவதும் கேரள மக்களோடு இருப்பதாகவும், பாதுகாப்பாக இருக்கும்படியும், எல்லா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையையும் பின்பற்றும்படியும் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
சபரிமலை பயணம் செல்லும் பக்தர்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வண்டிப் பெரியாறு என்ற இடத்தில் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதைக் காட்டும் காணொளி ஒன்றை டிவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் குளிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிரபள்ளி அருவியில் மிகமோசமான வெள்ளம் பாய்ந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோட்டயம் பிளாபள்ளி என்ற இடத்தில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதைப்போல இடுக்கி மாவட்டத்தில் புள்ளப்பாறா என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இடுக்கி அணைக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதைப் போலவே, திங்கள்கிழமை வரை கடும் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்தின் தீவிரம், 2018 கேரள வெள்ளத்தை நினைவுபடுத்துவதாக பலரும் சமூக ஊடகங்களில் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- அனிருத் பிறந்தநாள்: வெற்றி முதல் சர்ச்சைகள் வரை - சுவாரஸ்ய தகவல்கள்
- உலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா
- உணவு விலையேற்றத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டுமா?
- IPL 2021: சொன்னதை செய்த தோனி; 40 வயதிலும் கோப்பையை வசமாக்கிய கேப்டன் கூல்
- சிரிய பெண்ணுக்கு உலகின் சிறந்த மேயர் விருது - என்ன செய்தார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்